» »வேடந்தாங்கல் - ஓயாமல் கேட்கும் சிறகுகளின் சங்கீதம்!

வேடந்தாங்கல் - ஓயாமல் கேட்கும் சிறகுகளின் சங்கீதம்!

Written By: Staff

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இப்பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும் இல்லாமால் கட்டற்ற சுதந்திரத்துடன் சுற்றித் திரிய பறவைகளால் மட்டுமே முடியும்.

இதன் காரணமாகவோ என்னவோ கலாச்சாரம், பண்பாடு போன்ற கூண்டுகளில் அடைபட்டு கிடக்கும் மனிதர்கள் பறவைகளை கண்ட மாத்திரத்திலே மனது லேசாகி, குழந்தைகளை போல குதூகலிக்க தொடங்குகிறார்கள்.

இந்த பறவைகளின் அர்த்தமற்ற கீச்சிடும் ஒலி, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைய நம்முடைய மொழிகளையெல்லாம் நொடிப்பொழுதில் பொருளற்றதாக்கிவிடும்.

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். வேடந்தாங்கல் என்ற சொல்லுக்கு 'வேடர்கள் தங்குமிடம்' என்று பொருள். 

வரலாறு

வரலாறு

உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக 1798-ஆம் ஆண்டிலிருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், புகலிடமாகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. அந்த காலங்களில் பறவைகள் சுடப்படுவதை தடுப்பதற்காக ஆங்கிலேய அரசு கிராம மக்களுக்கு கூலி கொடுத்து கண்காணிப்பு பணியில் நியமித்திருந்ததாம். அன்றிலிருந்து இன்றுவரை 250 ஆண்டு காலமாக வேடந்தாங்கல் கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தையை பாதுக்கப்பது போல பாதுகாத்து வருகிறார்கள். இப்போது வேடந்தாங்கலைக் சுற்றி 35 கி.மீ. சுற்றளவுக்கு பறவைகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

50, 000 பறவைகள்!

50, 000 பறவைகள்!

அக்டோபர் மாத மத்தியில் வேடந்தாங்கல் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் இறுதியில் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் சென்றுவிடுகின்றன. குறிப்பாக ஜனவரி மாதத்தின் போது 40,000 முதல் 50,000 வரையிலான பறவைகளை சரணாலயத்தில் காணப்படுகின்றன. மேலும் திருநெல்வேலி அருகில் உள்ள கூந்தங்குளம் சரணாலயத்தை விட வேடந்தாங்கல் பரப்பளவில் சிறியது எனினும் கூந்தங்குளத்தை விட அதிக அளவில் பறவைகளை வேடந்தாங்கலில்தான் பார்க்க முடியும்.

பறவைகள் பலவிதம்!

பறவைகள் பலவிதம்!

உலகின் பல மூலைகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வேடந்தாங்காலுக்கு வந்தாலும் ஃபிளமிங்கோ என்ற பூநாரைகள் சுற்றுலாப் பயணிகளிடம் தனி கவனத்தை பெற்று வருகின்றன. அதேபோல 'அன்றில்' பறவை என்றும் 'அரிவாள் மூக்கன்' என்றும் அறியப்படும் பறவையினம் நீண்ட மூக்குடன் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதுதவிர ஊசிவால் வாத்து, நீர்க் கோழி, புள்ளி மூக்கு வாத்து, மீன் கொத்தி, கொண்டலாத்தி (அ) மண் கொத்தி, மரங்கொத்தி, ஆள்காட்டி,கருஞ்சிட்டு, கருப்பு வெள்ளை சிட்டு, கதிர்க் குருவி, வால் காக்கை, சின்னான், குயில், குக்குறுவான், சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, இராக் கொக்கு ஆகிய பறவைகளையும் இங்கு காண முடியும்.

காணாமல் போன பறவைகள்

காணாமல் போன பறவைகள்

மேலும் 1960-களில் உள்ளான், ஆற்று ஆலா ஆகிய பறவைகள் அதிகளவில் இங்கு காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் சிலவே காணப்பட்டதாகச் சூழலியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக உள்ளான், ஆலாக்களை இங்கு காண முடிவதில்லை. இருப்பினும் தற்போது வேடந்தாங்கலில் கூழைகடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருவது மகிழ்ச்சியான செய்தி.

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள்

புலம்பெயர் மற்றும் உள்நாட்டு பறவைகள்

வேடந்தாங்கலுக்கு வரும் புலம்பெயர் பறவைகளாக கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி வாத்து, தட்டவாயன் எனப்படும் ஷோவெல்லர், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான் எனப்படும் உப்புக்கொத்தி போன்றவை அறியப்படுகின்றன. அதேபோல உண்ணிக்கொக்கு, சிறுவெண் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை
பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு எனப்படும் மடையான் நத்தைகுத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம், வக்கா உள்ளிட்ட பறவைகள் உள்நாட்டுப் பறவைகளாகவும் இனம் காணப்படுகின்றன.

பறவைகளின் வரவும், இறைவனின் வரமும்!

பறவைகளின் வரவும், இறைவனின் வரமும்!

வேடந்தாங்கல் ஏரியை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பறவைகள் காணப்படுவதோடு அவற்றின் எச்சங்கள் ஏரி நீரில் கலக்கிறது. இதன் காரணமாக ஏரியின் நீர் ஊட்டச்சத்து மிக்கதாக மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு இயற்கை உரமாக மாறிவிடும் இந்த ஏரி நீரை வயல்களுக்கு பாய்ச்சுவதனால் பயிர்கள் கூடுதல் வளம் பெற்று விளைச்சலும் அமோகமாக இருப்பதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதனால் பறவைகளின் வரவை இறைவன் அளிக்கும் வரமாகவே கருதுகின்றனர் வேடந்தாங்கல் வாழ் மக்கள்.

பறவைகளுக்கு பிடித்த மரங்கள்

பறவைகளுக்கு பிடித்த மரங்கள்

வேடந்தாங்கல் ஏரிப்பகுதியில் பறவைகளுக்கு பிடித்த மரங்களான நீர்க்கருவை, சமுத்திரப் பாலை போன்ற மரங்கள் இயற்கையாகவே வளர்கின்றன. அதே நேரத்தில் ஏரிகளில் பறவைகளின் உணவுக்காக மீன்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் வேடந்தாங்கல் சரணாலயத்தை சாலை மூலமாக அடைய NH45 மூலம் பயணிக்க வேண்டும். அதோடு சென்னையிலிருந்து வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு குளிர்சாதன மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு கட்டணமாக 100 முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மஹாபலிபுரம் போன்ற இடங்களிலிருந்தும் பேருந்து மூலமாக சுலபமாக வேடந்தாங்கல் சரணாலயத்தை அடைந்து விட முடியும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்