Search
  • Follow NativePlanet
Share
» »மயக்கும் சந்திரத்தால் பரலாச்சாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

மயக்கும் சந்திரத்தால் பரலாச்சாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

மயக்கும் சந்திரத்தால் பரலாச்சாவைப் பற்றி கேளிவிப்பட்டிருக்கீங்களா? அதுக்கு எப்படி போலாம்னு ஒரு அருமையான பார்வை!!

By Balakarthik Balasubramanian

அழகினைச் சுற்றிக்காணப்படும் ஆபத்து என்ன தான் ஒரு அதிர்ச்சியினை நமக்கு ஏற்படுத்தினாலும், அந்த அழகை ஒருமுறையாவதுக் காணவேண்டும் என்று தான் மனம் ஏங்குகிறது. ஆம், ஸ்பித்தி பள்ளத்தாக்கில் உள்ள சந்திரத்தால் (அ) நிலவு ஏரியினைப் பார்க்கும் பொழுதும் நமக்கு அப்படி தான் தோன்றுகிறது. அப்படி என்ன தான் அழகிய ஆபத்தினைப் பற்றி இவன் கூறுகிறான் என யோசிக்கிறீர்களா! வாங்கப் பார்க்கலாம்.

11000 கட்டிடக்கலைஞர்கள் சேர்ந்து கட்டிய பிரம்மாண்ட கோயில் எங்கிருக்கு தெரியுமா?11000 கட்டிடக்கலைஞர்கள் சேர்ந்து கட்டிய பிரம்மாண்ட கோயில் எங்கிருக்கு தெரியுமா?

நீங்கள் எப்பொழுதாவது மலையின் மேல் ஏறி நின்று அதன் அழகை ரசித்து பின் அபாயமெனக் கருதி உங்கள் மனம் படபடத்து வேகமாக இறங்கியது உண்டா? இல்லை எனில், பனிமூடியப் பயணத்தின் வாயிலாக அவற்றினைக் கண்டுப் பயந்து இன்பத்தில் அலறியது உண்டா? நானும் உங்களைப்போல் தான், இயற்கை அன்னையைச் சென்றுச் சந்தித்து, அவள் மடியில் படுத்து, குளிர்ந்தக் காற்றினைச் சுவாசித்து உருக நினைத்தேன். அதேபோல் வானில் செல்லும் அழகிய மேகங்களை என்றாவது ஒரு நாள் தொட நீங்கள் ஆசைப்பட்டது உண்டா? அட நானும் தான்! உங்களைப்போல் மேகத்தினை என் மெல்லியக் கைகளால் தொட்டுப்பிடித்து விளையாட ஆசைக் கொண்டேன்!

எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்

நீங்கள் என்றாவது ஒரு நாள், வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்துக்கொண்டு வானில் மின்னும் நட்சத்திரங்களைக் கண்களால் கண்ட படி அயர்ந்துத் தூங்க ஆசைக்கொண்டதுண்டா? என்ன நீங்கள்! என்னைப்போலவே சிந்திக்கிறீர்கள். எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இருங்கள் என் கைகளை ஒருமுறைக் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். அடடா! என்ன இது! எனக்கு வலிக்கிறது! அப்படி என்றால் இது நிஜம் தானா. நானும் உங்களைப் போல் தான், ஆறுகளின் சலன ஒலி என் காதுகளில் கேட்க, வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை ரசித்துக்கொண்டுத் தூங்க எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. சரி உங்களிடம் கடைசியாக ஒரு கேள்வி, என்றாவது ஒரு நாள் மலைமேல் உச்சியில் ஏறி அந்த மலைத்தொடர்கள் உங்களை பின் தொடர, முன் நின்று ஒரு செல்பி புகைப்படம் எடுக்க நினைத்ததுண்டா! இல்லை நீங்கள் பொய் சொல்வதுப் போன்று எனக்குத் தோன்றினாலும், நான் நம்புகிறேன். இயற்கை அன்னையின் மடியில் நாம் அனைவரும் தவள விரும்புவது எல்லோருக்குள்ளும் ஏற்படும் ஒரு உணர்வு தான் அல்லவா. நானும் உங்களைப்போல் தான். வாருங்கள் செல்லலாம்!

அழகிய ரகசியங்கள்

அழகிய ரகசியங்கள்

இப்பொழுதுப் புரிகிறதா உங்களுக்கு! நான் ஏன் என்னுடையப் பயணத்தில் ஒரு அழகிய ரகசியங்கள் நிறைந்த அற்புதமான இடத்தினைக் காண ஆசைக்கொள்கிறேன் என உங்களுக்குப் புரிந்திருக்கும்.

