» »ராஜஸ்தானின் அல்வரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை

ராஜஸ்தானின் அல்வரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை

Posted By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ் என்றழைக்கப்பட்ட இந்த இடத்தில் மஹாபாரத பாண்டவர்கள் 13 ஆண்டு அஞ்ஞாதவாசத்தை கழித்ததாக நம்பப்படுகிறது. வரலாற்றுரீதியாக இந்த இடம் மேவார் என்று அறியப்படுகிறது. அழகிய ஏரிகள், கம்பீரமான அரண்மனைகள், உன்னதமான கோயில்கள், கலையம்சம் கொண்ட ராஜநினைவு மாடங்கள் மற்றும் உயர்ந்தோங்கி நிற்கும் கோட்டைகள் ஆகியவற்றுக்கு இந்த அல்வர் நகரம் புகழ் பெற்றுள்ளது.

 பலா குய்லா

பலா குய்லா

அல்வர் நகரத்தில் பயணிகள் பலா குய்லா என்று அழைக்கப்படும் அல்வர் கோட்டைக்கு விஜயம் செய்யலாம். இது ஹசன் கான் மேவாடி என்பவரால் 1550ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான வேலைப்பாடும் கம்பீரமான அழகியல் அம்சங்களும் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. ஜெய்போல், லக்ஷ்மண் போல், சூரத் போல், சந்த் போல், அந்தேரி கேட் மற்றும் கிருஷ்ணா கேட் போன்ற ஆறு நுழைவாயில்கள் இந்த கோட்டையில் உள்ளன.

Creator:Kashan"

விஜய் மந்திர்

விஜய் மந்திர்


சிட்டி பேலஸ் அல்லது விஜய் மந்திர் என்று அழைக்கப்படும் அரண்மனை அல்வர் நகரத்தின் மற்றொரு கட்டிடக்கலை அற்புதமாக அறியப்படுகிறது. இது ஒரு அருங்காட்சியகமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. விஜய் மந்திர் அரண்மனையில் 105 அழகான அறைகள், ரம்மியமான நந்தவனம் மற்றும் ஒரு ஏரி ஆகியன காணப்படுகின்றன.

Adityavijayavargia

ஏரிகள்

ஏரிகள்

ஜெய்சமந்த் ஏரி, சிலிசெர்ஹ் ஏரி மற்றும் சாஹர் ஏரி ஆகியன இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். மூஸி மஹாராணி கீ சாத்ரி, திரிபோலியா, மோட்டி தூங்க்ரி, பன்கர் இடிபாடுகள், கம்பெனி பாக், கிளாக் டவர், கவர்ன்மெண்ட் மியூசியம், ஃபதேஹ் ஜங், கலாகந்த் மார்க்கெட் மற்றும் நால்டேஷ்வர் ஸ்தலம் ஆகியவை இங்கு பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய அம்சங்களாகும்.

Onef9day

மூஸி மஹாராணி கி சாத்ரி, அல்வர்

மூஸி மஹாராணி கி சாத்ரி, அல்வர்

இந்த மூஸி மஹாராணி கி சாத்ரி என்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு சமாதி மாடமாகும். இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த நினைவுச்சினம் வினய் சிங் என்பவரால் பக்தவார் மஹாராஜா மற்றும் அவரது ராணியார் மூஸி ஆகிய இருவரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. 1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த நினைவுமாடம் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சியளிக்கிறது. சிவப்பு பாறைக்கற்களால் ஆன தூண்களின்மீது உருவாக்கப்பட்டிருக்கும் யானை உருவத்தினை ஒத்த கட்டமைப்பு கண்களைக் கவர்கிறது. இதன் மேற்தளப்பகுதி பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டு வட்டமான கூரைப்பகுதி, தோரண அலங்கார வளைவுகள் போன்ற அற்புதமான கலையம்சளையும் கொண்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தின் உட்பகுதி சிற்பவடிப்புகள் மற்றும் சுவரோவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் பல அழகிய வண்ணமயமான பறவைகளையும் சுற்றுப்புறத்தில் சுதந்திரமாக திரியும் மயில்களையும் பார்த்து ரசிக்கலாம். பின்னணியில் அழகிய ஆரவல்லி மலைகள், சுற்றிலும் பசுமையான சூழல் மற்றும் பலநிறங்களில் பூத்திருக்கும் மலர்கள் ஆகியவையும் இந்த ஸ்தலத்திற்கு அழகு சேர்க்கின்றன.

