Search
  • Follow NativePlanet
Share
» » சென்னையில் இத்தனை திவ்யதேசக் கோயில்களா – சூப்பரான ஒரு நாள் ட்ரிப் இதோ!

சென்னையில் இத்தனை திவ்யதேசக் கோயில்களா – சூப்பரான ஒரு நாள் ட்ரிப் இதோ!

இது பகவான் மகாவிஷ்ணுவிற்கு உகந்த புரட்டாசி மாதம்! இம்மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். அதிலும் முக்கியத்துவமும் பல பெருமைகளையும் தாங்கி நிற்கும் திவ்யதேசங்களுக்கு செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 108 திவ்யதேசங்களை தரிசிப்பதற்கு ஒரு ஆயுளும் போதாது என்றே கூறுவார்கள்.

108 கோயில்களை ஒரு சேர தரிசிப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால், சென்னை உள்ளே மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள இந்த 7 திவ்யதேசங்களை நாம் ஒரே நாளில் தரிசித்து விடலாம். உங்களுக்கான ஒரு நாள் டூர் கைடு இதோ!

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி

பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனால் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, மகாபாரதப் போரின்போது, குருக்ஷேத்திரப் போரில் மகா பீஷ்மரின் அம்புகளால் உண்டான தழும்புகளால் கடவுளான ஸ்ரீ பார்த்தசாரதியின் முகம் நிரம்பியுள்ளது.

இந்தக் கோவிலில் நரசிம்மர், ராமர், வராஹா மற்றும் கிருஷ்ண பகவான்களின் சன்னதி உள்ளது. ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ கஜேந்திர வரதராஜ ஸ்வாமி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், சுவாமி மணவாள மாமுனிகள் ஆகிய கடவுள்களையும் நீங்கள் ஒரு சேர தரிசிக்கலாம். இந்த அழகிய கோயில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. நகரின் பல இடங்களிலிருந்தும் திருவல்லிக்கேணி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், திருநீர்மலை

ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், திருநீர்மலை

"தோயகிரி க்ஷேத்திரம்" என்றும் "தோத்தாத்ரி" என்றும் அழைக்கப்படும் இந்த திருநீர்மலை க்ஷேத்திரம் தாம்பரம் அருகே அமைந்துள்ளது. ராமர் சீதையை மணந்த போது, இருவரையும் ஒரு சேர தரிசிக்க வேண்டுமென்று இந்த ஸ்தலத்தில் வால்மீகி மனமுருகி வேண்டிக் கொண்டாராம். முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் இத்தலத்தில் சீதை, லட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோருடன் ராமர் வடிவில் காட்சியளித்தாராம்.

இந்த கோவிலில் நீர் வண்ணப் பெருமாள் நின்று (நின்ற), நரசிம்மர் அமர்ந்து (இருந்த), ரங்கநாதர் சாய்ந்த நிலையில் (கிடந்த) மற்றும் உலகளந்த பெருமாள் நடந்து செல்லும் தோரணையில் (நடந்த) காட்சியளிக்கிறார். இதுவே பெரிய விசேஷம் அல்லவா! இக்கோயிலை அடையவும் நீங்கள் மாநகர பேருந்துகள் அல்லது டாக்சிகளை பயன்படுத்தலாம்.

ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், திருவிடந்தை

ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில், திருவிடந்தை

திருவிடந்தையில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் ஸ்ரீ விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திரேதா யுகத்தில், அரசன் மேகநாதனின் மகன் பாலி, அசுரர்களுடன் ஏற்பட்ட போரில் பிரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டார். தோஷத்தில் இருந்து விடுபட, அவர் இத்தல பெருமாளிடம் வேண்டிக் கொண்டார்.

