Search
  • Follow NativePlanet
Share
» »தனியழகுடன் மிளிரும் தரங்கம்பாடி

தனியழகுடன் மிளிரும் தரங்கம்பாடி

தனியழகுடன் மிளிரும் தரங்கம்பாடிக்கு போலா

By Kumaravel Rajan

பயணங்கள் பலன் தரும்:

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற புதினத்தைப் புரட்டியபோது ஓர்

ஒற்றை வரித்தத்துவத்தைக் கண்டேன். அது இன்னும் என் செவிகளில்

ஒலித்துக்கொண்டிருக்கிறது. " மனிதன் ஓர் இடத்தில் இருப்பதற்காகப்

படைக்கப்படவில்லை" என்ற ஒற்றைவரித் தத்துவம்தான் அது. அதுவே நிதர்சன

உண்மையும் கூட. நீங்கள் உங்களது ஓய்வு நேரங்களில் ஒய்யாரமாக வீட்டின்

நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருக்காமல் அனுபவம் பிரசவிக்கும்

பயணங்களுக்குத் திட்டமிடுங்கள்.

டேனியர்களின் கோட்டைக்குள் நுழைவோமா?

இந்தியாவில் வியாபாரத்திற்காக வந்த வெளிநாட்டவர்களுள் டேனியர்களும்

ஒருவர். வணிகத்திற்காக வந்தவர்கள் இந்தியாவின் செழிப்பில் சொக்கிப்போயினர்.

தரங்கம்பாடியைத் தேர்ந்தெடுத்து ஓர் வலிமையான கோட்டையையும்

கட்டிக்கொண்டனர். தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் டேனியர்களின்

கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரத்தோடு சங்கமித்தது. பிறகு ஆங்கிலேயர்கள்

தரங்கம்பாடியை தன்வசமாக்கிக்கொண்டனர். டேனியர்கள் விட்டுச்சென்ற

வரலாற்றுச் சீதனங்களையும்,இயற்கையழகையும் காண விழைவோர்

டேனியர்களின் கோட்டையான தரங்கம்பாடிக்குள் நுழையத் தயாராகுங்கள்.

வாட்டம் போக்கும் வார விடுமுறை:

வார விடுமுறை நாட்களில் நீங்கள் வசந்தத்தைக் காண விரும்பினால்

சென்னையிலிருந்து புறப்படத் தயாராகுங்கள். தரங்கம்பாடி உங்களை அன்புடன்

அழைக்கிறது. கட்டற்றுச் செல்லவும் களி வெறியில் துள்ளவும் வாட்டம் போக்கி

மகிழ்ச்சியின் மீது நாட்டம் செலுத்தவும் விடுமுறை உங்களுக்கு உதவுகிறது.

பயணத்திட்டம் தயாரா?

சென்னையின் போக்குவரத்துச் சத்தம் உங்கள் செவிகளுக்கு எட்டாமல்

நேரத்தை நிறைவாகச் செலவிட நீங்கள் விரும்பினால் பயணத்தைத்

திட்டமிடவேண்டியது அவசியம். அழகிய மகரந்த சூழைச் சூழ்ந்திருக்கும்

மலர்களின் இதழ்களைப்போல பாண்டிச்சேரி,தரங்கம்பாடி ஆகிய எழில்மிகு

நகரங்கள் உங்கள் பயணத்திட்ட வரைபடத்தில் அடுத்தடுத்து இடம்பெறுவது

மிகச்சிறப்பு. சென்னையிலிருந்து தரங்கம்பாடி 280 கி.மீ தொலைவில்தான்

தரங்கம்பாடி என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் அமைந்துள்ளது.

வழித்தடம் இதோ:

சென்னை - பாண்டிச்சேரி _ பிச்சாவரம் _ தரங்கம்பாடி

இப்பயணத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கிலேய நகரத்திலிருந்து

வெளியேறி பிரஞ்சு நகரத்தின் வழியாக டேனியர்களின் நகரை நோக்கிச்

செல்வதே.

 கிளப்புங்கள் பயணத்தை:

கிளப்புங்கள் பயணத்தை:

செயின் ஜார்ஜ் கோட்டை வீற்றிருக்கும் சிங்கார நகரமாகிய சென்னையிலிருந்து

நீங்கள் புறப்பட்டால் உங்கள் கண்களின் முன் இரண்டு வழிகள் தென்படும். ஒன்று

கிழக்குக் கடற்கரை சாலை. மற்றொன்று தேசிய நெடுஞ்சாலை. இரண்டும் ஒரே

தூரம்தான். மூன்று மணி நேரம் உங்கள் பந்தையக் குதிரை சாலையில் பறந்தால்

நீங்கள் பாண்டிச்சேரியில் தரையிறங்குவீர்கள்.