Bornav27may

சாகர் ஏரி, அல்வர்

சாகர் ஏரி, அல்வர்

சிட்டி பேலஸ் அரண்மனைக்கு பின்புறத்தில் இந்த சாகர் ஏரி அமைந்துள்ளது. இது 1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி நீர்த்தேக்கம் ஒரு புனித நீராட்டுதுறையாகவும் இப்பகுதியில் பிரசித்தி பெற்றுள்ளது. ஏரியின் கரைப்பகுதியும் ஒரு புனிதஸ்தலமாகவே கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் புறாக்களுக்கு தீனி போடும் பாரம்பரிய வழக்கத்தை பின்பற்றுகின்றனர். பல கோயில்கள், சிறு சன்னதிகள் மற்றும் எண்ணற்ற நினைவுமாடங்களும் சாகர் ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ளன. மினுமினுக்கும் நீருடன் சுற்றிலும் பலவிதமான கம்பீர சின்னங்கள் சூழ்ந்திருக்கும் இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

Tapish2409 -

திரிபோலியா, அல்வர்

திரிபோலியா, அல்வர்


சௌபேர் பால் எனும் வீரத்தளபதியின் நினைவாக இந்த கட்டிடச்சின்னம் 1417ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தட்டையான மாடக்கூரையுடன் காட்சியளிக்கும் இந்த அமைப்பு நான்கு அற்புதமான வாயிற் பகுதிகளைக்கொண்டுள்ளது. இது அல்வர் நகரத்தின் பரபரப்பான மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. திரிபோலியா நினைவுச்சின்னத்தின் வடபுறத்தில் முன்ஷி பஜார் எனும் மார்க்கெட் பகுதியும், தென்புறத்தில் மலக்கேரா பஜார் எனும் மார்க்கெட் பகுதியும், மேற்குப்புறத்தில் சரஃபா பஜாரும் அமைந்துள்ளன. இந்த மார்க்கெட் பகுதிகள் யாவுமே தங்க ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் விற்பனைக்கு பிரசித்தி பெற்றுள்ளன. இந்த பிரம்மாண்டமான சமாதி மாடத்தின் கிழக்கு மூலையில் ஒரு மஹாதேவ்ஜி கோயிலும் உள்ளது. சௌபேர் பால் காலத்தைச்சேர்ந்த புராதன அரும்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள ஒரு மியூசியமும் இந்த நினைவுச்சின்ன வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.

மோதி தூங்ரி, அல்வர்

மோதி தூங்ரி, அல்வர்

அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ள மோதி தூங்ரி ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும். விசாலமான அரண்மனைகள், லட்சுமி நாராயண் கோயில் மற்றும் ரம்மியமான பிர்லா மந்திர் கோயில் ஆகியவற்றுக்கு மோதி தூங்ரி ஸ்தலம் புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு மலையின் மீது அமைந்துள்ள அரண்மனை ஒரு சிறு கோட்டையின் புதுப்பிக்கப்பட்ட மறுகட்டுமானமாக காட்சியளிக்கிறது. வித்தியாசமான ஸ்காட்லாந்து பாணி கலையம்சத்துடன் இந்த கோட்டை மாளிகை இரண்டாம் சவாய் மான் சிங் மன்னரால கட்டப்பட்டுள்ளது. ராஜமாதா காயத்ரி தேவியின் வசிப்பிடமாக பயன்பட்ட இந்த அரண்மனை இன்று ராஜகுடும்பத்தினரின் உபயோகத்தில் உள்ளது. தன் அற்புதமான அழகால் இந்த ராஜமாளிகை பயணிகளை வசீகரித்து வருகிறது.

