சரிஸ்கா – பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாஸ்தலம்

ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமான சரிஸ்கா நகரம் அமைந்துள்ளது.இங்குள்ள ‘சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்’ பிரசித்தமாக அறியப்படுகிறது. 1955 ம் ஆண்டு துவங்கப்பட்ட இது 1979ம் ஆண்டில் தேசிய வனவிலங்குப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது. உலகெங்கிலிருந்தும் இந்த வனவிலங்கு பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

சரிஸ்கா தேசியப் புலிகள் பாதுகாப்பு சரணாலயம்

பலவிதமான உயிரினங்களும் விலங்குகளும் இந்த காட்டுயிர் சரணாலயத்தில் வசிக்கின்றன. இவற்றில் புலி, சிறுத்தை, சீத்தல் மான். நில்கை மான், லாங்குர் எனும் கருங்குரங்கு, கழுதைப்புலி, சாம்பார் மான் மற்றும் குள்ள நரி போன்ற விலங்குகள் குறிப்பிடத்தக்கவை.

‘ஜங்கிள் சஃபாரி’ எனப்படும் காட்டுச்சுற்றுலா செல்வதன் மூலம் இவற்றை பயணிகள் பார்த்து ரசிக்க முடியும். விலங்குகள் மட்டுமன்றி மீன்கொத்தி, மணல் வாத்து, தங்கக்குருவி மற்றும் மரங்கொத்தி போன்ற வசீகரமான பறவையினங்களும் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதிக்குள் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. வனத்துறையினரால் நடத்தப்படும் ஜீப் சஃபாரி மற்றும் யானை சஃபாரி மூலமாக மட்டுமே பயணிகள் காட்டுக்குள் செல்ல முடியும்.

கோட்டைகள், கோயில்கள் மற்றும் ஏரிகள்

ஏராளமான கோட்டைகள், கோயில்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றையும் சரிஸ்கா சுற்றுலாத்தலம் பெற்றுள்ளது. இங்குள்ள கனக்வாரி கோட்டை 17ம் நூற்றாண்டில் இரண்டாம் ஜெய்சிங் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பன்கர் கோட்டை, பிரதாப்கர் கோட்டை மற்றும் அஜப்கர் கோட்டை ஆகிய் முக்கியமான வரலாற்றுச்சின்னங்களும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன

பண்டுபோல் எனுமிடத்திலுள்ள ஹனுமான் கோயில், நீலகண்ட மஹாதேவ் கோயில் மற்றும் பர்த்ரிஹரி கோயில் ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும். இவை நாடெங்கிலிருந்தும் பக்தி யாத்ரீகர்களை கவர்ந்திழுக்கின்றன.

சில்சேர்ஹ் ஏரி மற்றும் ஜெய்சமந்த் ஏரி ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களும் பிரபலமான பிக்னிக் ஸ்தலங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. மஹாராஜா ஜெய் சிங்கிற்கு வேட்டை மாளிகையாக பயன்பட்ட சரிஸ்கா பேலஸ் எனும் மாளிகையும் இங்கு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் நல்ல சாலை இணைப்புகளை சரிஸ்கா நகரம் பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் (150கி.மீ) மற்றும் டெல்லியிலிருந்து (250கி.மீ) பேருந்துகள் மூலம் சரிஸ்கா நகரத்திற்கு வருகை தரலாம்.

சரிஸ்கா நகரத்திலிருந்து 110 கி.மீ தூரத்தில் ஜெய்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் உள்ளது. சரிஸ்காவிலிருந்து 36கி.மீ தூரத்திலுள்ள அல்வர் ரயில் நிலையம் மூலமாகவும் பயணிகள் சரிஸ்கா நகரத்தை வந்தடையலாம்.

விஜயம் செய்ய உகந்த பருவம்

செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பருவமே சரிஸ்கா சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது. இக்காலத்தில் பருவநிலையானது குளுமையுடன் காணப்படுகிறது.

மேலும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் கன்காவ்ர் எனும் உள்ளூர் திருவிழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இப்பருவத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.

Please Wait while comments are loading...