Search
  • Follow NativePlanet
Share
» »காணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி

காணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி

By Udhaya

இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களை புரட்டும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நாம் காண நேரிடும். நவீன யுகத்தில் பல விஷயங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பு வரை உலகின் மிக உன்னதமான நாடாக இந்தியா திகழ்ந்திருக்கிறது. அறிவியல், கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம் போன்ற விஷயங்களில் உலகுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறது. அறிவுசார் விஷயங்களில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல் ரோம், கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் கப்பல் வழி வாணிபமும் மேற்கொண்டு செல்வசெழிப்பு மிக்க இடமாகவும் இந்தியா இருந்திருக்கிறது. அப்படி இந்திய வரலாற்றில் மிகச்சிறந்ததொரு நகரமாக இருந்து இன்று அழிந்த நிலையில் இருக்கும் ஒரு நகரப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சிதிலமடைந்த வரலாறு

ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை கற்களில் எழுதப்பட்டுள்ள கவிதை எனலாம்.

தொன்மை

ஹம்பி - சில குறிப்புகள் ஹம்பி தொன்மை வாய்ந்த நகரமாக விளங்கி புராண காலத்திலேயே ராமாயண காவியத்தில் கிஷ்கிந்தா என்று குறிப்பிடப் பட்டிருக்கும் நகரமாக இருந்த போதிலும் 13ம் நூற்றாண்டு மற்றும் 14 ம் நூற்றாண்டுகளில் இது விஜய நகர அரசர்களின் தலைநகரமாக சிறந்து விளங்கியது. கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பியை சில மணி நேர பயணத்தில் அடைந்திடலாம்.

வாடகை சைக்கிள்

யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்தலம் வருடம் தோறும் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கின்றது. ஹம்பி இடுபாடுகளின் உன்னதத்தை முழுக்க ரசிக்க விரும்பினால் ஒரு வாடகை சைக்கிளில் ஓய்வாக ஹம்பியை சுற்றி வந்து பார்த்து ரசிக்கலாம். அதற்கு வசதியாக சைக்கிள்களும் மொபெட்களும் வாடகைக்கு கிடைக்கின்றன.

போதும் போதும்

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் அனுபவத்தினை விரும்புகின்றனர். போதும் போதும் எனும் அளவுக்கு நம் கண்களுக்கு திகட்டாத ஒரு விருந்தை ஹம்பியின் வரலாற்று இடிபாடுகள் அளிக்கின்றன. ஏன் சுற்றுலா பயணிகள் ஹம்பியில் குவிகின்றனர் தெரியுமா? ஹம்பியிலுள்ள வரலாற்று இடிபாடுகளின் கட்டிடக்கலை அம்சங்களுக்காக மட்டுமின்றி அதன் ஆன்மீக வரலாற்று பின்னணிக்காகவும் ஹம்பி புகழ் பெற்று விளங்குகிறது.

விருபாக்‌ஷா ஆலயம்

ஹம்பியில் பல பிரசித்தி பெற்ற கோயில்களும் உள்ளன. விருபாக்‌ஷா ஆலயம் விட்டலா ஆலயம் மற்றும் ஆஞ்சனேயத்ரி போன்ற கோயில்கள் இங்கு உள்ளன. கர்நாடகாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான துங்கபத்திரா இந்த நகரின் வழியே ஓடுகிறது. இடிபாடுகளும் அதன் பின்னணியில் துங்கபத்திரை ஆற்றின் அழகும் சேர்ந்து இந்த பிரதேசத்தின் இயற்கை எழில் நம்மை பிரமிக்க வைக்கிறது.

சிற்ப வேலைப்பாடு

இந்த பிரதேசத்தை சுற்றிலும் காணப்படும் மலைகளிலிருந்தே விஜயநகர மன்னர்கள் தாங்கள் எழுப்பியுள்ள கோயில்களின் சிற்ப வேலைப்பாடு கொண்ட கல் தூண்களுக்கான பாறைகளை பெற்றுள்ளனர் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. இங்குள்ள நந்தி சிலையின் பின்னால் காணப்படும் பிரம்மாண்ட பாறைகளுக்கும் பாறையினால் ஆன அந்த சிலைக்கும் உள்ள தொடர்பை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

தடாகங்கள்

இயற்கை அழகு மற்றும் கோயில்கள் மட்டும் அல்லாமல் ஹம்பியில் அழகாக கட்டப்பட்டுள்ள பல தடாகங்களும் சமுதாய கட்டிடங்களும் அன்றைய விஜயநகர அரசின் ஆட்சி மேன்மைக்கும் நகர மேலாண்மை அறிவுக்கும் சான்றாய் விளங்குகின்றன. இங்கு காணப்படும் நிலத்தடி தண்ணீர் பாதைகளும் மற்றும் கால்வாய்களும் 13ம் மற்றும் 15ம் நூற்றாண்டு காலத்திலேயே எந்த அளவுக்கு நம் மக்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கான சாட்சியமாய் விளங்குகின்றன.

500 க்கு மேற்பட்ட இடங்கள்

ஹம்பியில் 500 க்கு மேற்பட்ட இடங்கள் நாம் பார்த்து ரசிப்பதற்கு உள்ளன. இவற்றில் 100 இடங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளை வருடம் தோறும் ஈர்க்கும் அளவுக்கு மிகுந்த பிரசித்தி பெற்றவை ஆகும். விட்டலா ஆலயத்தில் உள்ள கல் தேர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பாறைச்சிற்ப வேலைப்பாட்டிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கல் தேர் சிற்பமே கர்நாடக மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை சின்னமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திர கலைப்பொருட்கள்

இன்றும் ஹம்பி ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் பல விதமான சரித்திர கலைப்பொருட்கள் தொடர்ந்து கிடைத்தவாறே உள்ளன என்பது ஒரு வியப்பான விஷயம். இப்படி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தொல்பொருள் அருங்காட்சியகமும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாகும்.

எதிரிகள்

ஒரு புறத்தில் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பகுதிகளிலும் மலைகளாலும் சூழப்பட்டு இயற்கையான அரணுடன் விளங்கிய இந்த ஹம்பி அல்லது விஜயநகரத்தினை அப்போதைய மன்னர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே விவேகத்துடன் தங்கள் தலைநகராக கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. எப்படியும் எதிரிகளுக்கு விஜயநகரை தாக்குவது என்பது சற்று சிரமமான ஒன்றாகத்தான் இருந்திருக்க முடியும்.

ஹொய்சள வம்ச கட்டிடக்கலை

அப்படிப்பட்ட அந்த விஜய நகரம் இன்று சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை வனப்பையும் தொல்லியல் வளத்தையும் கண்களுக்கு விருந்தாக அளிக்கின்றது. ஹொய்சள வம்ச கட்டிடக்கலையின் சிகரமாக விளங்கும் இந்த ஸ்தலம் தென்னிந்தியாவுக்கு வருகை தரும் எந்த ஒரு சுற்றுலா பயணியும் தவற விடக்கூடாத ஒன்று என்றால் அது மிகையில்லை.

அந்தப்புர வளாகம்

ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாக ஸ்தலம் விளங்குகிறது. அழகாக வெட்டப்பட்ட கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட உயரமான பாதுகாப்பு சுவரை கொண்டுள்ளது இந்த அரண்மனை அந்தப்புர வளாகம்.

ராணி மாளிகை

தற்சமயம் இந்த அந்தப்புர வளாகத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராணி மாளிகை, கமலா மஹால் மற்றும் இரண்டு காவல் கோபுர அமைப்புகளே அவை. இவற்றில் தாமரை மஹால் ராணியும் தோழிகளும் வசதியாக ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பெண்கள் மட்டுமே

இங்குள்ள ராணி மாளிகை 46X29 மீட்டர்கள் என்ற அளவில் மரக் கட்டுமான பொருட்களாலும் லேசான பொருட்களை பயன்படுத்தியும் கட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி அக்காலத்தில் பெண்கள் மட்டுமே இந்த அரண்மனை அந்தப்புர வளாகத்தில் நுழைவதற்கு அனுமதி இருந்தது.

இதற்கு பிரதான காரணம் பாதுகாப்பை விடவும் அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த ராணிகளுக்கும் மற்ற பெண்களுக்கும் அவர்களின் கௌரவத்திற்கேற்ற தனிமை கிடைக்க வேண்டும் என்பதே.

யானைக் கொட்டில்

யானைக் கொட்டில்

அந்தப்புரத்தை காவல் காப்பதற்கென்று திருமங்கையர் மட்டுமே காவலாளிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ராணிகளும், ராஜ குடும்ப பெண்களும் மற்ற அந்தப்புர மகளிரும் இந்த இரண்டு காவல் கோபுரங்களையும் வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், தாமரை மஹாலை கூடி சந்தித்து பேசி மகிழ்வதற்கு பயன்படுத்தினர் என்று கூறப்படுகிறது.

இந்த அந்தப்புர வளாகத்திற்கு வருகை தரும் பயணிகள் அருகில் உள்ள யானைக் கொட்டில் என்று சொல்லப்படும் யானை மண்டபத்தையும் சென்று பார்க்கலாம்.

abhishek_jadhav07

ஒரே கல்லால்

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த யெதுரு பசவண்ணா எனும் நந்தி சிலை ஹம்பி பஜாரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி சிவ பெருமானின் வாகனமான நந்திக்கு எழுப்பப் பட்ட சிலை என்பதால் உள்ளூர் மொழியில் யெதுரு பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. சற்றே சிதிலமடைந்து காணப்படும் இந்த நந்தி சிலை மற்ற புராதன சின்னங்களின் அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை.

