பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பரத்பூர் நகர மக்கள்  ராமரின் மற்றொரு தம்பியான லக்ஷ்மணனையும் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

அதோடு 'லோஹாகர்' என்றும் அறியப்படும் பரத்பூர் நகரம் ஜெய்ப்பூர், உதைப்பூர், ஜெய்சல்மேர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. மேலும் ஹரியானா, உத்தர்பிரதேஷ், தோல்பூர், கராவ்லி, ஜெய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்களுடன் பரத்பூர் நகரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.  

பறவைகளின் புகலிடம்

பரத்பூர்  நகரம் அதன் பறவைகள் தேசிய பூங்காவுக்காக உலகப் புகழ்பெற்றது. இந்தப் பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாக இருந்து வருகிறது.

இங்கு மழை மற்றும் பனிக் காலங்களில் புலம்பெயர்ந்து வரும் நீர்ப்பறவைகளான அரிய வகை காட்டு வாத்துக்கள் சுற்றலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதோடு கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள்,  கருவால் வாத்துகள்  போன்ற பறவை இனங்களையும் நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம்.

கட்டிடக்கலை பாணிகளின் கலவை

பரத்பூரில் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் ராஜ்புட், முகல் மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலை பாணிகளில் உருவானவைகள். அதிலும் குறிப்பாக லோஹாகர் கோட்டையின் வடிவமைப்பு நேர்த்தி கட்டிடக் கலையின் உச்சம்.

அதோடு தீக் கோட்டை, பரத்பூர் அரண்மனை, கோபால் பவன், அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பயணிகளை அதிக அளவில் பார்க்கலாம்.மேலும் பாங்கேபிஹாரி கோயில், கங்கா கோயில், லக்ஷ்மன் கோயில் போன்ற ஆலயங்கள் பரத்பூரின் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களாகும்.

பரத்பூரை  எப்படி அடைவது

பரத்பூருக்கு அருகில் டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன.

எனவே வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்களின் அல்லது பேருந்து மூலம் வெகு சுலபமாக பரத்பூரை நகருக்கு வந்து சேரலாம்.

மேலும் பரத்பூர்  ரயில் நிலையம் ஜெய்ப்பூர், மும்பை, அஹமதாபாத், டெல்லி போன்ற முக்கிய நகரங்களோடு நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆக்ரா, புது டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிருந்து அரசு மற்றும்  தனியார் பேருந்துகளும் பரத்பூருக்கு அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

பரத்பூர் நகரம் தார் பாலைவனத்தில் அமைந்திருப்பதால் கோடை கால வெப்பம் சற்று கடுமையானதாக இருக்கும். அதனால் மழை அல்லது பனிக் காலங்கள்தான் பரத்பூர் நகரை சுற்றிப் பார்க்க சிறந்த காலங்களாகும்.

Please Wait while comments are loading...