ஒரு உன்னதமான பொற்காலத்தின் வாழும் மௌன சாட்சிதான் இந்த வரலாற்று மணம் கமழும் பீஜாப்பூர் நகரம். இந்த நகரத்தின் எண்ணற்ற வரலாறு மற்றும் கட்டிடக்கலைச் சின்னங்கள் ஒரு காலத்தில் மேன்மையான பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் பெற்றிருந்த ஒரு நகரத்தின் பெருமையை மௌனமாக பயணிகளுக்கு எடுத்துச்சொல்கின்றன.
பெங்களூர் நகரத்திலிருந்து 521 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பீஜாப்பூர் நகரத்தின் அழகானது காலத்தின் கொடிய கரங்களால் சிதைவுற்றிருந்தாலும் இன்னமும் மிச்சமிருக்கும் அதன் மசூதிகளும், தூண் கோபுரங்களும், கோட்டைகளும் ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்துக்கு சான்றாய் விளங்குகின்றன.
பிரதேச வரலாறும் இதர தகவல்களும்
பீஜாப்பூரின் வரலாற்றுப் பின்னணியை ஆராயும்போது இதன் மஹோன்னத பாரம்பரியத்துக்கு அடில் ஷா வம்சம் காரணமாக இருந்துள்ளது தெரிய வருகிறது. 1490 ம் ஆண்டில் யூசஃப் அடில் ஷா’வால் ஒரு புதிய தனி நகரமாக உருவாக்கப்பட்ட பீஜாப்பூர் அவருக்குப்பின் வந்த அரசர்களால் மேன்மேலும் பல்விதமான கட்டிடக்கலை அம்சங்களாலும் கோட்டைகளாலும் மெருகேற்றப்பட்டது.
பீஜாப்பூர் என்றவுடனேயே இங்குள்ள கோல் கும்பாஸ் நினைவுச்சின்னத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடில் ஷா மன்னரின் சமாதி மண்டபமான இதன் உள்ளே செயிண்ட் பீட்டர் பஸிலிகாவுக்கு அடுத்து மிகப்பெரியதாக புகழ் பெற்றுள்ள குமிழ் விதானம் (அரைக்கோள கோபுரக்கூரை வடிவம்) அமைந்துள்ளது.
அதைத்தவிர்த்து இதர வரலாற்றுச் சின்னங்களாக மாலிக்-இ-மைதான் எனப்படும் உலகிலேயே பெரிய வரலாற்றுக்கால பீரங்கி மற்றும் உப்லி புருஜ் எனப்படும் உயர்ந்த கோபுரம் போன்றவை இங்குள்ளன. மன்னர்களால் வரலாற்றுக்காலத்தில் உருவாக்கப்பட்ட சந்த் பாவ்டி என்றழைக்கப்படும் மிகப்பெரிய தடாகக் குளமும் இங்குள்ளது. இது 200 லட்சம் லிட்டர் (நீர்) கொள்ளளவு கொண்டதாகும்.
ஒரு புராதனக்கொத்தளத்தின் இடிபாடுகள் மற்றும் ஒரு கோட்டை, சமாதிகள், மசூதிகள் போன்ற இதர கட்டமைப்புகளைக் கொண்டுள்ள புறநகரம் போன்றவை பீஜாப்பூரில் வரலாற்றின் மிச்சங்களாக காணக்கிடைக்கின்றன.
பீஜாப்பூருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஏஹோல், பட்டாடக்கல் மற்றும் படாமா போன்ற இதர முக்கிய ஸ்தலங்களில் உள்ள உன்னதமான சாளுக்கிய கோயில்களும் பீஜாப்பூரிலுள்ள முகலாய கலை அம்சங்களும் அருகருகே அமைந்திருப்பது வியப்புக்குரியது. வரலாற்றுக்கால இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பீஜாப்பூர் இந்தியாவின் எல்லாப்பகுதிகளுடனும் நன்கு போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பெல்காம் நகரில் விமான நிலையம் உள்ளது. கோவா மற்றும் பெங்களூரிலிருந்து ரயில் சேவைகள் உள்ளன.



Click it and Unblock the Notifications