» »திருவல்லிக்கேணி சென்னையின் பூர்வீகம்!!

திருவல்லிக்கேணி சென்னையின் பூர்வீகம்!!

Written By: Staff

திருவல்லிக்கேணி,  சென்னையில் இருக்கும் மிகப் பழமையான பகுதியில் ஒன்று. சொல்லப்போனால், சென்னை, அதிகாரப்பூர்வமாய் தோன்றும் முன்னரே திருவல்லிக்கேணி இருந்திருக்கிறது - அதாவது, பல்லவர் காலத்திலேயே திருவல்லிக்கேணி இருந்ததாக - வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் ராயப்பேட்டையிலிருந்து Pycrofts சாலை வழியாக வந்தால், ஜாம் பஜாரில் ஆரம்பிக்கிறது திருவல்லிக்கேணி.

ஜாம் பஜார் :

மூர் மார்கெட் தீக்கிரையான பிறகு சென்னையில் இருக்கும் ஒன்றிரண்டு பழைய மார்கெட்டுகளில் ஒன்று. 50-60 வருடங்களுக்கு முன்னரே, மனோரமா பாடிய ஒரு சினிமாப் பாடலில் ஜாம் பஜாரைப் பற்றிய குறிப்புகள் வரும்.

Zam_Bazaar

Photo Courtesy : Naveen P.M

காய்கறிகள், இறைச்சி, அரிசி, வாழையிலை, நாட்டு மருந்துகள் என்று பலவிதமான பொருட்கள் விற்கும் எண்ணற்ற கடைகள் இருக்கின்றன - தோராயமாக 600க்கு மேல். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வணிகம் செய்யும் பல வியாபாரிகள் இங்கு இருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணியை இரண்டு பகுதிகளாய்ப் பிரிக்கலாம். சேப்பாக்கம், பார்த்தசாரதி கோவிலும் அதைச் சுற்றியிருக்கும் அக்ரஹாரப் பகுதிகளும். இந்த இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் செல்வதுதான் Pycrofts சாலை.

சேப்பாக்கம் :

பேச்சிலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் பகுதி இது. காரணம் : 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள். வருடம் முழுவதும் வாடகைக்கு ரூம்கள்  கிடைக்கும். அது மட்டுமல்ல. சுற்றி இருக்கும் பலவித மெஸ்கள், ப்ரவுசிங் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள், பெட்டி கடைகள்; வேலை தேடுவோர், வேலையில் இருப்போர் என்று அனைவருக்கும் தேவையானது எல்லாமே மேன்ஷனுக்கு அருகிலேயே கிடைப்பதால், திருவல்லிக்கேணி, பேச்சிலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.

சென்னையின் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளி இங்குதான் இருக்கிறது. கமல்ஹாசன், எழுத்தாளர் மதன் ஆகியோர் இங்கு படித்தனர் என்பது குறிப்படத்தக்கது.

Triplicane

Photo Courtesy : Challengethelimits

சேப்பாக்கம் பகுதியில் அந்தக் கால இஸ்லாமிய வீடுகளைப் பார்க்கலாம். ஆளுயர கதவுகளின் பின்னே நிறைய வீடுகள் இருக்கும். குறுகலான தெருக்கள், காற்றுகூட புகமுடியாதபடி வீடுகள், வீடுகளை ஒட்டி இருக்கும் மேன்ஷன்கள்.

Mosque

Photo Courtesy : Bishkekrocks

திருவல்லிக்கேணி பலதரப்பட்ட மக்கள் வாழும் இடம். அழகு நிலையங்களில் வேலை பார்க்கும் பல வட-கிழக்கு மாநில‌ இளைஞர்களை நீங்கள் பார்க்கலாம். தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலிருந்தும் பலர் வேலை தேடி, படிப்பிற்காக வந்து சேரும் இடம். தெலுங்கு மக்களும் இருப்பதால் ஆந்திரா மெஸ்களும் இருக்கின்றன.

பார்த்தசாரதி கோவில், அதன் சுற்றுப்புறம் :

திருவல்லிக்கேணியின் மிகப் பழமையான, புகழ்பெற்ற கோவில். 8'ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது. இந்தக் கோவிலின் சிறப்பு : பல்லவர்கள் முதலில் கட்டினார்கள்; பின், சோழர்கள் பெரிதாக விரிவுபடுத்தினார்கள்; கடைசியில் 15'ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசு, மேலும் சில மாற்றங்களை செய்தார்கள். வருடம் முழுவதும் உற்சவங்கள் நடக்கும்; கோவிலைச் சுற்றியிருக்கும் மாட வீதிகளில், சாமியை ஊர்வலமாய் கொண்டு வருவதுண்டு.

temple

Photo Courtesy : Sankar.S

பாரதியார் நினைவு மண்டபம் இங்கு இருக்கிறது. அவரை யானை தாக்கியது இந்தக் கோவிலில்தான்.

எழுத்தாளர் சுஜாதா பிறந்ததும் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில்தான்.

திருவல்லிக்கேணிக்கு இன்னொரு சிறப்பு : பழைய நடைபாத புத்தகக் கடைகள்; தமிழ் எழுத்தாளர்கள், புத்தக ப்ரியர்கள் பலரும் சனி, ஞாயிறுகளில் புத்தகங்களைத் தேடி இங்கு வருவதுண்டு.