கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.
இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே.
இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.



Click it and Unblock the Notifications