Search
  • Follow NativePlanet
Share
» » மதுரையைச் சுற்றியுள்ள பிரபலமான கோவில்களை ஒரே நாளில் சுற்றிப்பார்க்க இதோ டூர் கைடு!

மதுரையைச் சுற்றியுள்ள பிரபலமான கோவில்களை ஒரே நாளில் சுற்றிப்பார்க்க இதோ டூர் கைடு!

தமிழகத்தின் கலாச்சார தலைநகரம் என்று பிரபலமாக அழைக்கப்படும் மதுரை இந்தியாவின் பழமையான மற்றும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். மதுரையைச் சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. கண்கவர் கோட்டைகள், மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், நகரங்கள், கிராமங்கள் என எண்ணற்ற விஷயங்கள் இருந்தாலும் மதுரையைச் சுற்றியுள்ள கோவில்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது.

அர்த்தசாஸ்திரத்திலும் கூட மதுரையின் கோவில்களைப் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் இருந்தே, மதுரையின் வலுவான கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை பற்றி நீங்களே யூகித்துக் கொள்ளலாம் பழமையான கோவில்கள் நிறைந்த நகரம் என்பதால் மதுரையை கோவில் நகரம் என்றும் அழைப்பர் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. மதுரையில் உள்ள அழகான கோயில்கள் அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

மதுரையில் உள்ள கோயில்களில் முதன்மையானது மீனாட்சியம்மன் கோவிலே ஆகும். 1623 மற்றும் 1655 க்கு இடையில் கட்டப்பட்ட இந்த இடத்தின் அற்புதமான கட்டிடக்கலை உலகளவில் புகழ்பெற்றது. ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 பார்வையாளர்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இக்கோயிலில் உள்ள ஆயிராங்கால் மண்டபம், 30,000க்கும் மேற்பட்ட சிற்பங்கள், பொற்றாமரை குளம், பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் என மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை முழுமையாக சுற்றிவர ஒரு நாள் கூட பத்தாது எனலாம். ஆனால் நீங்கள் 2 மணி நேரத்திற்குள் தரிசித்திவிட்டு வந்தால் தான் மீதமுள்ள கோவில்களுக்கு செல்லலாம்.

கூடல் அழகர் கோயில்

கூடல் அழகர் கோயில்

108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் மீனாட்சி கோயிலில் இருந்து 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் பெருமாள் மிகவும் அழகியவர் என்பதாலே இதற்கு அழகர் கோவில் என்று பெயர் வந்ததாம். இங்கு மாசி மகத்தன்று 10 நாட்கள் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் பார்ப்பவர்களை உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் அழகிய கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. மதுரையின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று.

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

பூலோக கைலாஷ் அல்லது பூமியில் சிவனின் இருப்பிடம் என்று குறிப்பிடப்படும் இக்கோயில் மதுரையில் நீங்கள் அடுத்துப் பார்க்க வேண்டிய கோவிலாகும். இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் மேற்கு நோக்கி உள்ளது. மற்ற பெரும்பாலான இந்து கோவில்களில் சிவலிங்கம் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டு இருக்கும். மேலும், சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் மற்றும் பார்வதி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நீங்கள் ஆத்து பார்க்க வேண்டிய கோயிலாகும். இங்கு தான் முருகப்பெருமான் இந்திரனின் மகளான தேவயானியை மணந்ததாக நம்பப்படுகிறது. இங்கு முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி தருவதால் இங்கு திருமணம் செய்து கொள்ளுவது மிகவும் விசேஷம். புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான திருமணங்கள் இந்த கோவிலில் தான் நடைபெறுகின்றன.

இந்தக் கோவிலை பார்த்து முடித்தபின்னர் நீங்கள் மதிய உணவு அருந்திவிட்டு கள்ளழகர் கோவில் நோக்கி பயணிக்கலாம்.

கள்ளழகர் கோயில்

கள்ளழகர் கோயில்

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பழமையான கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் கிட்டத்தட்ட 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள இந்த கோவிலில் சுந்தரபாகு பெருமாளின் முக்கிய உருவம் தவிர, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் போன்ற உருவங்களும் உள்ளன. சித்திரைத் திருவிழாவைக் கொண்டாடவும், கள்ளழகர் கடக்கும் முக்கிய நிகழ்வைக் காணவும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடுகிறார்கள்.

சோலைமலை முருகன் கோயில்

சோலைமலை முருகன் கோயில்

அழகர் கோவிலுக்கு அருகாமையில் முருகப்பெருமானின் மற்றொரு படை வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. மரம் மற்றும் பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமியின் சிற்பங்களின் அழகு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடிக்ருதுகை, வருடாந்த அபிஷேக விழா, கந்த ஷஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

ராக்காயி அம்மன் கோயில்

ராக்காயி அம்மன் கோயில்

அழகர் கோயிலின் மலைக்கு மேலே இந்த சக்தி வாய்ந்த ராக்காயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கே ஒரு விசேஷ நீருற்றும் உள்ளது, அதிலிருந்து வரும் தண்ணீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் தீரும் அன்பது ஐதீகம். இந்த தீர்த்தம் புனித கங்கைக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

வண்டியூர் மாரியம்மன் கோயில்

வண்டியூர் மாரியம்மன் கோயில்

மதுரையில் பார்க்க வேண்டிய பிரபலமான இடமான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயிலுடன் தொடர்புடையது. திருமலை நாயக்கர் ஆட்சியின் போது கி.பி 1645 இல் கட்டப்பட்ட இந்த கோயில் குளம் நான்கு புறமும் கிரானைட் படிகளால் சூழப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

கடைசியாக வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை தரிசித்திவிட்டு நம் ஒரு நாள் பயணத்தை முடித்துக் கொள்ளலாம்!

Read more about: madurai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X