» »பச்மாரியில் பறக்கலாம் வாருங்கள்! #சாகசஉலா 1

பச்மாரியில் பறக்கலாம் வாருங்கள்! #சாகசஉலா 1

Written By: Udhaya

சாகசங்கள் என்றாலே மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், பயத்தையும் உண்டுபண்ணும் நிகழ்வாக அமைந்துவிடுகிறது. திரைப்படங்களில் செய்யும் சாகசங்களைப் போல பாதுகாப்புடன்தான் இந்த சாகசங்கள் செய்யப்படுகின்றன. உயிருக்கு ஆபத்தில்லாமல், மிகவும் அரிய விசயங்களையும் தகுந்த பாதுகாப்போடு, பயிற்சியுடன் செய்தால் அலாதியான சுகம் கிடைக்கும் என்பதை இதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.

பச்மாரி தான் மத்தியப்பிரதேசத்தில் காணப்படும் ஓரே மலை வாசஸ்தலமாகும். பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நம் சாகச பயணத்தை தொடங்குவோம் வாருங்கள்.

பழங்குடியின் தலைநகரம்

பழங்குடியின் தலைநகரம்

பச்மாரி, பழங்குடி ராஜ்யமான கோண்ட் பழங்குடியின் தலைநகரமாக இருந்துள்ளது. பச்மாரி, 1857 ஆம் ஆண்டில் உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் இங்கு நிகழ்ந்த நவீன மாற்றங்கள் இந்த இடத்தை மிகவும் அழகிய சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஆர்வமே இதனை மிக உயர்வான பெருமையுடைய ஒரு மலை சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்கக் காரணமாக இருந்துள்ளது. இது மத்திய இந்தியாவின் மிக உயரமான இடமாக இருப்பதினால், ஆங்கிலேயர்கள் இதனை தங்கள் இராணுவ முகாமாக ஆக்கினர்.

Abhayashok

யுனெஸ்கோவின் பெருமை

யுனெஸ்கோவின் பெருமை

பச்மாரி, 2009 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பச்மாரி சுற்றுலாத்துறை இங்கு வருவோர் கண்டு களிக்கக்கூடிய பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள துப்கார், விந்திய-சத்புரா மலைத்தொடரில் உள்ள உயரமான ஒரு இடமாகும். இது சாஸர் வடிவில் அமைந்த சுவாரஸ்யமானதொரு மலை வாசஸ்தலமாகும். இங்கு உள்ள இராணுவ முகாமிற்காகவும் மிகவும் பிரபலமாக உள்ளது பச்மாரி.

PC:Sid Bhatnagar

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்


பழங்காலக் குகைகள், புராதனக் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனப்பகுதி, செடியினங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மலைப்பாறைகள், அடர்பசுமையான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடு, அலையலையாக விழும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் இதமான வானிலை ஆகியவை இதனை இயற்கை அன்னையின் உறைவிடமாகவே ஆக்கியுள்ளது. சூரிய மறைவை கண்டு களிப்பதற்கு பச்மாரி மிக உகந்த ஒரு ஸ்தலமாகும். ஹண்டி கோ, ஜடா ஷங்கர் குகை, பாண்டவா குகைகள், அப்ஸரா விஹார், தேனீ நீர்வீழ்ச்சி, டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகியவை பச்மாரியின் சில முன்னணி ஈர்ப்புகளாகும்..

PC: Wikimedia

ஹண்டி கோ

ஹண்டி கோ

ஹண்டி கோ என்பது பச்மாரி வனப்பகுதியில் காணப்படும் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு அல்லது மலைக்கணவாய் ஆகும். சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் கடினமான பாறைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன. தனிமை சூழ்ந்த மனதுக்குகந்த இடமான இங்கு, தேனீக்களின் ரீங்காரம் மற்றும் அருவியின் ஓங்காரத்தை மட்டுமே கேட்க முடிகிறது. இது பானை வடிவில் இருப்பதினால் ஹண்டி என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பச்மாரி மக்கள் இதனை அந்தி கோ என்று அழைத்து வந்தனர்; பின்னர் இப்பெயர் மருவி ஹண்டி கோ என்றழைக்கப்பட்டு வருகிறது. ஹண்டி கோ அதன் வியக்க வைக்கும் இயற்கை அழகிற்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

PC : Sid Bhatnagar

ஹன்டி கோவை அடைவது எப்படி?

ஹன்டி கோவை அடைவது எப்படி?

பச்மாரி பகுதியிலிருந்து 10 நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே, ராஜேந்திர கிரி, அப்சரா விஹார், சங்கம் முனை, சூரியமறைவு முனை, தூபர்கார்க்,. ரம்யா குந்த், டச்செஸ் நீர்வீழ்ச்சி, தேனி நீர்வீழ்ச்சி எல்லாம் அமைந்துள்ளன.

