மேற்கு வங்காளம் சுற்றுலா -  சிறப்பான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களின் பூமி!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள  மேற்கு வங்காள மாநிலம் வடக்கே இமயமலைப்பகுதியிலிருந்து தெற்கே வங்காள விரிகுடா வரை பரவியுள்ளது. ஒரு காலத்தில் ஆங்கிலக்காலனிய ஆட்சியின் கேந்திரமாக விளங்கிய இம்மாநிலத்தில் இன்றும் அக்காலத்துக்குரிய அம்சங்களை பழமையான கட்டிடங்கள் மற்றும் கட்டிடக்கலை மூலம் தரிசிக்கலாம். சுற்றுலா அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலம் பழமையும் நவீனமும் கலந்த ஒரு பாரம்பரிய பூமியாக பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.

புவியியல் அமைப்பு

மேற்கு வங்காள மாநிலம் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் அமைப்பை பெற்றிருக்கிறது. இதன் வடபகுதி இமயமலைப்பகுதியை ஒட்டியதாக உயரத்தில் அமைந்துள்ளது.

அங்கு சிக்கிம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்துடன் இம்மாநிலம் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது. கங்கை ஆற்றுப்படுகை இம்மாநிலத்தின் பெரும் நிலப்பரப்பில் பரவியுள்ளது.

அதனை ஒட்டி தெற்கே அமைந்துள்ள சுந்தர்பன் காடுகள் பசுமையான இயற்கைச்செழிப்புடன் வீற்றிருக்கின்றன. மேலும் இம்மாநிலத்தை ஒட்டி வடக்கில் நேபாள் மற்றும் பூடான் போன்ற நாடுகளும் கிழக்கில் பங்களாதேஷ் நாடும் அமைந்துள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் விரும்பும் வித்தியாசமான புவியியல் அமைப்பை இம்மாநிலம் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

கொல்கத்தா – மூன்று கிராமங்களின் கதை

காளிகட்டா, கோவிந்த்பூர் மற்றும் சூடாநுடி என்ற மூன்று கிராமங்கள் ஒன்று சேர்ந்து கொல்கத்தா என்ற நகரமாக ஆங்கிலேய ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஜாப் சர்னோக் எனும் ஆங்கிலேயர் ஆட்சியாளர் இந்த ஒருங்கிணைப்பை நிறுவியுள்ளார். ஹுக்ளி நதியின் கரையில் உள்ள இந்த பழமையான கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது.

முக்கிய சுற்றுலா நகரமான கொல்கத்தாவிற்கு ‘சிட்டி ஆஃப் ஜாய்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. நோபல் விருது பெற்ற மாமனிதர்களை இந்தியாவிற்கு அளித்துள்ள இந்நகரத்தில் விக்டோரியா மெமோரியல், ஹௌரா பாலம், இந்தியன் மியூசியம், மார்பிள் பேலஸ், காளிகாட் கோயில், பிர்லா பிளானட்டேரியம், ஃபோர்ட் வில்லியம் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள முக்கியமான கட்டிடங்கள் மற்றும் சின்னங்கள் ஐரோப்பிய பாணியிலும்,  பாரம்பரிய ஜமீன் மாளிகைகள் தொன்மையான மேற்கு வங்காள பாணியிலும் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கலை மற்றும் கலாச்சாரம்

ரபீந்த்ரநாத் தாகூரின் “ ஏகலா சோலா ரே” எனும் வரிகள் துவங்கி மாயா தாந்த்ரீக இசை-நடனம்-கதை-பாட்டு யாவும் கலந்த கலை வடிவமான ‘பால்’ நாட்டுப்புறக்கலை வரை மேற்கு வங்காளத்தின் கலாபூர்வ அடையாளமானது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

விதவிதமான நடனக்கலை, ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை பாணிகள் தனித்தன்மையான சிறப்புகளுடன் இம்மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்காளத்துக்கே உரிய நாட்டுப்புற மற்றும் இனஞ்சார்ந்த அடையாள அம்சங்களை உள்ளடக்கிய இந்த கலை வடிவங்கள் உலகளாவிய புகழை பெற்றிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளத்தில் பயணிகள் தவறாது விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு இடமாக இடம் சாந்தி நிகேதன் கல்வி நிலையம் வீற்றிருக்கிறது.