அதனால், நமக்கெல்லாம் ஆசிரியராக விளங்கும் கூகுலை தேடினேன். நான் தேட, என் தேடலைப் புரிந்துக்கொண்ட அவன், கணினியின் முன்பு இமாசலப் பிரதேசத்தில் உள்ளச் சந்திரத்தால் பரலாச்சா லாவை என் கண் முன்னேக் காட்டி ஆர்வத்தினைத் தூண்டினான். அதனால், உடனடியாகப் பெங்களூரிலிருந்துக் குள்ளுவுக்கு ஆகாயத்தில் விமானத்தின் மூலம் பறக்க ஆசைக் கொண்டு முன் பதிவுச் செய்தேன். அதேபோல், அதன்பிறகுப் பயணத்திற்கு தேவையானப் பொருட்களையெல்லாம் வாங்க, நான் கடைகளை நோக்கி என் முதல் காலடியை எடுத்து வைத்தேன்.

பயணத்திற்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள்:

பயணத்திற்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள்:


நான் முதலில் குளிரூட்டத்தை தாங்கக் கூடிய தெர்மல்களை வாங்கிக்கொண்டு பின், கம்பளி ஆடைகள், எடைகுறைவாகக் காணப்படும் தண்ணீர் பாட்டில்கள், உறங்குவதற்கு ஏதுவான ஒரு பை, நீரினாலும் பனிக்கட்டிகளினாலும் கெட்டுப்போகாதக் காலணிகள், மின்சாரத்தினைச் சேமித்துக்கொள்ளப் பயன்படும் பவர் பேங்க், டார்ச் லைட், காற்றின் வேகத்தினைத் தாங்கக் கூடிய உடைகள், பயணத்தின் போதுத் தேவைப்படும் அவசர மருந்துகள் என அனைத்தையும் யோசித்து வாங்கி மீண்டும் வீட்டிற்குப் புறப்பட்டேன்.
நாம் மலையை ஏறுவதற்கு இத்தகையப் பொருட்கள் மட்டும் போதாது என்பதனைப் புரிந்துக்கொண்ட நான் மனதினையும் ஒருமனதாகத் திடப்படுத்திக்கொண்டுப் பயணத்திற்குத் தயாரானேன். எப்படி மனதினை திடப்படுத்துவது? இதோ உங்களுக்காக., உடற்பயிற்சியினை சரியான முறையில் செய்து, மனதினை யோகாவின் மூலம் ஒரு நிலைப்படுத்தவும் வேண்டும். அதேபோல், நல்லச் சத்துள்ள உணவுகளை மனம் சபலமடையாமல் சாப்பிட்டு தேவையற்ற நொறுக்குத் தீணிகளையும், பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது மிக நல்லது.'

sritwik

சந்திரத்தால் பரலாச்சாவை பற்றியதோர் முன்னுரை:

சந்திரத்தால் பரலாச்சாவை பற்றியதோர் முன்னுரை:


ஒரு பயணத்தின் வாயிலாக நாம் கொள்ளவிரும்பும் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கும் உறுதுணையான ஒரு இடமாக இந்தச் சந்திரத்தால் பரலாச்சாவை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மலையில் ஏற உகந்த ஒருக் காலமாக ஜூலை மற்றும் அக்டோபர் இருக்கிறது. சந்திரத்தாலின் டர்கோய்ஸ் கடலில் காணப்படும் மங்கிய சூரியன் நம்மை வெகுவாகக் கவர்கிறான். அதனால், இந்த இடத்தினை "நிலவு ஏரி" என்றும் அழைப்பர். வீக்கமான நிலப்பரப்பு, மலைக் கணவாய்கள், பச்சைப் புல்வெளிகள், வனங்கள் மற்றும் அங்கு வாழும் விலங்குகளின் வாழ்க்கைகள், அழகிய மரங்கள் அதில் பூத்துக்குழுங்கும் வண்ணம் தீட்டப்பட்ட மலர்கள் ஆகியவை மேலும் நம் பயணத்தின் அழகினையும் பெருமையையும் உணர்த்துகிறது என்றுக் கூறலாம்.