 பாண்டவா குகைகள்

பாண்டவா குகைகள்

பச்மாரியிலுள்ள சிறு குன்றின் மேல் ஒரு குழுவாக அமைந்துள்ள குகைகளஅ பாண்டவா குகைகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு ஐந்து குகைகள் காணப்படுவதால் அந்த பெயரில் அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இக்குகைகளில் வந்து தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது. இக்குகைகள் அளவில் சிறியதாகவே காணப்படுகின்றன. இவற்றுள் பெரியதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கூடியதாகவும் காணப்படும் ஒரு குகை திரௌபதி குடி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது. மிகவும் நெரிசலாக இருளடைந்து காணப்படும் குகை, பீமா கோத்தாரி அல்லது குகை என்று அழைக்கப்படுகிறது. பாண்டவா குகைகள் இயற்கையே மிக அழகாகச் செதுக்கியது போல் அமையப்பெற்றுள்ள குகைகளாகும்.

PC : Ns8gupta

 அப்ஸரா விஹார்

அப்ஸரா விஹார்

அப்ஸரா விஹார் பார்ப்பதற்கு சிறிய நீர்வீழ்ச்சிதான். இது விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையும் காணப்படுகிறது. இதை அப்பகுதி மக்கள் தேவதைக் குளம் என்று அழைக்கின்றனர். இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக அருமையான ஒரு இடமாகும். இந்த குட்டை ஆழம் அதிகமின்றி காணப்படுகிறது. அதனால் இது, குழந்தைகளுடன் குடும்பத்தினர்கள் மிக விரும்பும் ஒரு சிறப்பான தலமாகத் திகழ்கிறது. இந்த குளம், பாண்டவா குகைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. பச்மாரி வரும்போது, அப்ஸரா விஹாரில் நீராடும் சுகானுபவத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.

PC : Ns8gupta

ஜமுனா பிரபாத்

ஜமுனா பிரபாத்

பச்மாரியில் உள்ள அழகிய அருவி இந்த தேனீ நீர்வீழ்ச்சி ஆகும். இது ஜமுனா பிரபாத் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பச்மாரி பள்ளத்தாக்கின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. தேனீ நீர்வீழ்ச்சி அழகிய ஓங்காரத்தோடு பாயும் ஒரு வசீகரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த அருவியின் கீழ்ப்பகுதியில் ஒரு குளமும், மேல்பகுதியில் ஒரு குளமும் காணப்படுகின்றன.

Abhishek727

 சாகசங்களில் திளைக்க....

சாகசங்களில் திளைக்க....

சாகச விரும்பிகள் இந்த நீரோடையைத் தாண்டி மற்றொரு குளியல் குளமான ரஜத் பிரபாத்திற்கு இந்த தேனீ நீர்வீழ்ச்சியின் வழியாகச் செல்லலாம். அப்ஸரா விஹாரிலிருந்து, தேனீ நீர்வீழ்ச்சி வழியாக, ரஜத் பிரபாத்தை அடையும் சாகசம் நிறைந்த பயணமானது இளைஞர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. இங்கு ஒருமுறை வந்து செல்வோரின் நினைவில் நீங்கா இடம்பிடிக்கக்கூடியதான இந்த நீர்வீழ்ச்சியின் ஏகாந்தம் மற்றும் இயற்கை அழகு, இதன் வழியே கடந்து செல்லும் எந்த ஒரு பயணியின் கவனத்தையும் கவரக்கூடியதாகவும் உள்ளது..

Anukruti Nigam

டட்சஸ் நீர்வீழ்ச்சி

டட்சஸ் நீர்வீழ்ச்சி


பச்மாரியில் உள்ள அழகிய அலையருவி டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகும். இந்த எழில்மிகு நீர்வீழ்ச்சி மூன்று வெவ்வேறு அருவித்தொகுதிகளை உருவாக்குகிறது. ஒருவர் இதன் அடிவாரப்பகுதியை அடைய சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி சுமார் 100 அடி தொலைவிலிருந்து விழுவதினால் தம்மென்ற காதுக்கினிய ஓங்காரத்தை எழுப்புகிறது. இந்த நீர்வீழ்ச்சி பல்வேறு சிறு குட்டைகளை உருவாக்குகிறது. பயணிகள் இந்த சிறு குட்டைகளில் நீச்சல் மற்றும் குளியல் போன்ற செயல்களில் பாதுகாப்பாக ஈடுபடலாம். டட்சஸ் நீர்வீழ்ச்சி வல்லமைமிகு சத்புரா மலைத்தொடரில் உருவாகும் நீர்வீழ்ச்சிகளுள் மிக அழகான நீர்வீழ்ச்சி ஆகும். இந்நீர்வீழ்ச்சி புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

படா மஹாதேவ் குகை

படா மஹாதேவ் குகை

பச்மாரியிலிருந்து சுமார் 10கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த படா மஹாதேவ் குகை. இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இது 60 அடி நீளம் கொண்டதாகும். இங்கு பிரம்மன், விஷ்ணு மற்றும் விநாயகருக்கான சன்னதிகளும் காணப்படுகின்றன. இந்த குகையிலிருந்து வடியும் நீர் ஓரிடத்தில் திரண்டு, குளமாக தேங்கி நிற்கிறது. இந்த குளத்தில் நீராடினால், தீய சக்திகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது தொன்நம்பிக்கை ஆகும். இங்கு வந்து வழிபடுவது மட்டுமல்லாம், மற்ற இயற்கை அழகுகளையும் ரசித்துவிட்டு செல்லலாம்.

