விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!

ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது நம்மை மகாபாரத காலத்திற்கு இட்டுச் சென்று விடும். அதாவது இந்து புராணத்தின்படி பாண்டவர்கள் தங்களுடைய ஒரு வருட அஞ்ஞான வாசத்தை விராட் என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த நகரில்தான் கழித்தனர். அந்த விராட் மகாராஜாவின் நினைவாகத்தான் இந்த நகருக்கு விராட் நகர் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'பைராட்' என்றும் இந்த நகரம் பிரபலமாக அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் சரிஸ்கா, ஸிலிஸெர்ஹ், அஜப்கர்-பாந்த்கர், அல்வார் போன்ற ராஜஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்கள் விராட் நகருக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கின்றன.

வரலாற்றில் விராட் நகர்

இந்தியாவின் தொன்மை வாய்ந்த சாம்ராஜ்யங்களில் ஒன்றான மகாஜனபதாவின் தலைநகரமாக விராட் நகர் விளங்கி வந்தது. அதன் பிறகு 5-ஆம் நூற்றாண்டுகளில் சேதி பேரரசின் வசம் சென்ற விராட் நகரை பின்னர் மௌரிய சாம்ராஜ்யம் கைப்பற்றியது.

இந்த நகரில் நீங்கள் அசோகா ஷிலாலேக் எனும் கல்வெட்டுகளை பார்க்கலாம். இதில் மௌரிய மன்னர் அசோகாவின் சட்டங்கள், அறிவுரைகள் மற்றும் அறிவுப்புகள் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

விராட் நகரின் கவர்ச்சி அம்சங்கள்

விராட் நகரில் உள்ள பல்வேறு குன்றுகளில் நீங்கள் வரலாற்று காலத்துக்கு முந்தைய குகைகள் சிலவற்றை பார்க்கலாம். இது தவிர பீம் கி துங்கரி அல்லது பாண்டுவின் குன்று என்று அழைக்கப்படும் குன்றும் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

இந்த மிகப்பெரிய குன்றில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் சிறிது காலம் வசித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு அருகிலேயே பீமனின் சகோதரர்கள் தங்கியிருந்த சிறிய அறைகள் சிலவும் இருக்கின்றன.

விராட் நகரில் பீஜக் கி பஹாரி என்ற குன்றில் இரண்டு தொன்மையான புத்த மடாலயங்களின் மிச்சங்களையும் நீங்கள் பார்க்கலாம். அதோடு கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம், ஜெயின் நாசியா மற்றும் ஜெயின் கோயில் ஆகியவையும் விராட் நகரின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள்.

விராட் நகரை எப்படி அடைவது?

விராட் நகருக்கு அருகில் இருக்கும் விமான நிலையமாக ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் ரயில் நிலையமும் விராட் நகருக்கு அருகில்தான் இருக்கிறது.

இந்த விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

எனவே பயணிகள் ஜெய்ப்பூர் விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் வந்தவுடன் வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும்.

விராட் நகரின் வானிலை

விராட் நகரின் கோடை காலங்கள் எந்த அளவுக்கு வெப்பமயமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் பனிக் காலங்களிலும் குறைந்தபட்சம் 5 டிகிரி வரை வெப்பநிலை சென்று குளிர் வாட்டி வதைக்கும்.

எனவே விராட் நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவதுதான் சிறப்பானதாக இருக்கும்.

Please Wait while comments are loading...