Photo Courtesy: joseph jayanth

பிச்சாவரம் அது இயற்கையின் வரம்:

பிச்சாவரம் அது இயற்கையின் வரம்:

பவளப்பாறைகளுக்கும்,கடலாய்வுகளுக்கும்,சதுப்பு நிலக்காடுகளுக்கும் பேர்போன

பிச்சாவரம் உண்மையிலேயே அது தென்னிந்தியாவிற்கு இயற்கை தந்த

வரமாகும். இங்கு நாட்டுப் படகுகளும்,இயந்திரப் படகுகளும் போட்டி

போட்டுக்கொண்டு அன்னப் பறவைபோல் நீரில் தவழ்ந்து

விளையாடிக்கொண்டிருக்கும். காடு மற்றும் கடற்கரையைப் பார்வையிட

விருப்பினால் சிறிய படகுகளில் ஏறி அமருங்கள். அவை கால்வாய் வழியே

சீறிச்சென்று சிலிர்ப்பை உண்டாக்கும்.

Photo Courtesy: VasuVR

பிச்சாவரத்திலிருந்து நீர்வழிமார்க்கமாக தரங்கம்பாடிக்கு:

பிச்சாவரத்திலிருந்து நீர்வழிமார்க்கமாக தரங்கம்பாடிக்கு:


பிச்சாவரத்திலிருந்து நீங்கள் தரங்கம்பாடிக்குச் செல்ல ஆயத்தமானால் சிறிய

படகினை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சாலை வழியே பயணித்த

உங்களுக்கு நீர் வழிப்பயணம் ஓர் புதுத்தெம்பை ஊட்டும். சிறிய கால்வாயில்

நீரைக் கிழித்து நீந்தும் படகு,கரையின் இரு ஓரங்களிலும் காட்டு மரங்கள்,துள்ளி

விளையாடும் கயல் கூட்டம்,மீனைப் பிடிக்க நீரின் மேற்பரப்பில் சீறிப்பாயும்

நாரைக்கூட்டம் என எழில் வண்ணக் காட்சியைக் காணும் போது இறைவன்

படைப்பாற்றலின் வல்லமையை உணர்வீர்கள்.

கண்களுக்கு மட்டும் நீங்கள் இன்பம் நுகர்ந்தால் போதுமா?வயிற்றுக்கும்

நாவிற்கும் இன்பம் பெற வேண்டாமா? கவலை வேண்டாம். அங்கு உணவுச்

சாலைகளுக்குப் பஞ்சமில்லை. முதலில் வயிற்றை நிரப்பிக்கொள்ளுங்கள்.உள்ளம்

தானாகவே நிறைவு பெறும்.

Photo Courtesy: Ashwin Kumar

கடல் அலைகள் தரையைத் தகர்க்கும் தரங்கம்பாடி:

கடல் அலைகள் தரையைத் தகர்க்கும் தரங்கம்பாடி:

தரங்கம்பாடி 17ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை டேனிஷ் நாட்டின்

மேலாதிக்கத்தில் இருந்தது.அதன் பிறகு டேனிய - ஆங்கிலப் போர்

தரங்கம்பாடியை பிரிட்டீஸ்காரர்களுக்குத் தாரை வார்த்தது.

அங்கு கம்பீரத்துடன் எழுந்து நின்ற டேனிஷ் கோட்டை தன் வலிமையால் கடல்

அலைகளைப் பார்த்து எக்காளமிட்டது. இன்றோ பழமையின் எச்சங்களுடன்

புதுப்பொலிவு இழந்து விளங்குகிறது. இது துறைமுக நகரமாதலால் இங்கு

வணிகமும் தழைத்தோங்கியிருந்தது.

டேனிஷ் நாட்டின் மன்னனுக்கும் தஞ்சை மன்னனுக்கும் ஏற்பட்ட வணிக

உடன்படிக்கையின் விளைவாய் டேனியர்கள் தரங்கம்பாடி நகரில்

குடிபுகுந்தனர்.தரங்கம்பாடியில் டேனியர்களின் கொடிபறக்கக் காரணமாக இருந்த

கதை இதுவே.

தரங்கம்பாடி டேனிஷ்பர்க் கோட்டையைப் பார்வையிடச்செல்லும் பயணிகளுக்கு

இதோ ஒரு பெட்டிச்செய்தி. கோட்டையை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க 36

பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்ததாம். ஐயோ! பதறாதீர்கள். இன்று அந்த

பீரங்கிகளெல்லாம் அருங்காட்சியகத்தில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. நீங்கள்

சுதந்திரமாகச் சென்று கோட்டையைப் பார்வையிடலாம். ஆசனம் போட்டு

அமரலாம். ஆனால் சொந்தமாக்கிக்கொள்ள மட்டும் முடியாது.

