ஹௌரா – பாரம்பரியம் மற்றும் புதுமையின் சங்கமம்

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் இரட்டை நகரம்தான் இந்த ஹௌரா. இந்தியாவில் உருவான பல்வேறு இரட்டை நகரங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இது ஒரு தொழில் நகரமாக விளங்குகின்றபோதிலும் ஒரு உல்லாசநகரம் போன்ற இயல்பையும் சூழலையும் இந்நகரத்தில் பயணிகள் உணரலாம்.

நான்கு பாலங்கள் இந்த ஹௌரா நகர்ப்பகுதியை கொல்கத்தா நகரத்துடன் இணைக்கின்றன. பிரசித்தமான ஹௌரா பாலம், விவேகானந்தா, வித்யாசாகர், நிவேதிதா பாலம் ஆகியவையே அவை.

கங்கை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலங்களின் மீது நடக்கும் அனுபவம் அற்புதமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆற்றின் அழகு மற்றும் அதன் மீது செல்லும் படகுகள் போன்ற அழகுக்காட்சிகள் இந்த பாலத்தின் மீதிருந்து காணக்கிடைக்கின்றன.

இந்த ஒவ்வொரு பாலமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையான அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன. வித்யாசாகர் அல்லது சேது என்று அழைக்கப்படும் பாலம் இரும்புக்கம்பிகளால் இழுத்து கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.

ஹௌரா பாலம் சிக்கலான தொழில்நுட்ப அமைப்புடன் ‘கான்டிலீவர்’ எனும் நுணுக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது. இது ஆங்கிலேயர் காலத்தில் மிகுந்த கவனத்துடன் பொறியியல் நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஹௌரா நகரம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

பாடனிகல் கார்டன் அல்லது ஆச்சார்ய ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியன் பாடனிகல் கார்டன் என்று அழைக்கப்படும் தோட்டப்பூங்கா ஹௌராவிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. ஷிப்பூர் எனும் இடத்திலுள்ள இந்த தோட்டப்பூங்கா 100 ஹெக்டேர் பரப்பளவில் 12,000 வகையான தாவரங்களை கொண்டிருக்கிறது.

இங்குள்ள ‘கிரேட் பான்யன் ட்ரீ’ என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட ஆலமரம் ஒன்று உலகத்திலேயே மிக ஆலமரமாக பிரசித்தி பெற்றுள்ளது. பல்வேறு புலம்பெயர் பறவைகள் விஜயம் செய்யும் சண்ட்ராக்ச்சி ஜீல் எனப்படும் ஏரி ஒன்றும் இங்கு புகைப்பட ரசிகர்களுக்கு பிடித்த இடமாக விளங்குகிறது.

ஹௌரா பாலத்தின் கட்டுமான அழகை பார்த்து ரசிக்கும் அனுபவமும் ஹௌரா நகர சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஹூக்ளி ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் கொல்கத்தாவையும் ஹௌராவையும் இணைக்கிறது.

வித்யாசாகர் சேது அல்லது இரண்டாவது ஹூக்ளி பாலம் அழைக்கப்படும் மற்றொரு பாலமும் இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கிறது. அவானி மால் எனும் ஆற்றங்கரை அங்காடி வளாகம் ஹௌரா மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் கேந்திரமாக அமைந்துள்ளது. .

உணவு மற்றும் திருவிழாக்கள்

ஹௌரா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியின் முக்கியமான திருவிழா துர்க்கா பூஜாவாகும். கோலாகலமாக கொண்டாடப்படும் இத்திருவிழா இப்பிரதேசத்தின் கலாச்சார அடையாளமும்கூட. 

துசேரா மற்றும் காளி பூஜா போன்றவையும் அவற்றை அடுத்து வரும் தீபாவளிப்பண்டிகையும் இந்நகரத்தின் இதர முக்கியமான பண்டிகைகளாகும்.

இந்த பண்டிகை காலங்களின்போது பெங்காலி இனிப்பு வகைகள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. சந்தேஷ் மற்றும் ரசமலாய் போன்றவை இந்நகரத்தில் அதிகம் விரும்பப்படும் இனிப்புப்பண்டங்களாகும். ராம நவமி திருநாளின்போது இங்குள்ள ராம்ராஜாத்லா கோயிலில் சிறப்பு பூஜைகளும் கொண்டாட்டங்களும் நடத்தப்படுகின்றன.

அழகான இயற்கை சூழல் மற்றும் ஷாப்பிங் மையங்கள் ஆகியவற்றோடு ஒரு தொழில் நகரம் எனும் அடையாளத்தையும் கொண்டுள்ள ஹௌரா நகரம் தற்போது ஒரு கல்விக்கேந்திரமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தின் இதர பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் இங்குள்ள கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளில் பயில்வதால் இந்நகரத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திர் மற்றும் பெங்கால் இஞ்சினியரிங்  அன்ட் சைன்ஸ் யுனிவர்சிட்டி ஆகியவை இங்குள்ள இரண்டு முக்கியமான பல்கலைக்கழகங்களாகும். இவை தவிர இங்குள்ள டான் பாஸ்கோ பள்ளி நாட்டிலுள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

எல்லாப்பிரிவினருக்கும் பிடித்த ஏதோ ஒரு அம்சத்தை இந்த ஹௌரா நகரம் பெற்றிருக்கிறது.  எந்த வயதினராக இருந்தாலும் இந்த நகரத்தை ஒரு நாள் சுற்றி வந்தால் போதும், ஏராளமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

கொல்கத்தா நகரத்திற்கு விஜயம் செய்யும் எல்லா பயணிகளுமே அதன் துணை நகரான இந்த ஹௌரா நகரத்தையும் சுற்றிப்பார்க்காமல் திரும்புவதில்லை. மேற்கு வங்காளத்தில் பயணிகள் பார்க்க வேண்டிய இதர சுற்றுலாப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்ய உதவும் கேந்திரமாகவும் இந்த ஹௌரா நகரம் திகழ்கிறது.

எப்போது விஜயம் செய்யலாம் ஹௌராவிற்கு?

குளிர்காலமே ஹௌரா நகரத்திற்கு விஜயம் செய்ய உகந்த காலம்.

எப்படி சென்றடைவது?

மேற்கு வங்காள மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் போக்குவரத்து வசதிகளால் ஹௌரா நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இதர முக்கிய நகரங்களுக்கு ஹௌராவிலிருந்து ரயில் சேவைகளும் உள்ளன.

Please Wait while comments are loading...