Marjolein Katsma

ரஜத் பிரபாத்

ரஜத் பிரபாத்

ரஜத் பிரபாத், பச்மாரியின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சி ஆகும். சூரிய ஒளி, இந்த அருவியின் நீரில் பட்டுத் தெறிக்கும் போது இது வெள்ளி நிறங்கொண்டு ஜொலிப்பதனாலேயே இந்த நீர்வீழ்ச்சி ரஜத் பிரபாத் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ரஜத் பிரபாத் என்பதன் உண்மையான அர்த்தம் "வெள்ளி அருவி" என்பதாகும்; இந்தியில் ரஜத் என்றால் வெள்ளி என்றும் பிரபாத் என்றால் அருவி என்றும் பொருளாகும். சுமார் 107 அடியில் பாயக்கூடிய ஒற்றை அருவியான இது, குதிரையின் வால் வடிவில் காணப்படுகிறது. இது இந்தியாவின் முப்பதாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். ரஜத் பிரபாத் "சத்புராவின் ராணி" என்று அறியப்படுகிறது. இது அப்ஸரா விஹாரிலிருந்து சுமார் 10 நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது.

ஜடா ஷங்கர் குகை

ஜடா ஷங்கர் குகை

ஜடா ஷங்கர் குகை பச்மாரியில் உள்ள, இயற்கையாக உருவான ஒரு குகையாகும். சைவப் பாரம்பரியத்தை கடைபிடிப்போருக்கு, இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு தலமாகும். இக்குகையினுள் இயற்கையாக உருவான மிகப்பெரிய சிவலிங்க சிலை ஒன்று காணப்படுகிறது. இக்குகையின் பாறைகள் சிவபெருமானின் ஜடா முடியை நினைவுபடுத்துவது போல் உள்ளதால், முடி என்பதைக் குறிக்கும் ஜடா என்ற பெயரிலிருந்தும், ஷங்கர் என்ற சிவனின் மற்றொரு பெயரிலிருந்தும், ஜடா ஷங்கர் குகைகள் என்ற பெயரைப் பெற்றது. ஜம்பு த்விப் நீரோடை ஜடா ஷங்கர் குகைகளிலிருந்தே உருவாகிறது. இவ்விடம் பக்தர்களும், பயணிகளும் ஒன்று சொன்னாற் போல் பெருமளவில் கூடும் ஒரு இடமாகத் திகழ்கிறது.

PC : Sharukhalam334

டோரதி தீப்

டோரதி தீப்


டோரதி தீப் என்றும் அழைக்கப்பெறும் பாரதி நீர் என்பது பச்மாரியில் உள்ள ஒரு குகைக் குடில் ஆகும். இந்திய தொல்பொருள் சர்வே இங்கு 1930 ஆம் வருடம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சர்வேயின் போது, இவ்விடத்தில் இருந்து மைக்ரோலித்திக் காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகள் மற்றும் இன்ன பிற பொருள்களை அகழ்ந்தெடுத்துள்ளனர். இக்குகை கலைநயத்தோடு செதுக்கப்பட்டு சிறப்பாகக் காட்சியளிக்கும் விலங்குகளின் ஓவியங்களைக் கொண்டிருக்கின்றது. இது கடந்து போன ஒரு யுகத்தைப் பற்றிய அறிவை நமக்கு தருவதாக உள்ளது. பாரத் நீர், பச்மாரியின் மிகச்சிறந்த குகைக் குடில்களுள் ஒன்றாகும்.

Ankit Saha

 ஹார்ப்பர் குகை

ஹார்ப்பர் குகை


ஹார்ப்பர் குகை பச்மாரியில் உள்ள ஒரு சிறு குகை ஆகும். இக்குகையின் சுவர்களை பழங்கால சித்திரம் ஒன்று அலங்கரிக்கின்றது. இதில், ஹார்ப் எனப்படும் பழங்கால இசை வாத்தியத்தை ஒரு மனிதன் வாசிப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதால், இது ஹார்ப்பர் குகை என்ற பெயரைப் பெற்றுள்ளது.இது ஜடா ஷங்கர் குகைக்கு அருகாமையில் அமைந்துள்ளது

Read more about: travel, hills, forest