உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருப்பதி ஏழுமலையானின் புகழைப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும் அல்லவா! திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பதி பாலாஜி கோவிலின் மாதிரி கோவில் ஜம்முவில் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்போது ஜூன் 8 ஆம் தேதி கோவில் திறக்கப்படவிருக்கிறது. விரைவில், யாத்ரீகர்கள் ஜம்முவின் பனி மூடிய மலைகளுக்குச் சென்று, விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேசப் பெருமானை தரிசிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதோடு சுவைமிகுந்த திருப்பதி லட்டுக்களையும் நீங்கள் பிரசாதமாக பெறலாம்!

ஜம்முவில் திருப்பதி பாலாஜி கோவில்
கிரேட்டர் காஷ்மீர் அறிக்கையின்படி, ஜம்முவில் உள்ள கம்பீரமான திருப்பதி பாலாஜி கோயில் வளாகம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கோயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன. விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருப்பதி பாலாஜி கோவில் ஜூன் முதல் வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையுடன் மத சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
பிரபலமான மத சுற்றுலா சர்க்யூட்டுடன் சேரும் கோவில்
ஜம்முவில் அமைந்திருக்கும் திருப்பதி பாலாஜி கோவில் குஞ்ச்வானி - மாலிக் மார்க்கெட் - நர்வால் - சித்ரா சாலை வழியாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையுடன் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையை இணைக்கும் பைபாஸ் பகுதியில் கோயில் தளம் அமைந்துள்ளது. மஜீன், ஜம்மு நகரின் மத ஸ்தலங்கள், கத்ராவின் ஸ்ரீ வைஷ்ணோ தேவி ஆலயம் மற்றும் அமர்நாத் யாத்ரா ஆகியவற்றை இணைப்பதால் இது ஒரு பிரபலமான மத சுற்றுலா சர்க்யூட் ஆகும்.

சுற்றுலாவுடன் பெருகும் பொருளாதாரம்
62 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் பாலாஜி கோவில், ஜம்மு பகுதியில் உள்ள பெரிய கோவில்களின் பட்டியலில் இடம் பெற உள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில், இப்பகுதியில் மத மற்றும் புனித யாத்திரை சுற்றுலாவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விளைவாக யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கூடுதலாக, இது உள்ளாட்சிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இது ஆறாவது கோவில்
இந்தக் கோயில் கட்டப்பட்டதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்துக்கு வெளியே பாலாஜி கோயிலைக் கொண்ட ஆறாவது இடமாக ஜம்மு காஷ்மீர் விளங்கும். அதற்கு முன், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை, ஹைதராபாத், டெல்லி, கன்னியாகுமரி மற்றும் புவனேஸ்வரில் கோவில்களை கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கப்போகும் கோவில்
கோவில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதும், இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி பாலாஜி கோவில், வைஷ்ணோ தேவி கோவில் மற்றும் அமர்நாத் யாத்திரை போன்ற புகழ்பெற்ற மத சுற்றுலா தளங்களுடன் இணைக்கப்படும். எனவே எதிர்காலத்தில், ஜம்மு & காஷ்மீருக்கு மத சுற்றுலாப் பேக்கேஜ்கள் இருக்கலாம், அவை மத வழிபாட்டு இடங்களுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது.
ஜூன் 8 ஆம் தேதி பிரமாண்ட திறப்பவிழா
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஜூன் 4 ஆம் தேதி அர்ச்சகர்களால் சிறப்பு பூஜைகள் தொடங்கும் என்றும், பின்னர் ஜூன் 8 ஆம் தேதி கோவிலை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா திறந்து வைப்பதைத் தொடர்ந்து பக்தர்களுக்காக திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் (TTD), ஒய்.வி. சுப்பா ரெட்டி, பிற குழு உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திருப்பதி பாலாஜி கோவிலுக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications





