ராஜஸ்தானின் நாகவ்ர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லாட்னூன் நகரம் முன்னொரு காலத்தில் சந்தேரி நாகரி என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரம்தான் அனுவ்ரதா மற்றும் ஜெயின் விஷ்வ பாரதி ஆகிய புகழ்பெற்ற பல்கலைகழகங்களை தோற்றுவித்த ஆச்சார்ய துளசி அவர்களின் பிறப்பிடமாகும். இந்தியாவின் முன்னாள் ஜானாதிபதி டாக்டர்.ராதாகிருஷ்ணன் தான் எழுதிய 'லிவ்விங் வித் பர்பஸ்' எனும் பிரபலமான புத்தகத்தில் உலகின் சிறந்த 15 மனிதர்களில் ஒருவராக ஆச்சார்ய துளசி அவர்களை போற்றியிருக்கிறார்.
வரலாற்றில் லாட்னூன் நகரம்
லாட்னூன் நகரின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது நம்மை மகாபாரத காலத்திற்கு அழைத்துச் சென்று விடும். அதாவது சிசுபால சாம்ராஜ்யம் லாட்னூன் நகரை 12-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு 16-ஆம் நூற்றாண்டில் லாட்னூன் நகரம் ஜோத்பூர் நகருடன் இணைக்கப்பட்டது.
ஜைன கோயில்களின் பூமி
லாட்னூன் நகரம் அதன் ஜைன கோயில்களுக்காக வெகுப்பிரபலம். அதிலும் திகம்பர ஜெயின் பாரா கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது.
இங்கு உள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் 166 சலவைக்கல் சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புத கலைப் படைப்புகள். மேலும் இந்தக் கோயிலுக்கு வரும் பயணிகள் இங்குள்ள கலைக்கூடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள அரிய சிலைகள் மற்றும் ஜைன கையெழுத்து பிரதிகளுடன் கூடிய தொன்மையான கலை வடிவங்களை கண்டு ரசிக்கலாம்.
அதோடு இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்களும், கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் கதவுகளும் கோயிலின் எழில் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்க கூடியவைகள். இது தவிர லாட்னூன் நகருக்கு வரும் பயணிகள் சாந்திநாத் கோயிலுக்கும், சார்புஜாநாத் கோயிலுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
லாட்னூன் நகரில் ஆச்சார்ய துளசி அவர்களால் 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெயின் விஷ்வ பாரதி பல்கலைகழகம் மிகவும் புகழ் பெற்றது. இந்த பல்கலைகழகம் அதன் ஆன்மீக மற்றும் அறநெறிக்காக இந்தியா முழுவதும் பிரபலம்.
இதைத் தவிர சுக்தேவ் ஆஸ்ரமம், பாலாஜி மந்திர், பபோலாவ், மங்கல்புரா பகீச்சி, பீட்வாலே பாலாஜி, துரோனாச்சல் அர்ஹாம் ஆஸ்ரமம், வெங்கடேஷ் மந்திர், சுஜன்கர், சிங்கி மந்திர் போன்ற இடங்களும் நீங்கள் லாட்னூன் நகருக்கு சுற்றுலா வரும் போது கண்டிப்பாக பர்ர்க்க வேண்டிய இடங்கள்.
லாட்னூன் நகரின் சுற்றுலா அம்சங்கள்
லாட்னூன் நகரில் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களாக ராமானந்த் கௌஷலா, ஆதிநாத் மந்திர், சந்திரசாகர் ஸ்மாரக் கோயில், சாத்வி பன்னாஜி கி சமாதி மற்றும் நீல்கந்த் மகாதேவ் கோயில் ஆகியவை அறியப்படுகின்றன.
இவைதவிர லாட்னூன் நகரிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சலாசர் தாம் எனும் புனித ஸ்தலமும் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் கரந்த் பாலாஜி, வீர் பாலாஜி மந்திர், உமர்ஷாபீர் தர்காஹ், ஆர்ய சமாஜ் மந்திர் போன்றவையும் லாட்னூன் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
லாட்னூன் நகரை எப்படி அடைவது?
லாட்னூன் நகருக்கு அருகில் உள்ள விமான நிலையமாக ஜெய்ப்பூர் விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு லாட்னூன் நகரிலேயே ஒரு சிறிய ரயில் நிலையமும் இருக்கிறது.
எனினும் நாடு முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் லாட்னூன் நகருக்கு அருகில் இருக்கக்கூடிய ஜெய்ப்பூர் அல்லது நாகவ்ர் ரயில் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஜெய்ப்பூர், அஜ்மீர், சிகார், பிக்கனேர், குச்சமன், அஹமதாபாத், இந்தூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் லாட்னூன் நகருக்கு இயக்கப்படுகின்றன.
லாட்னூன் நகரின் வானிலை
லாட்னூன் நகரில் வருடம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். எனவே லாட்னூன் நகருக்கு சுற்றுலா வருவதற்கு அதன் பனிக் காலங்களே மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.



Click it and Unblock the Notifications