மேற்கு வங்காள மக்களிடையே ‘அட்டா’ எனும் வித்தியாசமான கலாச்சாரம் ஒன்றும் பழக்கத்தில் உள்ளது. ‘அட்டா’ என்பது மக்கள் ஒரு குழுவாக கூடி ஏதேனும் பொது விஷயம் பற்றி விவாதம் மற்றும் கலந்துரையாடலில் ஈடுபடுவதை குறிப்பிடுகிறது.

எந்த விஷயம் வேண்டுமானாலும் இந்த ‘அட்டா’ உரையாடலில் விவாதிக்கப்படலாம். இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாத இந்த பழக்கம் இந்த மக்களின் சிந்தனை மற்றும் மொழி ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றும் சொல்லலாம்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கு தெரு முனைகளில், சந்திப்புகளில் இது போன்ற குழுக்கள் ‘அட்டா’ விவாதங்களில் ஈடுபட்டிருப்பதை காணலாம்.

இனிப்போடு காரமும்! – ருசியான உணவு வகைகள்!!

பெங்காளி உணவுமுறை தற்போது சர்வதேச சமையற்கலை நிபுணர்களால் விரும்பப்படும் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. புவியியல் அமைப்பில் மட்டுமல்லாமல் உணவுமுறையிலும் தனித்தன்மையான அம்சங்களை மேற்கு வங்காள மாநிலம் பெற்றிருக்கிறது.

முகலாய் பிரியாணி மற்றும் முகலாய் பராத்தா ஆகியவற்றோடு மச்சேர் ஜோல் மற்றும் பெங்காளி மீன் குழம்பு போன்றவை இம்மாநிலத்தின் முக்கியமான உணவுவகைகளாக புகழ் பெற்றுள்ளன.

திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!

மேற்கு வங்காள மாநில சுற்றுலாவில் திருவிழாக்கொண்டாட்டங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. துர்க்கா பூஜா, காளி பூஜா, சரஸ்வதி பூஜா, லட்சுமி பூஜா, ஜகதாத்ரி பூஜா ஆகியவை இம்மாநிலத்தின் முக்கியமான திருவிழாக்களாகும்.

இவை யாவற்றிலும் பெண் தெய்வங்களே பிரதான சக்திக்கடவுளாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இவைதவிர, கங்கா சாகர் மேளா எனும் திருவிழாவிலும் வருடாவருடம் ஆயிரக்கணக்கான யாத்ரீக பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

மத, இன வேறுபாடு பார்க்காமல் எல்லா தரப்பு மக்களும் இந்த திருவிழாக்கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இம்மாநிலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

பழமையும் நவீனமும் கலந்த பல்வேறு சுற்றுலா அம்சங்களுடன் மேற்கு வங்காள மாநிலம் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. சுந்தர்பன்ஸ் காடுகள், பக்காலி, முர்த்தி, பிர்பூம், தாராபீத் போன்ற சுற்றுலாத்தலங்கள் இம்மாநிலத்தில் அவசியம் விஜயம் செய்து மகிழ வேண்டியவையாகும்.

இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பிய டார்ஜிலீங் மற்றும் மோங்பாங், பாரம்பரியம் நிரம்பி வழியும் கொல்கத்தா, முர்ஷிதாபாத் மற்றும் உன்னதமான சாந்திநிகேதன்  வளாகம் போன்றவையும் இம்மாநிலத்தில் பயணிகளை உற்சாகப்படுத்த காத்திருக்கின்றன.

பருவநிலை

தென்பகுதியில் வெப்ப மண்டல பருவநிலையையும், வடக்கே உபவெப்பமண்டல பருவநிலையையும்  மேற்கு வங்காள மாநிலம் பெற்றுள்ளது.

கடும் வெப்பமும் ஈரப்பதமும் நிலவும் கோடைக்காலம் மற்றும் குளிருடன் கூடிய குளிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்குவிதமான பருவங்களை இம்மாநிலம் கொண்டுள்ளது. இடத்திற்கேற்றவாறு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவிலான மழைப்பொழிவினையும் மேற்கு வங்காள மாநிலம் பெறுகிறது.

Please Wait while comments are loading...