ரேயக், அய்சால்

ரேயக் எனும் இந்த சிறு கிராமம் அய்சால் நகரத்திற்கு மேற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியின் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த கிராமம் பிரபல்யமாக அறியப்படுகிறது.

இந்த கிராமத்தின் கிழக்குப்பகுதியில் கம்பீரமான மலைப்பாறைச்சிகரங்கள் வித்தியாசமான குகை அமைப்புகளோடு காட்சியளிக்கின்றன. பழங்கால மிசோ இனத்தவர் இப்பகுதியிலுள்ள காடுகளை பாதுகாத்து வந்துள்ளனர்.

மிசோ இனத்தாரின் பாரம்பரியமான குடிசை வீடுகள் இந்த கிராமத்தில் உருவாக்கப்பட்டு மிசோரம் மாநில சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தால் பராமரிக்கப்படுகின்றன.

மிசோ ஊர்த்தலைவர் வீடு, பிரம்மச்சாரிகள் குடியிருப்பு மற்றும் விதவைகள் குடியிருப்பு போன்றவற்றை இக்கிராமத்தில் பார்க்கலாம். இந்த ஒவ்வொரு வீடுகளும் மிசோ இனத்தாரின் பழமையான் பாரம்பரிய அம்சங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

இந்த ரேயக் கிராமப்பகுதியில் ஆண்டுதோறும் அந்தூரியம் திருவிழா எனும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா அந்தூரியம் எனும் மலரின் அறுவடைக்காலத்தில் அதன் விற்பனையை கூட்டும் விதமாக நடத்தப்படுகிறது.

பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், ஃபேஷன் நிகழ்ச்சிகள் போன்றவை இத்திருவிழாக்காலத்தில் நடத்தப்படுகின்றன.

ரேயக் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியும் இயற்கை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. பல்வேறு அரிய பறவை இனங்களை இங்கு பார்க்கலாம்.

இங்குள்ள மலைப்பகுதியில்  பெரிக்ரைன் ஃபால்கன் எனும் பறவை முக்கியமானதாக கருதப்படுகிறது. இயற்கைக்காட்சிகளுக்கு மட்டுமல்லாமல் டிரக்கிங் மலையேற்றத்துக்கு உகந்த இடமாகவும் இந்த ரேயக் சுற்றுலாத்தலம் பிரசித்தி பெற்றுள்ளது. அய்சால் நகரத்திலிருந்து டாக்சிகள் அல்லது சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த ரேயக் கிராமத்தை வந்தடையலாம்.

Please Wait while comments are loading...