இரண்டு அடுக்கு

இருந்தாலும் இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு பீட அமைப்பின் மீது இந்த நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புலத்தில் காணப்படும் பிரம்மாண்டமான பாறைகள் இந்த சிலைக்கு மேலும் அழகூட்டுகின்றன. எதிரிலுள்ள விருபாக்ஷ ஆலயத்தை நோக்கி இருக்குமாறு இந்த நந்தி சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைக்கருகில் இரும்பு ஈட்டிகளுடன் கூடிய ஒரு விளக்கு தூண் ஒன்றும் உள்ளது.

புனித ஆறு

கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை பாயும் துங்கபத்திரா ஆறு இந்திய தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான புனித ஆறாக கருதப்படுகிறது. ஹம்பி நகரம் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது.

பெரிய அணை

ஹம்பியிலிருந்து தென்மேற்கு திசையில் 20 கி.மீ தூரத்தில் இந்த ஆற்றின் மீது பெரிய அணை ஒன்றும் நீர் மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ளது. சரித்திர காலத்தில் விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் பல நீர்வழிகள், கால்வாய்கள் மூலம் இந்த ஆற்றை பயன்படுத்தி கொண்டனர். சாதுரியமாக திட்டமிட்ட நீர் வழிகள் மூலம் அவர்கள் துங்கபத்திரை ஆற்று நீரை அரண்மனை நீர்த்தேவை முழுவதையும் பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களுக்கு எடுத்து சென்றனர்.

அஞ்சநாத்ரி மலை

வானரக் கடவுளான ஹனுமானுக்கென்று இங்கு ஒரு அழகான கோயில் உள்ளது. இந்த கோயில் அஞ்சநாத்ரி மலையின் உச்சியில் உள்ளது. 570 படிகளை ஏறித்தான் மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த படிகளில் ஏறிச்செல்லும் போது ஏராளமான குரங்குகளை வழியில் பார்க்க முடிகிறது. நாம் அவற்றுக்கு தொல்லை தராதபோது அவை நம்மை தொல்லைப் படுத்துவதில்லை.

தாமரை மாளிகை

ஜெனனா என்று அழைக்கப்படும் அரண்மனை அந்தப்புர வளாகத்தின் உள்ளே அதன் ஒரு அங்கமாக இந்த தாமரை மாளிகை அமைந்துள்ளது. இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வெளிப்புற கூரைஅமைப்பும் இதன் ஒட்டு மொத்த வடிவமும் சேர்ந்து ஒரு தாமரை மலர் இதழ் விரித்திருப்பதை போன்று காணப்படுவதால் இதனை கமலா மாளிகை அல்லது தாமரை மாளிகை என்று அழைக்கின்றனர்.

சித்ராகனி மஹால்

சித்ராகனி மஹால் என்ற இன்னொரு பெயரும் இதற்கு உள்ளது. இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த மாளிகை மாடங்களுடன் கூடிய விதானக் கூரை அமைப்புடன் காணப்படுகிறது. அரண்மனை அந்தப்புரத்தில் வசித்த ராணிகள் ஒன்று கூடவும் மற்ற தோழிகளுடன் கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும் இந்த மாளிகை பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பெருமை

பல போர்கள், முற்றுகைகளுக்கு பின்பும் இந்த மாளிகை சேதமடையாமல் நிற்பது ஒன்றே இதன் பெருமைக்கு சான்றாகும். இருப்பினும் தற்காலத்தில் சில விஷமிகளால் இந்த மாளிகையின் வெளிப்புற சிற்பங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதையும் காண முடிகிறது. கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் ஹம்பியிலுள்ள மற்ற கட்டிடங்களின் பாணிக்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்த தாமரை மாளிகை சுண்ணாம்பு, செங்கல் மற்றும் சாந்து (சுண்ணாம்பு) போன்றவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

அந்தப்புர வளாகம்

ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாக ஸ்தலம் விளங்குகிறது. அழகாக வெட்டப்பட்ட கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட உயரமான பாதுகாப்பு சுவரை கொண்டுள்ளது இந்த அரண்மனை அந்தப்புர வளாகம். தற்சமயம் இந்த அந்தப்புர வளாகத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராணி மாளிகை, கமலா மஹால் மற்றும் இரண்டு காவல் கோபுர அமைப்புகளே அவை. இவற்றில் தாமரை மஹால் ராணியும் தோழிகளும் வசதியாக ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சசிவேகலு கணேசா

சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் ஹேமகுடா மலையடிவாரத்தில் அமைந்துள்ள சசிவேகலு கணேசா கோயிலாகும். இக்கோயிலில் 8 அடி உயரமுள்ள கணேசக்கடவுளின் சிலை உள்ளது. இந்த வினாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more