சுல்தான் பேட்டரி, மங்களூர்

இது மங்களூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் போலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு திப்பு சுல்தானால் எழுப்பப் பட்ட ஒரு கண்காணிப்பு கோபுரம் இயற்கை அழகு சூழ்ந்த இடத்தில் காணப்படுகிறது. 

திப்பு சுல்தான் இந்த கோபுரத்தை தன் மரணத்திற்கு 15 வருடங்களுக்கு முன்பு கி.பி 1784 ஆம் ஆண்டு கட்டினார். இந்த இடம் முன்னர் சுல்தான் பேட்டரி என்றே அழைக்கப்பட்டது. பேட்டரி எனும் சொல் பீரங்கியால் சுடுவதை குறிப்பதாகும்.

கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோபுரம் ஆற்றின் வழியாக ஆங்கிலேயக் கப்பல்கள் ஊடுறுவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது. கண்காணிப்பு கோபுரம் என்று அழைக்கப்பட்டாலும் இது ஒரு சிறு கோட்டையை போன்ற வலிமையுடன் பீரங்கிகள் பொருத்துவதற்கான தளங்களுடன் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது.இந்த கோபுரத்தின் கீழ் ஓர் தரையடித் தளம் வெடி மருந்து துகளைச் சேமிப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது நமக்கு இந்த இடமானது அக்காலத்தில் ஆண்ட மன்னர்களுக்கு எந்த அளவுக்கு போர் தளவாடத்தளமாக விளங்கியிருக்கவேண்டும் என்பது புரியும்.

இதன் அருகில் ஒரு கடற்படை தளமும் இருந்திருக்கிறது. எதிரிக்கப்பல்களை தடுத்து நிறுத்துவதற்கும், கரையோரம் நங்கூரமிடாமல் கண்காணிக்கவும் இந்த கடற்படை தளம் மன்னர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கோபுரத்தின் ஏறிப்பார்க்கும்போது அரபிக்கடலின் பரந்து விரிந்திருக்கும் அழகு நம் கண் முன் தெரிகிறது.

இயற்கை உபாசகர்களுக்கு இந்த காட்சி திகட்டாத ஒன்று. இயற்கையான அழகும் மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட அழகும் இங்கு ஒன்றாய் கலந்து மிளிர்கிறது. தற்போதைய காலகட்டத்தில் மனித நடமாட்டமின்றி காட்சியளித்தாலும் அதன் மாசுபடாத ஏகாந்தத் தூய்மைக்காகவே சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

Please Wait while comments are loading...