அஹமதாபாத் நகரத்திற்கு வெகு அருகில் அசர்வா எனும் இடத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை படைப்பாக இந்த படிக்கிணறு அமைப்பு அக்கால கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கலையம்சத்தோடு செதுக்கப்பட்ட தூண்களைக்கொண்டு அடுக்கடுக்காக அமைந்திருக்கும் தளங்களில் வழியாக கீழே உள்ள கிணற்றுக்கு இறங்கி செல்வது போன்ற அமைப்பாக இந்த தாதா ஹரீர் வாவ் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு மாளிகை கோபுர கட்டுமான அமைப்பை வானை நோக்கி உயர்த்தி எழுப்புவதற்கு பதிலாக பூமியில் கீழ் நோக்கி கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த தாதா ஹரீர் வாவ்.
உண்மையில் நிஜத்தில் இந்த ஹரீர் வாவ் எப்படியிருக்கும் என்பதை ஒருபோதும் உங்களால் கற்பனையில் யூகிக்க முடியாது என்பதுதான் உண்மை. இங்குள்ள புகைப்படம் சற்றே இதன் பிரம்மாண்டத்தை உணர்த்த உதவக்கூடும். இருப்பினும் வாழ்நாளில் இந்தியாவில் பார்க்க வேண்டிய கலைப்படைப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.
திரும்பும் இடமெல்லாம் மாயத்தோற்றங்கள் போன்று நேர் வரிசையில் நிற்கும் எண்ணற்ற தூண்கள் மற்றும் எந்த புள்ளியில் நிற்று நோக்கினாலும் கண்களை பறிக்கும் கட்டுமான துல்லியம் என்று இந்த கிணறு அமைப்பு நம்மை மயக்கி சொக்க வைக்கிறது.
அடுக்கடுக்காக கீழ் நோக்கி இறங்கும் தளங்களின் சுவர்களில் சம்ஸ்கிருத மற்றும் அராபிய வாசகங்கள் காணப்படுவதை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு வரலாற்று தரிசனம் என்று சொல்லலாம்.
அக்காலத்தில் நகரத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இந்த கிணறு பயன்பட்டது என்று சொல்லப்பட்டாலும், இதன் பிரம்மாண்டத்தை நோக்கும்போது இது கலைப்படைப்பாக வித்தியாசமான முயற்சியாக அக்கால கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் சிரமமில்லை.
இதனை உருவாக்கியது மனிதர்களா அல்லது கடவுளா என வியக்கும் அளவுக்கு ஒப்பற்ற கட்டிடக்கலை அதிசயமாக இந்த தாதா ஹரீர் வாவ் வீற்றிருக்கிறது.
உச்சி மதியத்தில் இந்த படிக்கிணறு அமைப்பிற்கு விஜயம் செய்வது உகந்தது. அந்நேரத்தில் மட்டுமே சூரியக்கதிர்கள் முற்றாக இந்த கிணறு அமைப்பிற்குள் ஊடுறுவி நுழைந்து வெளிச்சப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications