பீஹார் சுற்றுலா – பௌத்தம், ஜைனம், நாளந்தா மற்றும் குப்தர்களின் பொற்கால பூமி!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது இடத்தையும் நிலப்பரப்பின் அடிப்படையில் 12வது இடத்தையும் பீஹார் மாநிலம் வகிக்கிறது. விஹார் (பௌத்த மடாலயம்) எனும் சொல்லிலிருந்து இந்த பீஹார் எனும் பெயர் பிறந்துள்ளது.

ஜைனப்பிரிவினர், ஹிந்துக்கள் மற்றும் முக்கியமாக புத்த மதத்தை சேர்ந்தோருக்கு இந்த பீஹார் மாநிலம் ஒரு புண்ணிய யாத்திரை பூமியாகவும், ஆன்மீக கேந்திரமாகவும் இருந்து வருகிறது.

இம்மாநிலத்தில் உள்ள போத்கயா எனும் இடத்தில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றார் என்பதும் இதன் விசேஷ அடையாளங்களில் ஒன்றாகும்.

ஜைன மதத்தை தோற்றுவித்த மஹாவீரர் எனும் யோகியும் இம்மாநிலத்தில்தான் அவதரித்து மறைந்துள்ளார். மேற்கில் உத்தரப்பிரதேசத்தையும், வடக்கில் நேபாளத்தையும், கிழக்கில் மேற்கு வங்காளத்தின் வடபகுதியையும், தெற்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் பீஹார் மாநிலம் தனது எல்லைகளாக கொண்டுள்ளது.

பீஹார் மாநிலம் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்

பீஹார் மாநிலத்தில் ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், வெந்நீர் ஊற்றுகள் என்று ஏராளமான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. புராதன காலத்தில் இந்த பீஹார் பிரதேசம் அரசியல், கல்வி, நாகரிகம் மற்றும் மதம் போன்றவற்றின் உன்னத கேந்திரமாக திகழ்ந்திருந்தது.

பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவுக்கு அருகில் முறையே 5ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா ஆகிய கல்விக்கூடங்கள் இன்றைய பல்கலைக்கழக முறைக்கு ஒரு முன்னோடியாக இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கல்வி மையங்கள் சர்வதேச அளவிலும் அக்காலத்தில் பிரசித்தமாக அறியப்பட்டிருக்கின்றன.

இந்துத்துவம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் இஸ்லாம் போன்ற அனைத்து மதங்களிலும் இந்த மாநிலம் ஒரு முக்கிய ஆன்மீக கேந்திரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மஹாபோதி  புத்த கோயில் இந்த மாநிலத்தில்தான் அமைந்திருக்கிறது.

பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ள மஹாத்மா காந்தி சேது எனப்படும் ஆற்றுப்பாலம் 1980ம் ஆண்டுகளின் துவக்கத்தில் உலகில் மிக நீண்ட பாலமாக புகழ் பெற்றிருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.

பாட்னா மற்றும் ராஜ்கீர் ஆகிய இரண்டு நகரங்களும் பீஹார் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கியமான வரலாற்று நகரங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

பீஹார் மாநிலத்தின் வரலாற்றுப்பெருமையும், கலாச்சாரப்பாரம்பரியமும்!

புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு புண்ணிய பூமியாக விளங்குவது மட்டுமல்லாமல் ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கும் இம்மாநிலம் ஒரு முக்கிய யாத்திரை ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இம்மாநிலத்தில் உள்ள போத்கயா ஸ்தலத்தில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றார். அதற்கு அருகிலேயே 5ம் நூற்றாண்டில் மிகப்பிரசித்தமாக விளங்கிய நாளந்தா கல்வி நிலையம் பௌத்த மரபுக்கான பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறது.

ராஜ்கீர் எனும் மற்றொரு ஸ்தலம் புத்தர் மற்றும் மஹாவீரர் ஆகிய இரண்டு ஞானிகளுடனும் சம்பந்தப்பட்டிருக்கும் வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது. ஜைனத்தை தோற்றுவித்த மஹாவீரர் இந்த ஸ்தலத்தில் பிறந்து முக்தியும் பெற்றதாக கூறப்படுகிறது.