Photo Courtesy: Joseph Jayanth

தரங்கம்பாடியில் நீங்கள் தங்கும் வேளையில்:

தரங்கம்பாடியில் நீங்கள் தங்கும் வேளையில்:

தரங்கம்பாடியில் நீங்கள் தங்க நேர்ந்தால் உங்களைத் தன் மடியில் அமர்த்தி

எழிலை விவரிக்கக் காத்திருக்கிறது பீங்குவோ ஆன் தி பீச்,தமிழ்நாடு ஹவுஸ்

போன்ற விடுதிகள். இன்னொரு பெட்டிச் செய்தி. பங்ளா ஆன் தி பீச் உணவு

ரகங்களின் சுவை நாவில் எச்சில் ஊற வைக்கிறதாம். பிறகு வேறென்ன?

சுற்றிப்பார்க்கக் கிளம்ப வேண்டியது தானே.

Photo Courtesy: Sankara Subramanium

 டேனிஷ்பர்க் கோட்டைக்குள்:

டேனிஷ்பர்க் கோட்டைக்குள்:

டேனீஸ்பர்க் கோட்டைக்குள் நீங்கள் நுழைந்ததும் நீங்கள் காண வேண்டிய

இடம் அருங்காட்சியகமே. ஓர் ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து நுழைவுச்

சீட்டை வாங்கினால் கடந்த கால வரலாறு உங்கள் கரங்களில் தவழும். இந்த

அருங்காட்சியகம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உங்களுக்காகக்

கடைவிரித்துக் காத்திருக்கும்.

Photo Courtesy: Joseph Jayanth

வரவேற்கும் நுழைவு வாயில்:

வரவேற்கும் நுழைவு வாயில்:

டேனிஷ்பர்க் கோட்டைக்குள் நுழைய டவுன் கேட் என்ற நுழைவு வாயிலை

நீங்கள் கடந்தாக வேண்டும். கவலைப்படாதீர்கள். கட்டுக்காவலெல்லாம் அங்கு

இல்லை.

Photo Courtesy: Joseph Jayanth

 தேவாலய மணியோசை:

தேவாலய மணியோசை:

1701ல் சீயோன் திருச்சபை தரங்கம்பாடியில் கட்டப்பட்டது. தென்

ஆசியாவிலேயே பழமையான தேவாலயங்களுள் இதுவும் ஒன்று. இந்த

தேவாலயம் நீங்கள் காண வேண்டிய அற்புதக் கலைச் செல்வம். இங்கு ஒலிக்கும்

தேவாலய மணியோசை எல்லாம் வல்ல தேவனான இயேசு பிரானின் மடியில்

தவழ்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும்.

Photo Courtesy: Chenthil

 தகவல் தரும் தரங்கம்படி கடலோர அருங்காட்சியகம்:

தகவல் தரும் தரங்கம்படி கடலோர அருங்காட்சியகம்:

தரங்கம்பாடி கடலோர அருங்காட்சியகம் 2004 ல் உலகையே உலுக்கிய

சுனாமிக்குத் தப்பவில்லை. இருப்பினும் இது பழைய பொலிவுடன் தன்

பணிகளைச் செய்துவருகிறது. நீங்கள் இங்கு சென்றால் பழைய

வரைபடங்கள்,அஞ்சல் அட்டைகள்,வரலாற்று காலத்திற்கு வழிகாட்டும் புத்தகங்கள்

ஆகியவற்றை வாங்கி மகிழலாம். இங்கு செல்வோர் அரிய பொருட்களை

சொந்தமாக்கிக் கொள்ள பெரிய பையை உடன் எடுத்து செல்லலாம்.

Photo Courtesy: Joseph Jayanth

மகிமைதரும் மாசிலாமணிநாதர்:

மகிமைதரும் மாசிலாமணிநாதர்:

மூன்று கோபுரங்களால் பழமையின் பெருமைக்கு முரசு கொட்டும் இக்கோயில்

பாண்டியர் காலத்திற்கு முற்பட்டது. பழைய கல்வெட்டுச் சான்றுகளின் படி

இக்கோயில் 1306ல் கட்டப்பட்டதாகும். இரு கோபுரங்கள் கடலில் மூழ்கியள்ளன.

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனைப் போல.

Photo Courtesy: Joseph Jayanth

கல்லான உள்ளத்தைக் கனியாக்க இன்றே இல்லத்திலிருந்து கிளம்புங்கள்

தரங்கம்பாடிக்கு.

Read more about: travel temple india tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X