நேரம் இருந்தால் பயணிகள் மாணிக்யதாரா நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்ப்பது அவசியம். இது சிக்மகளூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாபா புதான்கிரி மலை அருகே கெம்மன குந்தி செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ஷோலா காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புனித இடமாகவே விளங்குகிறது. முத்துக்கள் கோர்க்கப்பட்ட மாலை எனும் பொருள் கொண்ட மாணிக்யதாரா என்ற பெயரை உடைய இந்த நீர்வீழ்ச்சி அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் சூழலை விரும்புபவர்களுக்கு பொருத்தமான இடமாகும்.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஞானி ‘ஹஸ்ரத் தாதா ஹயாத் மீர் கலந்தர்’ அவர்களும் அவர்தம் 4 சீடர்களும் தங்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளனர். வறண்ட போயிருந்த இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் அவர்களின் பிரார்த்தனைக்கு பிறகு மலையிலிருந்து இந்த மாணிக்யதாரா அருவி பெருகி தாகத்தை தணித்ததாக நம்பப்படுகிறது.
மேலும் புனிதம் வாய்ந்த இந்த அருவி நீருக்கு தோல் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அருவி ஸ்தலத்தில் பல நோய் தீர்க்கும் மருந்துகளை விற்கும் கடைகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.



Click it and Unblock the Notifications