/sritwik

சந்திரத்தால் ஏரி

சந்திரத்தால் ஏரி

இந்தச் சந்திரத்தால் ஏரி 4300 மீட்டர்கள் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் ஸ்பித்திப் பள்ளத்தாக்கில் காணப்படும் இந்த ஏரி, இந்திய இமய மலைப் பகுதிகளில் இருக்கும், மிக உயரத்தில் காணப்படும் ஏரிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தச் சந்திரத்தால் பரலாச்சா பயணம், ஹிமாச்சல பிரேதஷத்தில் உள்ள பிரசித்திப்பெற்றப் பயணங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் இங்கு வரும் அனைவருக்கும் பலவிதப் புதிய அனுபவங்களும், எண்ணிலடங்கா எதிர்ப்பார்ப்பினை அதிகப் படுத்தும் இடங்களின் அழகும் நம்மை மேலும் உற்சாகத்துடன் முன் நோக்கிச் செல்ல உதவுகிறது.
பரலாச்சா லாப் பகுதி 4890 மீட்டர் உயரத்தில் லே-மணாலி நெடுஞ்சாலையில் காணப்படுகிறது. மிகவும் உயரத்தில் காணப்படும் இந்தப் பகுதி, ஸ்பித்தி, லடாக், ஷான்ஸ்கர், லாஹௌல் பகுதிகளை இணைத்துக் காட்சியளிக்கிறது.

Mahendra Pal Singh

பயணத்தின் முதல் நாள்…

பயணத்தின் முதல் நாள்…

நான் ஐந்து நாட்கள் பயணமாக ஆன்லைன் மூலம் பதிவுச் செய்து, இந்த நாளிற்காக காத்திருக்க, நான் எதிர்ப்பார்த்த நாளும் என் மனதினைத் தீண்டி என்னை புதுவிதப் பயணத்தினை நோக்கி இழுத்தது. இந்த மிதமான மலை ஏறும் பயணத்தின் முதல் நாளில் நான் சிந்தித்துக்கொண்டே செல்ல, உறைப்பனி சூழ்ந்த ஆற்றினை நாம் கடக்க வேண்டும் என்பதனை மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டேன்.

நான் குள்ளுவை அடைந்து அங்கிருந்து ஒரு டாக்ஸியின் மூலம் மணாலி நோக்கிப் புறப்பட்டேன். இந்த மணாலிப்பகுதி என்னை வரவேற்க, நான் சக மலை ஏறுபவர்களுடன் இணைந்துக்கொண்டு என் பயணத்தினை பட்டல் செல்வதன் மூலம் தொடங்கினேன்.

"நான்" என்னும் உதடுகள் ஒட்டாத என்னுடைய உச்சரிப்பு, என் சக மலை ஏறுபவர்களுடன் சேர்ந்தமையால் "நாம்" என்று சொல்ல, உதடுகள் அழகாக ஒன்றோடு ஒன்று ஒட்டியது. நாங்கள் அனைவரும் குள்ளு மணாலியின் பசுமையானப் பள்ளத்தாக்கின் இடையில் மனதினை புதைத்துப் பின் முன்னோக்கி நடக்க ஸ்பித்திப் பள்ளத்தாக்கு மற்றும் லாஹௌலை அடைந்தோம். இந்தப் பகுதிகள் பார்ப்பதற்க்குத் தரிசாக மணல்மேடு அமைப்புடனும், அழகிய நிலப்பரப்புடனும் காண்போர் கண்களை வெகுவாகக் கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாங்கள் மேலும் முன்னோக்கி நடக்க, ரோட்டங்க் வழியில் நின்றோம். அந்த இடத்தில் நின்ற நாங்கள், புகைப்படக் கருவியின் உதவியால் அந்த அழகினை முடிந்த அளவுக்குப் பதிவுசெய்து மீண்டும் புறப்பட, நாங்கள் சரியாக மதியம் 12 மணிக்கு பட்டலை அடைந்தோம். அந்தக் கால நிலையில் மாற்றத்தைக் கண்ட நாங்கள், அங்கேயே ஒருக் கூடாரம் அமைத்துத் தங்கி எங்கள் இதர நேரத்தினை அந்த நாளில், ஒய்வின் மூலம் செலவிட்டோம்.

