போத்கயா – பௌத்த மரபின் ஆணி வேர்!

பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா நகரம் வரலாற்றுக்காலத்தில் உருவேலா, சாம்போதி,  வஜ்ராசனா மற்றும் மஹாபோதி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆன்மிக அனுபவங்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்கள் ஆகிய இரண்டும் கலந்த சிறப்பம்சங்களோடு இது பயணிகள் மற்றும் யாத்ரீகர்களை வரவேற்கிறது. விஹார் என்று அழைக்கப்படும் புத்தமடாலயங்கள் ஏராளமாக அமைந்திருப்பதால் பீஹார் எனும் பெயர் இந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

பௌத்த மரபு மற்றும் அது சார்ந்த  ஆன்மீக நம்பிக்கைகளில் இந்த போத்கயா நகரம் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பௌத்தம் மட்டுமல்லாமல் இதர மதப்பிரிவுகளை சேர்ந்த வழிபாட்டுத்தலங்களும் இங்கு நிரம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

புத்தமதத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் போத்கயா நகரம் முக்கியமான ஒரு புனிதயாத்திரை ஸ்தலமாக நெடுங்காலமாக திகழ்ந்து வருகிறது. தனக்கென ஒரு அடையாளம் மற்றும் தனித்தன்மையோடு காட்சியளிக்கும் இந்த நகரம் அமைதியின் நடுவே அழகுடன் வீற்றிருக்கிறது.

வரலாற்றுப்பின்னணி!

பௌத்த புனித நூல்களின்படி, கௌதம புத்தர் இப்பகுதியில் ஓடிய பால்கு ஆற்றங்கரையில் இருந்த ஒரு போதி மரத்தின் அடியில் தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இங்கு புத்தர் தன் மனதை அழுத்திய பல ஆன்மிக கேள்விகளுக்கான பதில்களை உணர்ந்து ஞானோதயம் பெற்று ஒரு யோகியாக மாற்றமடைந்தார்.

இந்த சம்பவம் மற்றும் இந்த  போத்கயா நகரம் ஆகியவை வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பதோடு ஃபாகியான் மற்றும் யுவான் சுவாங் ஆகிய வரலாற்று பயணிகளின் குறிப்புகளிலும் முக்கியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

13ம் நூற்றாண்டில் துருக்கிய படைகள் இப்பகுதியை ஆக்கிரமைக்கும் வரை இந்த போத்கயா நகரம் ஒரு முக்கிய பௌத்த ஆன்மீக கேந்திரமாக புகழுடன் விளங்கி வந்திருக்கிறது.

இப்படி ஒரு முக்கியமான வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளதால் போத்கயா நகரம் ஒரு முக்கியமான யாத்ரீக சுற்றுலாத்தலமாக இந்தியாவில் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை.

புத்தரின் மறைவுக்குப்பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து மௌரிய பேரரசர் அசோகர் புத்த மார்க்கத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டு தன் ஆட்சிக்காலத்தில் நாடெங்கும் பல புத்த மடாலயங்களையும், நினைவுத்தூண்களையும் நிறுவினார்.

போத்கயாவை ஒட்டிய பராபர் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் அமைந்திருக்கும் பராபர் குடைவறை அமைப்புகள் அக்காலத்திய கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றாக அமைந்திருக்கின்றன. பிரம்மாண்டமான வாசல்கள் மற்றும் அப்பழுக்கற்ற உட்புற குடைவு அமைப்புகள் இங்குள்ள பாறைக்குன்றுகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

போத்கயா மற்றும் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்

பராபர் குடைவறை அமைப்புகள் தவிர மஹாபோதி கோயில், விஷ்ணுபாத் கோயில், போதி மரம், துங்கேஷ்வரி குகைக்கோயில்கள் மற்றும் ஜமா மஸ்ஜித் போன்றவை போத்கயா நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

இவை மட்டுமல்லாமல், எண்பது அடி உயர புத்தர் சிலை, தாமரைத்தடாகம், புத்தா குண்ட், பூடான் புத்த மடாலயம், பர்மிய கோயில், சீனக்கோயில் மற்றும் மடாலயம், ராஜ்யதனா, பிரம்ம யோனி, இன்டர்நேஷனல் புத்திஸ்ட் ஹவுஸ் மற்றும் ஜப்பானிய கோயில், தாய் கோயில் மற்றும் மடாலயம், திபெத்திய மடாலயம் மற்றும் ஒரு தொல்லியல் அருங்காட்சியகம் போன்ற அம்சங்களும் இந்த நகரத்தில் காணவேண்டிய சிறப்பம்சங்களாகும்.

இதுபோன்ற பல்வேறு ஆன்மிக அம்சங்கள் யாவுமே போத்கயா நகரத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை வெளிச்சப்படுத்துகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் யாத்ரீகர்கள் இங்குள்ள பௌத்த ஸ்தலங்களில் புனித நூல்களை வாசித்தபடி தியானத்தில் ஈடுபட்டிருக்கும் அற்புதமான காட்சியை இங்கு காண முடியும்.

கிரிதகுடா

ராஜ்கீர் மலைக்கு செல்லும் வழியில் இந்த கிரிதகுடா எனும் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. ராஜ்கீர் மலையில் மருத்துவக்குணங்கள் நிறைந்த வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி நீராடு துறைகள் உள்ளன. மண் மணம் வீசும் இந்த அமைதி ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் இதன் புராதன எழிலில் மனதை பறி கொடுக்கின்றனர். புத்தர் உபதேச உரை நிகழ்த்திய இடமாக கருதப்படும் இந்த ராஜ்கீர் ஸ்தலம் போத்கயாவிலிருந்து 75 கி.மீ தூரத்தில் உள்ளது.

போத்கயா நகரின் திருவிழாக்கள்

கௌதம புத்தரின் பிறந்த நாளான புத்த ஜயந்தி ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் முழு பௌர்ணமி நாளில் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது தவிர புத்த மஹோத்சவம் எனும் திருவிழாவும் வருடாவருடம் மூன்று நாட்களுக்கு இங்கு நடைபெறுகிறது.

உலக அமைதிக்காக நடத்தப்படும் தியான சடங்குகளான கக்யு மோன்லாம் சென்மோ மற்றும் நியிங்மா மோன்லாம் சென்மோ ஆகியவை இங்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகின்றன.

புது வருடம் துவங்குவதற்கு முன்பு மஹா கால பூஜை எனப்படும் ஒரு சடங்கும் இங்குள்ள மடாலயங்களில் நடத்தப்படுகிறது. புது வருடத்தை துவங்கும் போது பழைய வருடத்தின் கசடுகளை சுத்தம் செய்யும் நோக்குடன் இந்த சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன.

எப்போது விஜயம் செய்யலாம்?

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் போத்கயாவுக்கு விஜயம் செய்ய ஏற்ற பருவமாகும். இருப்பினும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சடங்கு நிகழ்ச்சிகளை காண விரும்பும் யாத்ரீகர்கள் அதற்குரிய நாட்களில் பயணம் மேற்கொள்வதில் தடையேதுமில்லை.

எப்படி செல்லலாம்?

போத்கயாவுக்கு அருகில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் போன்ற வசதிகள் உள்ளன. நல்ல சாலை இணைப்புகளையும் இந்த நகரம் கொண்டுள்ளது.

பொதுவாக ரயில் மார்க்கமாக இந்த புராதன நகருக்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. நகரிலிருந்து சற்று தொலைவில் விமான நிலையங்கள் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...