மிகச் சிறிய வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் தென்பகுதியில் அமைந்துள்ள உதய்பூர் ஒரு சிறிய ஆனால் பிரபலமான நகரம் ஆகும். இது தென் திரிபுரா மாவட்டத்தின் தலைமையகமாக உள்ளது. ராஜஸ்தானின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான உதய்பூரின் பெயரை பகிர்ந்து கொண்டுள்ள இந்த திரிபுரா உதய்பூருக்கும் ராஜஸ்தானின் உதய்பூருக்கும் பெயரில் மற்றுமே ஒற்றுமை. மற்றபடி இது முற்றிலும் ராஜஸ்தான் உதைபூரிலிருந்து வேறுபட்ட ஒரு நகரம்.
உதய்பூரில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்!
உதய்பூர், அதில் உள்ள கோவில்களுக்காக பிரபலமானது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவில் நகரத்திற்கு வரும் பக்தர்கள் இங்குள்ள உள்ளூர் தேவி, திரிபுரா சுந்தரி மற்றும் பல தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர்.
உதய்பூர் ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த இடத்தை சுற்றி ஏராளமான ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகள் இந்த அழகிய இடத்தின் அழகை மேலும் அதிகரிக்கின்றன.
உதய்பூரில் உள்ள அனைத்து ஏரிகளும் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். அவற்றுள் தானி சாகர், மகாதேவ் டிகி, ஜகனாத் டிகி, மற்றும் அமர் சாகர் போன்ற ஏரிகள் முக்கியமானவை.
உதய்பூர், அகர்தலாவிற்கு அடுத்து திரிபுராவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மேலும் இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் தலைமையமாக உள்ளது. இந்த நகரத்தில் பாய்ந்து ஓடும் கோமதி நதியானது இந்த நகரத்தின் நீர் மற்றும் நில வளத்தை அதிகரித்து விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றுகிறது.
உதய்பூர் அகர்தலாவில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அகர்தலாவில் இருந்து தனியார் வாகனங்கள் மற்றும் மாநில போக்குவரத்து பேருந்துகளைப் பயன்படுத்தி உதய்பூரை எளிதாக அடையலாம்.
உதய்பூரில் உள்ள பல கோயில்களுக்கு மத்தியில், 1501-ம் ஆண்டு கட்டப்பட்ட திரிபுரா சுந்தரி கோவில் பிரசித்தி பெற்றது. இது திரிபுரா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் அதிகமான பக்தர்கள் வருகை தரும் கோவிலாகும்.
மடாபாரி என அறியப்படும் இந்தக் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலுக்கு மிக அருகில் கல்யாண் சாகர் என்கிற ஒரு பெரிய ஏரி உள்ளது.
உதய்பூருக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மற்றொரு பிரபலமான கோவிலான புவனேஸ்வரி அம்மன் கோவிலை தரிசிக்கலாம். புவனேஸ்வரி அம்மன் கோவில் அன்னை புவனேஸ்வரிக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.
இங்குள்ள பிற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக நஸ்ருள் க்ரான்த்ஹர் பொது நூலகம் அறியப்பட்டு வருகிறது. இது புகழ் பெற்ற வங்காளக் கவிஞரான காஸி நஸ்ருள் இஸ்லாம் நினைவாகக் கட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications