புதுச்சேரி என்றால் நம் நினைவுக்கு வருவது வெப்பமண்டல கடற்கரைகள், வித விதமான உணவு வகைகள் மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலையின் விளிம்பில் இருக்கும் தேவாலயங்கள். ஆனால், வெளிப்படையாக கடற்கரையைத் தவிர பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது. புதுச்சேரி ஒருபோதும் அதன் பார்வையாளர்களை குஷிப் படுத்த தவறாது. அந்த வகையில் மற்றுமொரு அதிசயமாக கடலுக்கு அடியில் அருகாட்சியகம் ஒன்று, இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரியில் நிறுவப்பட உள்ளது.
ஆம்! ஆச்சரியமாக உள்ளதா? அதைப்பற்றி மேலும் இங்கே தெரிந்துக் கொள்வோம்.
எப்படி இந்த அண்டர்வாட்டர் மியூசியம் உருவாகிறது

இந்திய கடற்படை, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் போண்டிகான் என்ற மதிப்பிற்குரிய அரசு சாரா நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் கடந்து வந்த ஐஎன்எஸ் கடலூர் என்ற மையின்ஸ்வீப்பரை அகற்றும் பொருட்டில், இது கடல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கும் நோக்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கடற்கரையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நீருக்கடியில் 26 மீட்டர் ஆழத்தில் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இந்தக் கப்பலை சுற்றி ஆல்கா, பூஞ்சை மற்றும் பிற கடல் தாவரங்கள் வளரும். மேலும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீருக்கடியில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

கிட்டத்தட்ட 60 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கப்பலுக்குள் மூழ்கி மாயாஜால தாவரங்கள், அழகிய கடல்வாழ் உயிரினங்கள், வண்ணமயமான மீன்கள், ஆமைகள் என அனைத்தையும் நாம் கண்டு மகிழலாம். கப்பலைச் சுற்றி வளரும் பூஞ்சைகள், ஆல்காக்கள், பாசிகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக அமைவதால் சுற்றுச்சூழல் மேம்படும்.
அங்கே என்னவெல்லாம் செய்யலாம்

கடல்வாழ் உயிரினங்களை கண்டு களிப்பதோடு சுற்றுலாப் பயணிகள் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மேலும் உரிய பயிற்சி பெற்ற நபர்கள் பயணிகளை வழிநடத்துவதால், கடற்கரையில் இருந்து அருங்காட்சியகத்திற்கு படகு சவாரி செய்யலாம். இந்த அருங்காட்சியகம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நிலையான நீருக்கடியில் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிக்கிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் மகத்தான ஆற்றலைக் கொண்ட
இந்தியாவின் முதல் வகையான அருங்காட்சியகம் இதுவாகும்.
எப்படி இங்கே செல்வது
புதுவை விமான நிலையம் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பிற நகரங்களில் இருந்து பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் சென்னை விமான நிலையத்தின் மூலம் இணைய வேண்டும். புதுவையிலேயே ரயில் நிலையம் உள்ளது, இருப்பினும் நீங்க வெகு தூரத்தில் இருந்து பயணிக்கிறீர்கள் என்றால் விழுப்புரம் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், இது மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை சாலை மார்க்கமாக இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது
என்ன? அருங்காட்சியகம் திறந்தவுடன் ஒரு விசிட் அடித்து விடலாமா.