கம்பெனி பாக், அல்வர்

கம்பெனி பாக், அல்வர்

அல்வர் பகுதின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான இந்த ‘கம்பெனி பாக்' என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டம் பலவகையான தாவரங்களையும், பசுமையான புல்வெளிகளையும் கொண்டுள்ளது. விசாலமான முன்பகுதியையும் இது பெற்றுள்ளது. ராஜா ஷிவ் தான் சிங் என்பவரால் 1868ம் ஆண்டு இந்த பூங்காத்தோட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மணற்பாங்கான பிரதேசத்தின் நடுவே ஒரு பசுமை ஸ்தலமாக காணப்படுவதால் தார் பாலைவனத்தின் நடுவே ஒரு பாலைவனச்சோலை என்றும் இது சிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் உள்ளே பெங்காலி பாணி கூரை வளைவுகளுடன் கூடிய ஒரு சாத்ரி மாடமும் இடம்பெற்றுள்ளது. ஷிம்லா ஹவுஸ் எனப்படும் மற்றொரு மாளிகையும் ஒரு மிகப்பெரிய அலங்காரத்தோரண வளைவுடன் இந்த கம்பெனி பாக் பூங்காவில் அமைந்துள்ளது. இது மஹாராஜா மங்கல் சிங் என்பவரால் 1885ம் ஆண்டு கோடை வசிப்பிடமாக கட்டப்பட்டுள்ளது.

Ravindra Dayal

 கிளாக் டவர், அல்வர்

கிளாக் டவர், அல்வர்

அல்வர் நகரத்திலுள்ள சர்ச் ரோடு எனும் சாலையில் இந்த கிளாக் டவர் அமைந்துள்ளது. தூரத்திலிருந்தே நன்கு தெரியும் வண்ணம் நான்கு முகங்கள் கொண்ட மிகப்பெரிய கடிகாரக்கூண்டு இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரக் கோபுரத்தின் அடிப்பகுதி அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் காட்சியளிக்கிறது. நடுப்பகுதியில் சில தேசபக்தி வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பழைமையான இந்த மணிக்கூண்டு சந்தடி மிகுந்த சௌராஹா மற்றும் மார்க்கெட் பகுதியில் நடுவே காணப்படுகிறது. ராஜபுதன கலையம்சங்கள் இந்த சிறிய கலைச்சின்னத்திலும் அற்புதமாக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.

அரசு அருங்காட்சியகம், அல்வர்

அரசு அருங்காட்சியகம், அல்வர்

அல்வர் பிரதேசத்தின் வரலாற்றுப்பின்னணி பற்றிய முக்கியமான தரிசனங்களை இந்த அருங்காட்சியகம் பயணிகளுக்கு அளிக்கிறது. பனையோலைச்சுவடிகள் மற்றும் அரிய ஓவியங்களின் சேகரிப்புகளை இங்கு காணலாம். ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய புராதன ஆயுதங்கள், பெர்ஷிய மற்றும் சம்ஸ்கிருத நூற்பிரதிகள், இசைக்கருவிகள், பித்ரி வேலைப்பாடுகள், பதப்படுத்தப்பட்ட மிருக உருவங்கள், குறு ஓவியங்கள், மட்பாண்டங்கள் மற்றும் வெண்கல பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட அரும்பொருள் சேகரிப்பை பயணிகள் இங்கு கண்டு மகிழலாம். யானைத்தந்த வேலைப்பாடுகள் மற்றும் சாயம் பூசப்பட்ட சிலைகளும் இங்குள்ள முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

விமான மார்க்கமாக:

ஜெய்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் அமைந்துள்ளது அல்வர் நகரத்திலிருந்து 162கி.மீ தூரத்தில். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இணைப்பு சேவைகள் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு வரலாம். கொல்கத்தா, பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு இந்த விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் உள்ளன.

ரயில் மூலமாக:

அல்வர் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி, ஜோத்பூர், மும்பை மற்று இதர முக்கிய இந்திய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து அல்வர் நகரம் வருவதற்கு வேன் வசதிகள் கிடைக்கின்றன.

சாலை மார்க்கமாக:

ராஜஸ்தான் மாநில அரசுப் பேருந்துகள் அல்வர் நகரத்தை அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் ஏராளமான பேருந்துச்சேவைகளால் இணைக்கின்றன. டாக்சி சேவைகளும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து கிடைக்கின்றன.

 பருவநிலை

பருவநிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் குளுமையுடனும் மற்றும் இனிமையான சூழலுடனும் காணப்படுவதால் அல்வர் பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள இது மிகவும் ஏற்ற பகுவமாகும். மிதமான பருவநிலையுடன் பசுமையான சூழலுடன் காட்சியளிக்கும் மழைக்காலத்திலும் அல்வர் நகரத்துக்கு விஜயம் செய்யலாம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்