இனி கிராண்ட் கேன்யனைக் காண அமெரிக்காவுக்கு தான் செல்ல செண்டும் என்று அர்த்தம் இல்லை. அச்சு அசல் அதனைப் போன்றே இருக்கிற ஒரு இயற்கை அதிசயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து பல கட்ட டெக்டோனிக் இயக்கங்களின் விளைவாக உருவாகியுள்ள கட்ச்சின் நிலப்பரப்பு மிகவும் தனித்துவமானது.
குஜராத்தின் கட்ச் பகுதிக்கு நீங்கள் செல்லும்போது இந்த இடமும் நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். நதியும், பாறை அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த இடத்தின் அழகைக் கூட்டுகின்றன. இதன் தனித்துவத்தைப் பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்!

அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனைப் போலிருக்கும் கடியா த்ரோ
அமெரிக்காவின் அரிசோனாவில் கொலராடோ ஆற்றில் இருப்பதைப் போன்ற காளான் வடிவ பாறைகளை நாம் இங்கேயும் காணலாம்.அடடா? என்ன விசித்திரம்? இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் நம்மை விட்டு நிச்சயம் அகலாது.
இங்கு காணப்படும் பாறைகள் மற்றும் சிகரங்களின் பல்வேறு வண்ணங்கள் உண்மையிலேயே புதிரானவை மற்றும் நம் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடியவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நியூயார்க் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள இடம்
நியூயார்க் டைம்ஸ் உலகம் முழுவதிலுமிருந்து 2,000 இடங்களை மதிப்பாய்வு செய்த பிறகு "2021 இல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை" வெளியிட்டது. அதில் இந்த அழகிய மறைக்கப்பட்ட ரத்தினமான கடியா த்ரோவும் இடம் பெற்றிருந்தது.
திறமையான கைவினைஞர்கள், வண்ணமயமான பழங்குடி கிராமங்கள், அன்பான உள்ளூர்வாசிகள் மற்றும் ஒளிரும் வெள்ளை மணல் ரான் ஆஃப் கட்ச் இன் மயக்கக்கூடிய அழகில் ஒரு ரத்தினமாக இப்போது கடியா த்ரோவும் சேர்ந்துக் கொண்டது.

அதிகம் அறியப்படாத அழகு
கட்ச்சின் பல்வேறு பகுதிகளிலிருந்து உள்ளூர்வாசிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர், ஆனால் இது இன்னும் உரிய கவனத்தைப் பெறவில்லை. கட்ச்க்கு வெளியே உள்ள மிகச் சிலரே இந்த அபூர்வ காட்சியைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.கடியா த்ரோவின் அழகை கண்டுகளிக்க சூரிய உதய மலையேற்றம் ஒரு சிறந்த வழியாகும்.
நியூயார்க் டைம்ஸில் வெளிவருவதற்கு முன்னால் வரை இந்த இடத்தைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. ஆனால் இது நம் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கக்கூடிய இடங்களில் ஒன்றாகும்.

புராணக் கதைகளுடன் தொடர்புடைய கடியா த்ரோ
இந்த இடத்தைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் புராணக்கதைகள் உள்ளதாக உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர். மகேஸ்வரி சம்ரதாயின் நான்காவது புனித மமாய் தேவ் பேரன் கடியா த்ரோவின் ஒரு சிறிய நீர்நிலையில் தனது வளையலை தியாகம் செய்ததாக அது கூறுகிறது.
பொதுவாக, துறவிகள் ஆன்மீக விழிப்பு நிலையை அடையும்போது, அவர்கள் தங்கள் ஆற்றல் மற்றும் கலையை குஜராத்தி மொழியில் "கடோ" என்று அழைக்கப்படும் வளையலுக்கு மாற்றுகிறார்கள். அவர்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது, அந்த வளையலை கடவுளின் சிலைக்கு அடியில் வைப்பார்கள் அல்லது ஒரு ஆற்றிலோ அல்லது நீர்நிலையிலோ பலியிடுவார்கள். அதன்படி இந்த இடம் உருவானது என்று கூறுகின்றனர்.

இனி நீங்களும் செல்லலாம் இந்த அழகிய இடத்திற்கு
பயத் நதி மற்றும் அதன் பிற துணை நதிகள், சிறிய மற்றும் பெரிய அனைத்து ஆறுகளுடன் சேர்ந்து, பாறைகளுக்கு நடுவே பாய்ந்து இந்த பெரிய வடிவத்தை உருவாக்குகின்றன.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மிக அழகான இயற்கை சுற்றுலாத் தலம் புஜில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய இடம் சமீபத்தில் தான் வருண் சுச்டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது. நீங்களும் கட்டாயம் இந்த இடத்திற்கு சென்று பாருங்கள். நிச்சயம் அதன் அழகில் பிரமித்து உங்களை தொலைப்பீர்கள்.



Click it and Unblock the Notifications




