» »தமிழில் பயண, ரோட் சினிமாக்கள்!

தமிழில் பயண, ரோட் சினிமாக்கள்!

Written By: Staff

தமிழில் பயணம், சாகச வகை சினிமாக்கள் குறைவுதான். பெரும்பாலான படங்கள் ட்ராமா வகை ஜானர்கள்தான். சமீபகாலமாகத்தான் தமிழ் சினிமா புதுப்புது ஜானர்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. (இருந்தாலும், இன்னும் பேய் படங்களை எடுப்பதை நிறுத்த‌ மாட்டேன் என்கிறார்கள்) அவ்வப்போது சில ரோட் வகை, சாகச வகை படங்கள், பயணத்தை முக்கிய களமாக வைத்து வந்திருக்கிறது. அவை என்னென்ன :

Udhayam

Poster Courtesy : Wikipedia

உதயம்

தமிழின் சிறந்த ரோட் வகை படம் என்றால் இந்த ஒரு படம்தான் சொல்லத் தோன்றுகிறது. சத்தமேயில்லாமல் வந்து ஹிட்டடித்த படம்.

இந்தப் படம்தான் வெற்றிமாறனுக்கு முதல் படமாக அமைந்திருக்க வேண்டியது; தனுஷ்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் பொல்லாதவன் முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம்; ஆனால் பல்வேறு சிக்கல்களால் கைவிடப்பட்டது.

கடைசியில் வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் மணிமாறன் இந்தப் படத்தை எடுத்து முடித்தார். சமீபத்தில் வந்த தமிழ்ப் படங்களில், செம சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படங்களில் உதயம் படத்திற்கு ஒரு முக்கிய இடமுண்டு.

இன்னொரு சுவாரஸ்யம் ராஷோமேன், விருமாண்டி பாணியில் அமைக்கப்பட்ட திரைக்கதை. ஃப்ளாஷ்பேக்கை வில்லன் மூலமாக, கதா நாயகி மூலமாக விரிவது ஒரு நல்ல திரைக்கதை யுத்தி.

பெங்களூரில் நீங்கள் சில காலம் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒன்று புரியும். அது பெங்களூரில் பேசப்படும் தமிழ். நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் போன்று பெங்களூர்த் தமிழ் ஒன்றும் இருக்கிறது. இதை எந்த தமிழ்ப் படமும், உதயம் படத்தை போல் யதார்த்தமாக காட்டியதில்லை. காரணம் : அசல் பெங்களூர் வாசிகளையே படத்தில் பயன்படுத்தியது ஒரு சிறப்பம்சம்.

கடைசியாக சித்தார்த், கே.கே ஆகியோரின் அட்டகாசமான நடிப்பு.

ஒரு வேளை இந்தப் படத்தை நீங்கள் பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் இந்தப் படத்தின் திரைக்கதைக்காகவே பாருங்கள்!!

எங்கேயும் எப்போதும்

இந்தப் படத்தை ரோட் வகை ஜானர் என்று சொல்ல முடியாது. பயணம் சம்பந்தப்பட்ட சினிமா என்று சொல்லலாம்.

சரவணன் இயக்கி வெற்றி பெற்ற படம். படத்தின் முக்கிய கதா பாத்திரங்கள், திருச்சியிலிருந்து விழுப்புரம் பக்கத்தில் இருக்கும் ஒரூ ஊருக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் போகின்றனர். பயணித்தின்போது, தங்களின் கடந்த கால காதல் வாழ்க்கையை நமக்கு காட்டும் பாடம்.

படத்தின் பலங்கள் : சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், திரைக்கதை.

ஹிட்ச்காக் சொல்வார், படத்தின் சஸ்பென்ஸை மக்களுக்கு காட்டி விட வேண்டும்; ஆனால், படத்தின் கதாபாத்திரங்களுக்கு அது தெரியக்கூடாது. இதனால் படம் பார்ப்போர், அந்த கதாபாத்திரங்களுக்கு நேரப்போகும் முடிவை நினைத்து பதறிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையுத்தி.

சுஜாதாகூட இது போல உத்தியை தன் சிறுகதைகளில் பயன்படுத்திருக்கிறார். விருப்பமிருந்தால் இந்த ஒரே ஒரு மாலை சிறுகதையை வாசித்துப் பாருங்கள்.

Paiyaa

Poster Courtesy : Wikipedia

பையா

இது ஒரு ரோட் வகைப் படம்.

நாயகனும் நாயகியும் பெங்களூரிலிருந்து மும்பைக்கு காரில் செல்கின்றனர். படம் முழுக்க சென்று கொண்டே இருக்கின்றனர். கடைசியாக அவர்கள் மும்பை போன பிற்பாடு நல்ல வேளை படம் முடிந்துவிடுகின்றது. திரும்பி பெங்களூர் வருவதை இரண்டாவது பாகமாக எடுக்க கூடாது என்று ஆண்டவனை பிரார்த்திப்போம்.

லிங்குசாமி எடுத்ததிலேயே சுமாரான படம். கதை பெரிதாக கிடையாது; திரைக்கதையும் அப்படியே. இருந்தும் படம் நன்றாக ஓடியது. காரணம் : யுவனின் பாடல்கள். பட்டி தொட்டியெங்கும் அடடா மழைடா அட மழைடா, துளி துளி துளி மழையாய் வந்தாளே பாடல்கள் 2010 ஆண்டு முழுதும் ஒலித்தது.

ஆயிரத்தில் ஒருவன்

Aoruvan

Poster Courtesy : Wikipedia

தமிழில் adventure வகை சினிமாக்களில் ஒரு மிக முக்கிய முயற்சி; இதற்காக செல்வராகவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படம் வந்தபோது பல தரப்பட்ட விமர்சனங்கள் வந்தது. இருந்தும், இன்றும், இந்தப் படத்திற்கென்று பிரத்யேக ரசிகர் கூட்டம் இருக்கிறது. வெறும் சாகச வகையையும் தாண்டி Fantasy'யையும் கலந்து, நாம் இது வரை பார்த்திராத இடத்திற்கு அழைத்துச் சென்றார் இயக்குனர்.படம் இரண்டாவது பாதியில் திணற ஆரம்பித்து மக்களையும் தியேட்டரில் நெளிய வைத்தது குறிப்பிடத்தக்கது.
யுவனின் இசை இல்லாதது பலரின் குறையாக இருந்தது.