» »பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?

பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?

Written By:

உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையமாகும். அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் பெருகி வரும் உல்லாச நகரங்களும், சொகுசு விடுதிகளும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். கர்நாடக மாநிலம் அதன் நில அமைப்பு சார்ந்து மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் கடற்கரை சார்ந்த பகுதிகள் , கரவலி என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளை சூழ்ந்து அமைந்திருக்கும் பகுதிகள் மலநாடு என்றும் அழைக்கப்படுகிறது. பெங்களூர் நகரின் வேறுபட்ட கலாச்சாரமும், தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும் சேர்ந்து அதை இந்தியாவின் முக்கியமான பெருநகரங்களில் ஒன்றாக திகழச் செய்துகொண்டிருக்கிறது. கர்நாடகாவின் மற்ற நகரங்களும் அதை போலவே வேகமாக வளர்ந்து வருகின்றன. இங்கிருந்து சுற்றுலா செல்ல நினைக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு வாய்ப்பாக கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அருவிகளைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

மகோட் நீர்வீழ்ச்சி

மகோட் நீர்வீழ்ச்சி

எல்லாபூர் செல்லும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் மகோட் கிராமத்திற்கு அருகில், எல்லாபூரிலிருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் மகோட் நீர்வீழ்ச்சி. பெட்தி ஆறு 650 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளை கடந்து ஓடி வருகையில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஜேனுகல்லுகுட்டா மற்றும் சன்செட் பாயின்டிற்கு அருகிலேயே இருப்பதால், பயணிகளுக்கு இதை சென்றடைவதில் சிரமம் குறைவு. மேலும் மகோட் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் காவடி கரே எனும் அழகான ஏரியும் பசுமையான காட்டின் நடுவில் அமைந்துள்ளது. மழைக்காலம் முடிந்தபின்னரும் மற்றும் குளிர்கால துவக்கத்திலும் இந்த இடம் சுற்றிப்பார்க்க உகந்தது.

Prad.gk

 இருப்பு நீர் வீழ்ச்சி

இருப்பு நீர் வீழ்ச்சி

பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் கூர்க் பிரதேசத்தின் தென் பகுதியில் இந்த இருப்பு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. காவிரியின் துணை ஆறான லட்சுமண தீர்த்த ஆறு இதிலிருந்து உருவாவதால் இதற்கு லட்சுமண தீர்த்த நீர் வீழ்ச்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இருப்பு என்று அழைக்கப்படும் இந்த நீர் வீழ்ச்சி அறுபது அடி உயரத்தில் பசுமையான மலைப்பகுதியின் மத்தியில் விழுகிறது. இருப்பு நீர்வீழ்ச்சி நாகர்கோல் நெடுஞ்சாலையில் விராஜ் பேட்டையிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் மடிக்கேரியிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு வெகு அருகில் உள்ளது என்பதும் குறிப்பிட த்தக்கது. புகழ் பெற்ற ராமேஸ்வரர் கோயில் இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது. புராணக் கதைகளின்படி ராமனும் லட்சுமணனும் சீதையை தேடி இந்த காட்டுக்குள் சென்றதாகவும் அப்போது ராமன் தாகம் எடுக்கிறதென்று கூறவே லட்சுமணன் தன் அம்பை பிரம்மகிரி மலையை நோக்கி எய்தபோது இந்த லட்சுமண தீர்த்தம் நீர் வீழ்ச்சியாய் ஊற்றி ராமனின் தாகத்தை தீர்த்த தாய் சொல்லப்படுகிறது. இந்த புராணக்கதை அடிப்படையில் இந்த நீர்வீழ்ச்சியில் மஹா சிவராத்திரியின் போது குளித்தால் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் தொலந்து போகும் என்ற ஐதீகம் நிலவுகிறது. எல்லா நீர்வீழ்ச்சிகளையும் போலவே இங்கும் மழைக்காலத்தில் மட்டுமே வேகமும் நீரின் வரத்தும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. நீர் வீழ்ச்சியை ஒட்டியவாறே மலையின் மீது ஏறுவதற்கு வசதியாக ஒரு பாலமும் படிகளும் உள்ளதால் மேலிருந்து விழும் நீரை மிக அருகில் பார்க்க முடிவதோடு அங்குள்ள எழில் வாய்ந்த மரங்களையும் இயற்கை சூழலையும் மிக சௌகரியமாக பார்த்து ரசிக்க முடியும். அருவியின் இரைச்சலோடு கலந்து மிளிரும் இந்த இயற்கை அழகை தரிசிப்பதே ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

Philanthropist 1

 மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி

மாணிக்யதாரா நீர்வீழ்ச்சி

நேரம் இருந்தால் பயணிகள் மாணிக்யதாரா நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்ப்பது அவசியம். இது சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே கெம்மன குந்தி செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஷோலா காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புனித இடமாகவே விளங்குகிறது. முத்துக்கள் கோர்க்கப்பட்ட மாலை எனும் பொருள் கொண்ட மாணிக்யதாரா என்ற பெயரை உடைய இந்த நீர்வீழ்ச்சி அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலை விரும்புபவர்களுக்கு பொருத்தமான இடமாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஞானி ‘ஹஸ்ரத் தாதா ஹயாத் மீர் கலந்தர்' அவர்களும் அவர்தம் 4 சீடர்களும் தங்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளனர். வறண்ட போயிருந்த இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் அவர்களின் பிரார்த்தனைக்கு பிறகு மலையிலிருந்து இந்த மாணிக்யதாரா அருவி பெருகி தாகத்தை தணித்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனிதம் வாய்ந்த இந்த அருவி நீருக்கு தோல் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அருவி ஸ்தலத்தில் பல நோய் தீர்க்கும் மருந்துகளை விற்கும் கடைகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
wikipedia.org

 கல்ஹட்டி நீர்வீழ்ச்சி

கல்ஹட்டி நீர்வீழ்ச்சி


கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கல்ஹட்டி நீர்வீழ்ச்சிக்கும் செல்லலாம். இது காலஹஸ்தி என்றும் கல்லதிகிரி அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அகஸ்திய முனிவர் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவிக்கு அருகில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட வீரபத்திர ஆலயம் என்னும் தொன்மையான கோயில் ஒன்று உள்ளது. இதன் வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மூன்று யானை சிற்பங்கள் இருக்கின்றன.

Vinayak Kulkarni

ஓநேக் அபி அருவி

ஓநேக் அபி அருவி


அகும்பே வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஓநேக் அபி அருவி முக்கியமானது. இது அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம். அதோடு உச்சத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அருவியின் அற்புதக் காட்சியையும் மக்கள் கண்டு ரசிக்கலாம். இந்த ஓநேக் அருவி என்ற வார்த்தையில் முதிலில் உள்ள ஒநேக் என்பது கன்னட வார்த்தையாகும். இதற்கு தமிழில் 'உரல்' என்று அர்த்தம்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்