அவரது தவத்தால் மகிழ்ந்த விஷ்ணு பலி முன் தோன்றி வராஹ ரூபத்தில் தரிசனம் கொடுத்தார். இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், ஆண்டு முழுவதும் அதாவது 365 நாட்களும் இங்கு தாயாருக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இந்த கோவில் திருவான்மியூரில் இருந்து 19 கிமீ தூரத்திலும் கோவளத்தில் இருந்து 4 கிமீ தூரத்திலும் உள்ளது.

 ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள் கோவில், திரு கடல்மலை

ஸ்ரீ ஸ்தல சயன பெருமாள் கோவில், திரு கடல்மலை

சிறப்பான கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக "அர்த்த சேது" என்று அழைக்கப்படும் இந்த கோவில், மகாபலிபுரத்தில் அமைந்துள்ளது. அல்லும் பகலும் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் நாராயணனை நினைத்து தவம் செய்து வந்த பண்டரீக முனிவரின் தவத்தில் மகிழ்ந்து இறைவன் அவருக்கு காட்சி கொடுத்த ஸ்தலம் இது.

இது சென்னையில் இருந்து 40 கிமீ தொலைவிலும், திருவிடந்தையிலிருந்து 7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. நீங்கள் சென்னை நகரில் இருந்தும், சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாநகர பேருந்துகள் மூலம் எளிதில் இக்கோவிலை அடையலாம்.

ஸ்ரீ பக்தவத்சலம் கோயில், திருநின்றவூர்

ஸ்ரீ பக்தவத்சலம் கோயில், திருநின்றவூர்

108 திவ்ய தேசங்களில் 55 ஆவது திவ்யதேசமான ஸ்ரீ பக்தவத்சலம் கோயில் திருநின்றவூரில் அமைந்துள்ளது. இங்கு விஷ்ணு பகவான் பக்தவத்சலப் பெருமாள் என்றும், அவரது மனைவியான லட்சுமி, என்னைப் பெற்ற தாயார் என்றும், ஸ்ரீ சுதாவள்ளி என்றும் அழைக்கப்படுகிறார்.

திருநின்றவூரரில் முதலில் தாயார் வந்து குடியிருந்து, பின்னர் இறைவன் இங்கு வந்து சேர்ந்ததால் இது தேவியின் தலமாக கருதப்படுகிறது. ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் தனது மாமியார் ஸ்தலத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பது இந்தக் கோயிலில் காணப்படும் அரிய காட்சியாகும். இக்கோவிலை அடைய நீங்கள் மாநகர பேருந்துகள் அல்லது டாக்சிகளை பயன்படுத்தலாம்.

 ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர்

இக்கோயிலில் வீரராகவப் பெருமாள் சயனித்த நிலையில் காட்சித் தருகிறார். இறைவனின் வலது கரம் சாலிஹோத்ர முனிவரின் தலையிலும் இடது கை ஞான முத்திரை நிலையிலும் உள்ளது. திருவாதரி ஆசிரமத்தில் வசித்து வந்த சாலிஹோத்திரர் என்ற முனிவரின் பக்தியை உலகிற்கு அறிய வைக்கும் பொருட்டு, எம்பெருமான் இக்கோவிலில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இக்கோவிலில் நகரில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. நீங்கள் புறநகர் அல்லது மாநகர பேருந்துகளின் மூலம் இக்கோவிலை அடையலாம்.

 ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், வேலூர்

ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், வேலூர்

ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்த திவ்யதேசம் கடிகாசலம் என்றும் திருக்கடிகை என்றும் அழைக்கப்படுகிறது. யோக நரசிம்மர் சன்னதியில் யோக தோரணையில் சூரியன் மற்றும் சந்திரன் காலடியில் அமர்ந்திருப்பதை இங்கே நாம் காணலாம். இக்கோவிலுக்கு செல்ல நீங்கள் வேலூர் செல்லும் அரசு பேருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்துக் கோவில்களையும் ஒரே நாளில் பார்த்து விடுவது எளிது. இப்பொழுதே திட்டமிடுங்கள்!

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X