புத்த மதம் பற்றி அதிக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடமாக பீஹார் மாநிலத்தில் உள்ள போத்கயா நகரம் அமைந்துள்ளது. அது தவிர ராஜ்கீர், சஸராம் மற்றும் நாளந்தா போன்ற இடங்களும் பயணிகள் தவறவிடக்கூடாத இடங்களாகும்.

புராதன காலத்தில் கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவை தழைத்தோங்கிய பூமியாக பீஹார் மாநிலம் இருந்து வந்துள்ளது. இப்பகுதியில் இருந்த மகத நாட்டில் தோன்றிய குப்த சாம்ராஜ்ஜியம் கி.மு 240ம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் பொற்கால ஆட்சியாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இந்த ஆட்சிக்காலத்தில்தான் இந்திய நாடு கணிதம், அறிவியல், வான சாஸ்திரம், வணிகம், மதம், இந்திய தத்துவ மரபு போன்ற அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருந்திருக்கிறது.

விக்ரம்ஷிலா மற்றும் நாளந்தா ஆகிய இரண்டு கல்வி நிலையங்களும் இந்தியாவின் புராதன பல்கலைக்கழகங்களாக வரலாற்றியல் நிபுணர்களால் போற்றப்படுகின்றன.

கி.பி 400 ம் ஆண்டிலிருந்து கி.பி 1000 த்துக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு பௌத்தத்தின் ஆதிக்கம் குறைந்து இந்துத்துவத்தின் வளர்ச்சி துவங்கியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம் பல இந்து மன்னர்கள் புத்த குருமார்களை பெரிதும் ஆதரித்து பிரம்மவிஹாரங்கள் எனப்படும் புத்த மடாலயங்கள் கட்டவும் உதவியிருக்கின்றனர்.

உணவு, திருவிழா மற்றும் பண்டிகைகள்!

சுவையான வித்தியாசமான உணவு வகைகள் பீஹார் மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். பௌத்தம் சிறந்து விளங்கிய பூமி என்பதால் இங்கு பெரும்பாலும் சைவ உணவுப்பண்டங்களே பிரதான அம்சங்களாக இருந்து வந்துள்ளன.

இருப்பினும் அசைவப்பிரியர்கள் விரும்பும் உணவுவகைகளும் தற்போதைய கலாச்சாரத்தில் இடம் பிடித்துவிட்டன. சட்டு பராத்தா எனும் உணவுவகை இம்மாநிலத்தில் வெகு பிரசித்தம். இது பொறிக்கப்பட்ட பட்டாணி மாவு மற்றும் காரமான உருளைக்கிழங்கு மசியல் போன்றவை பொதிக்கப்பட்ட பராத்தா வகையாகும்.

சாத் எனும் புராதன திருவிழா ஒன்று பீஹார் மாநிலத்தில் வருடம் இரண்டு முறை விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இது கோடைக்காலத்தில் சைதி சாத் என்ற பெயரிலும், தீபாவளிப்பண்டிகைக்கு பின் ஒரு வாரம் கழித்து கார்த்திக் சாத் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த சாத் திருவிழா சூரியனை துதித்து நிகழ்த்தப்படும் திருவிழாவாகும். இந்த திருவிழா நாளில் சடங்குக்குளியலை முடித்துவிட்டு விடியற்காலையிலும், அந்தி வேளையிலும் சூரியனை வணங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பெரும்பாலும் இந்த சடங்குக்குளியல் ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சாத் திருவிழா மட்டுமல்லாமல் ஏனைய முக்கிய இந்திய பண்டிகைகளும் பீஹார் மாநிலத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. மகர சங்கராந்தி, சரஸ்வதி பூஜா மற்றும் ஹோலி போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தீபாவளி பண்டிகை முடிந்து அரை மாதம் கழித்து இங்கு சோனேபூர் கால்நடை சந்தை நடைபெறுகிறது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாகும். சோனேபூர் நகரத்தில் கண்டக் ஆற்றின் கரையில் இந்த சந்தை கூடுகிறது.   

Please Wait while comments are loading...