நாள் 2:

நாள் 2:


அருமையானதொரு ஒளியுடன் தொடங்கிய அந்த இரண்டாம் நாள் காலையில், தேவையான அளவு நல்லச் சத்துள்ள உணவுகளை உண்டு மேலும் சந்திரத்தால் ஏரி நோக்கி நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணம், அந்த சந்திரா நதியின் வழியாக இன்றியமையாதப் பயணமாய் செல்ல, நாங்கள் பட்டலை நோக்கி முன் சென்றோம். கொஞ்சம் நாங்கள் சிரமமாக உணர்ந்தாலும், பாரா சிக்ரி பனிக்கட்டிகள், மற்றும் ஏனைய இமயமலை குன்றுகள் எங்களை துள்ளிக்குதித்து ஆட்டம் போட வைத்தது. இந்தப் பயணம் நீண்டு 6 மணி நேரமானாலும் இறுதியாக நாங்கள் அடைந்த ஒரு இடம் சந்திரத்தால் ஏரி என்பதனைத் தெரிந்துக்கொண்ட எங்கள் மனம் உற்சாக வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது.
உயர்ந்த மலையின் மத்தியில் நாங்கள் கண்ட இந்த பனி சூழ்ந்த ஏரி, காண்பதற்கு அரை வடிவத்தில், வானில் தோன்றும் நிலாவினைப்போல் தெரிய, அது பார்ப்பதற்கு பரவசமான ஒரு உணர்வினை எங்களுக்குத் தந்தது. அந்த ஏரியினைத் தவிர, அந்த இடத்தில் நாங்கள் கண்ட கால்நடைகளைப் பராமறிக்கும் முகாம்களேக் கண்ணுக்கு எட்டியத் தூரம் வரைத் தென்பட்ட போதிலும், அந்த இடம் அழகானக் காட்சியினைக் கண்களுக்கு தந்து எங்களை ஆச்சரியத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றது. அந்த ஏரியில் இருந்த தண்ணீரின் நிறம் முதலில் ஆரஞ்ச் வண்ணத்தில் காட்சியளிக்க பின் அந்த நிறம், சிவப்பாக மாறியது. அதேபோல் அந்த நாளின் முடிவில், மீண்டும் அந்த ஏரி நீல நிறத்திலிருந்துப் பசுமையாக மாறி எங்கள் மனதினையும் அமைதியால் ஆண்டது என்று தான் கூற வேண்டும். இயற்கை அன்னை ஈன்றெடுத்த இந்த அழகிய இடங்களுக்கு மத்தியில், எவ்வளவு இடங்கள் செயற்கையாக உருவாகினாலும், நம் மனதினை அவ்வளவு ஈர்க்காது என்றதொரு வியப்பே அனைவரது மனதிலும் ஏற்படுகிறது.

நாள் 3:

நாள் 3:

மூன்றாம் நாள் எங்களை முன்னோக்கி அந்த வெளிச்சத்தில் இட்டுச் செல்ல, காலைச் சீக்கிரமே எழுந்து நாங்கள் பட்டலிருந்து டோக்போ கோங்க்மோ நோக்கிப் புறப்பட்டோம். திபத்திய மொழியில் "டோக்போ" என்றால் நதியினைக் குறிக்கும். அதுபோல, "கோங்க்மோ" என்றால் பெரிய என அர்த்தம். ஆம், அங்கே டோக்போ கோங்க்மோ, டோக்போ யோங்க்மோ என்னும் இரண்டு ஆறுகள் குறுக்கேப் பாய்ந்தன. இந்தப் பயணம் நம் மனதில் பல சாகச நிகழ்வுகளை நிகழ்த்த, நம் உடம்பில் அட்ரனலின் அதிகம் சுரப்பதனை நம்மால் உணர முடிகிறது. இந்த ஆறுகளைக் கடக்கக் கயிறுகள் நமக்கு உதவிச் செய்ய, அதன் பின் ஆறுகளைக் கடக்கும் நாம் ஒருவித நிலையான ஏற்றத்தில் ஏறி முன்னோக்கிச் செல்கிறோம். அந்த நிலப்பரப்புத் தரிசாகக் காணப்பட, அதன் சரிவுகளில் கற்கள் நிறையவேக் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பாறாங்கல் துறைகளும் நிறையவேக் காணப்படுகிறது.

நாள் 4:

நாள் 4:

நாங்கள் எங்களுக்குத் தரப்பட்ட ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, அந்த அதிகாலைப்பொழுதில் சீக்கிரமே எழுந்து, நல்லதோர் பயணமாக இந்த நான்காம் நாள் இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு பலச் சோர்வுக்கு மத்தியிலும் அந்த இடத்தினை விட்டு நடையைக் கட்டினோம். காரணம், அந்த அதிகாலைப்பொழுதில் தான் ஆறுகளில் தண்ணீர் கொஞ்சம் குறைவாகக் காணப்படுமாம். இந்தக் காலைப்பயணம் எங்கள் கைகளில் புகைப்படக்கருவியினை எடுக்க வைக்க, நாங்கள் கண்ட அந்த அழகியக் காட்சியினைப் பதிவுச் செய்துக்கொண்டு அப்படியே நடந்தோம். நாங்கள் கண்டக் காட்சிகளின் பிம்பமாய் அந்தப் பனிக்கட்டிகளின் உச்சம் தெரிய, அது சந்த்ரபாகா மலைத்தொடரின் அழகியக் காட்சி என்பதனை நாங்கள் தெரிந்துக்கொண்டோம். மற்றொன்றினை ஒப்பிட்டுப் பார்க்கையில் நாங்கள் கடக்கப் போகும் ஆரம்ப நிலை என்பது மிகவும் எளிதான ஒன்று எனத் தோன்றியது. நாங்கள் கடந்து வந்த ஒரு நிலை சுற்றிலும் பனிகளால் சூழ்ந்துக் காணப்பட்டது.
நாங்கள் இப்பொழுது எங்களுடைய முகாமினை டோக்போ யோங்க்மா என்னும் அழகிய இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த இடத்திலும் கால்நடை (மேய்ப்பவர்களின்) பிரியர்களின் உறைவிடமாக இருக்க, நாங்கள் அவர்களுடன் பேசுவதனை ஆர்வமாக கருதித் தொடர்ந்து பேச முயன்றோம். ஐயோ! ஆனால் அது மிகவும் கடினம் என்பதனை அதன் பிறகு தான் புரிந்துக்கொண்டோம். ஆம், அவர்கள் பேசும் பாசை எங்களுக்குத் தெரியாமல் தவிக்க, இந்த இயற்கை அன்னையின் முன்பு அவர்களுக்கு எங்கள் பாசை தெரியாததை மறந்து பேச முயற்சி செய்யும் அளவுக்கு முட்டாள் ஆகிவிட்டோமே என சிரிப்பு தான் எங்களுக்கு வந்தது.

நாள் 5:

நாள் 5:

எங்கள் பயணத்தின் ஐந்தாம் நாளான அன்று மேலும் ஒரு 10 கிலோமீட்டர்கள் நாங்கள் செல்ல, பனிகளால் கவர்ந்துக் காணப்பட்ட இமயமலை தொடரின் அழகு எங்களையும் கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்க, இறுதியாக நாங்கள் பரலாச்சா லாவை அடைந்துவிட்டோம் என்பதனைப் புரிந்துக்கொண்டோம். மேலும், நாங்கள் பார்க்க, இரட்டை வழித்தடமாக அது எங்களுக்குக் காட்சியளித்தது. ஆம், இமயமலைக்கும் லஹௌலுக்கும் இடையேக் காணப்படும் பிளவு என்றும், இமயமலைக்கும் பரலாச்சாவுக்கும் இடையே உள்ளதொரு பிளவு வட எல்லை வரையில் நீள்கிறது என்றும் நாங்கள் தெரிந்துக்கொண்டோம்.

பரலாச்சா என்பது 8 கிலோமீட்டர் நோக்கி நாம் பயணிக்க தென்படும் ஒன்றாகும். இங்கு சந்திரா, பாகா, யூனம் என மூன்று ஆறுகள் வழி வகுக்கும். நம்முடைய சிறு இடைவெளிக்கு பிறகு நம்மை ஏற்றிக்கொள்ள வந்திருக்கும் ஜீப்பில் ஏறி நாம் அமர, அந்த இனிமையானதொருப் பயணமும் பின் நோக்கி செல்லத்தொடங்குகிறது. மீண்டும் நாம் மணாலி நோக்கிப் புறப்பட, கண்ட காட்சிகள் அனைத்தும் மனதில் மட்டும் ஆட்சிச் செய்ய அந்த ஐந்து நாள் பயணம் இனிதே முடிகிறது.

இந்தச் சந்திரத்தால் பரலாச்சா லா என்னும் ஒரு இடத்திலே அவ்வளவு அழகானக் காட்சிகள் சூழ்ந்திருக்கிறது என்றால் என யோசித்த என் மனம், புள்ளி வைக்க இடம் தேடி அலைய, இயற்கையின் பயணத்திற்கு முன்பு ஏது முற்றும் எனக் கூறி என்னை அடுத்தப் பயணத்துக்கான வேறு ஒரு அழகிய இடம் பற்றின சிந்தனையுடன் அந்த ஜீப்பில் மீண்டும் மனமின்றி ஏறி அமர வைத்துப் புறப்பட்டது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X