Search
  • Follow NativePlanet
Share
» »மூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா?

மூனாறிலிருந்து மேகமலை - அசத்தல் பயணம் போலாமா?

இந்த வீக் எண்ட் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது மூனாறிலிருந்து மேகமலை அசத்தல் பயணம். நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தாலும், சனிக்கிழமை அதிகாலைக்குள் திண்டுக்கல்லை அடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள

By Udhaya

இந்த வீக் எண்ட் பயணத்தில் நாம் பார்க்கவிருப்பது மூனாறிலிருந்து மேகமலை அசத்தல் பயணம். நீங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்தாலும், சனிக்கிழமை அதிகாலைக்குள் திண்டுக்கல்லை அடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நமது பயணத் திட்டப்படி, சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திண்டுக்கலில் இருந்து புறப்பட்டு காலையில் மூனாறில் குதூகலித்துவிட்டு, பின் இரவுக்குள் மேகமலை வந்தடைந்து, பின் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மேகமலையில் சுற்றுலா காண்போம்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் 428 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதுவே பெங்களூருவிலிருந்து 373கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வாருங்கள் சுற்றுலாவை திட்டமிடுவோம்

திட்டமிடல்

திட்டமிடல்

திண்டுக்கலிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, காலை 8 அல்லது 9 மணிக்கெல்லாம் மூனாறு வந்தடையவேண்டும்.

மூனாறில் எக்கோ பாயிண்ட், ஆனையிறங்கல் நீர்த்தேக்கம், மலையேற்றம், பொத்தன்மேடு, ஆட்டுக்கல், மூனுளி, இரவிக்குளம் தேசியப்பூங்கா, ராஜமலா, நாடுகாணி, பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களை அன்று முழுவதும் பார்வையிடுகிறோம்.

மூணாறிலிருந்து மேகமலை 130கிமீ தொலைவில் உள்ளது. 4 மணி நேரப் பயணத்தில் அடையமுடியும். எனவே, இரவு 8 மணிக்கெல்லாம் அங்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின் அடுத்த நாள் காலை சுற்றுலாவுக்கு செல்லலாம்.

மேகமலையில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நேரமிருந்தால் சுருளி நீர்வீழ்ச்சி, போடிமெட்டு, பெரியகுளம், கௌமாரியம்மன் கோயில், சோத்துப்பாறை அணைக்கட்டு, மாவூத்து, கைலாசநாதர் கோயில், தீர்த்த தொட்டி, சின்ன சுருளி நீர்வீழ்ச்சி, தேவதானப் பட்டி அம்மன் கோயில், கும்பக்கரை ஆகியவற்றையும் பார்க்கலாம்.

Mprabaharan

பயணத்தை தொடங்குவோம்

பயணத்தை தொடங்குவோம்


அதிகாலை 4 மணி

அனைத்தையும் எடுத்துக்கொண்டு, வண்டியில் கிளம்புவோம். திண்டுக்கலில் இருந்து மூணாறுக்கு மூன்று வழிகளில் பயணிக்க முடியும். வத்தலகுண்டு வழியாக முதல் வழியும், ஒட்டன் சத்திரம் வழியாக இரண்டு வழிகளிலும் பயணிக்கமுடியும். இரண்டாவது வழியானது சின்னக்கண்பாளையம் வழியில் செல்லும். அதை மாற்று வழியாக மட்டும் வைத்துக்கொள்ளலாம். நம் செல்லும் பாதையாக வத்தலகுண்டு - தேனி - போடி - முந்தல் - தேவிக்குளம் இருக்கும்.

ஒரு மணி நேரம் கூடுதல் எடுத்துக்கொண்டாலும், காலை 9 மணிக்கெல்லாம் மூனாறை வந்தடைவோம்.

wiki

நேரம் 9 மணி - காலை சிற்றுண்டி

நேரம் 9 மணி - காலை சிற்றுண்டி

மூனாறில் காலைச் சிற்றுண்டி கடைகள் நிறைய இருக்கும். அங்கு காலை உணவை கழித்துவிட்டு, சுற்றுலாவுக்கு தயாராக வேண்டும். எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கவிரும்புபவர்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது சிறந்தது.

நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்களாக நாங்கள் உங்களுக்கு பரிந்துரைப்பது இவைதான்

எக்கோபாயிண்ட் எனப்படும் எதிரொலி முனையம்

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

பொத்தன்மேடு

ஆட்டுக்கல்

இரவிகுளம் தேசிய பூங்கா

எஞ்சிய இடங்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயணித்து ரசியுங்கள். காலைச் சிற்றுண்டிக்கு பிறகு நாம் முதலில் செல்ல இருப்பது பொத்தன்மேடு மற்றும் ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

பொத்தன்மேடு

பொத்தன்மேடு

மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளதால், பயணிகள் மறக்காமல் இந்த கிராமத்துக்கு விஜயம் செய்வது நல்லது. இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் மதுரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். இந்த ரம்மியமான கிராமப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் மிகப்பிடித்தமான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

Vasant944

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது. மூணாருக்கும் பள்ளி வாசலுக்கும் இடையே அமைந்துள்ளதால் பள்ளிவாசலுக்கும் செல்லும்போதே பயணிகள் இந்த ஆட்டுக்கல் எனும் நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம்.

இரவிக்குளம் தேசியப் பூங்கா

இரவிக்குளம் தேசியப் பூங்கா

இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. பல்லுயிர்ப்பெருக்கச் சூழல் நிறைந்ததாக கருதப்படும் இந்த இயற்கைப்பூங்கா வனப்பகுதி மற்றும் காட்டுயிர் பராமரிப்பு துறையின் கட்டப்பாட்டின் கீழ் உள்ளது. நீலகிரி தாஹிர் எனப்படும் வரையாடு இந்த பூங்காவில் அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாப்பயணிகளும் பார்வையாளர்களும் ராஜமலா என்றழைக்கப்படும் சுற்றுலாப்பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடவேண்டிய அம்சமாகும். இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை

இந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு முடிந்த வரை மதிய உணவை சாப்பிட்டுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் உங்களுக்கு விருப்பமான நேரத்தில் சாப்பிட உணவை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்.

Arayilpdas

எக்கோ பாயிண்ட்

எக்கோ பாயிண்ட்

எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது.

இந்த எக்கோ பாயிண்ட் ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற் போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக தரிசனம் அளிக்கின்றன.

ஆனயிறங்கல்

ஆனயிறங்கல்

ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இங்குள்ள தேயிலை தோட்டங்கள், அணி மற்றும் ஏரிக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். பரந்து நீளும் வனப்பகுதியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேயிலை தோட்டங்களும் இந்த ஸ்தலத்தை சூழ்ந்துள்ளன. இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது.

Rojypala

மாலை - விடுதி

மாலை - விடுதி

மாலை 4மணிக்கெல்லாம் விடுதியில் வந்து களைப்பு நீக்கி கொள்ளுங்கள். ஒரு மணி நேர ஓய்வுக்கு பிறகு, நாம் மேகமலை நோக்கி பயணிக்கவிருக்கிறோம். 4 மணி நேரத்தில் மேகமலையை அடைந்துவிடமுடியும். வழியில் சாப்பிடத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருப்பது நம் பயண நேரத்தை குறைக்க உதவும். மேகமலை வந்தடைந்ததும் களைப்பு நீக்கிக்கொள்ளலாம்.

புத்துணர்ச்சிக்காக இவற்றை செய்யுங்கள்

உங்களின் இந்த நாள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பற்றி சில நினைவுகளை செலுத்துங்கள். குழந்தைகளுடன் சென்றிருந்தால், அவர்களிடம் நாம எங்கெல்லாம் போனோம்னு ஒரு ஸ்டோரி எழுது பாக்கலாம் என்று அவர்களுக்கு சுற்றுலாவை ஊக்கப்படுத்துங்கள். இரவு உணவை கழித்துவிட்டு, இங்கேயே ஓய்வெடுங்கள். காலையில் மேகமலையைச் சுற்றிப் பார்க்கலாம்.

Sivaraj.mathi

மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த இடத்தின் பல்லுயிர்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு இவ்விடத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளது.

மேகமலைப்பகுதியில் விலங்கினங்கள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லாங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை நீங்கள் காண முடியும்.

தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன. 'வேகமான காற்று வீசும் மலைகள்' என்றும் அழைக்கப்படும் மேகமலை தான் மேகமலை நீர்வீழ்ச்சி மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகளின் பிறப்பிடமாகும்.

மேகமலையில் எவ்வளவு நேரம் இருக்க விரும்புகிறீர்களோ இருந்துவிட்டு ஊரை நோக்கி திரும்புங்கள்.

குறிப்பு - உங்களுக்கு இரவிலேயே மேக மலை வர விருப்பமில்லை என்றால் மூனாறிலேயோ அல்லது அருகிலுள்ள வேறு இடங்களிலோ தங்கி ஓய்வெடுத்துவிட்டு காலையில் வரலாம். உங்களது விருப்பத்தை பொறுத்து பயணத் திட்டத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள்.
Sivaraj.mathi

Read more about: travel munnar megamalai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X