Search
 • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் – ஆனால் இந்த இடம் ஏன் வாழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் – ஆனால் இந்த இடம் ஏன் வாழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

எழுபது ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் மீண்டும் சீட்டாக்கள் (சிறுத்தைகள்) கால் எடுத்து வைத்துள்ளன. இது உண்மையிலேயே மொத்த இந்தியாவிற்கும் ஒரு உற்சாகமான தருணம் தான்! விமானத்தில் சீட்டா போன்று வரைந்து, நாடெங்கிலும் சமூக வலைதளங்களில் அனைவரும் பேசி மகிழ்ந்து இன்று மிக கோலாகலமாக சீட்டாவை நாம் வரவேற்றுள்ளோம். அதனைப் பற்றிய மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே!

70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சீட்டாக்கள்

70 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சீட்டாக்கள்

அதிகப்படியான வேட்டையாடுதல் காரணமாக ஆசிய சிறுத்தை, 70 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1952 இல் இந்தியாவில் சீட்டாக்கள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் அவற்றை மீண்டும் இந்தியாவில் உருவாக்க என்ன செய்யலாம் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

2009 ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சீட்டாக்களை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை முன் மொழிந்தார், ஆனால் 2013 இல் உச்ச நீதிமன்றத்தால் இதனை நிராகரித்தது. இந்த யோசனை 2017 இல் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டது, மேலும் 2020 இல் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் "சோதனை அடிப்படையில்" அனுமதி அளித்தது.

கண்டம் விட்டு கண்டம் பறந்த சீட்டாக்கள்

கண்டம் விட்டு கண்டம் பறந்த சீட்டாக்கள்

"ப்ராஜக்ட் சீட்டா" மூலம் நமீபியாவில் இருந்து 5 பெண் மற்றும் 3 ஆண் சீட்டாக்களைக் கொண்டு வருவதற்காக புலி முகம் கொண்ட சிறப்பு விமானமான B-747 ஜம்போ ஜெட் நமீபியாவிற்கு கடந்த வியாழக்கிழமை அன்று பறந்தது. சீட்டாக்கள் நமீபியாவின் சீட்டா கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன் மையத்தில் தடுப்பூசிகள் மற்றும் செயற்கைக்கோள் காலர்களைப் பெற்ற பிறகு தனிமைப்படுத்தப்பட்டன.

பின்னர் வெறும் வயிற்றில், மருத்துவ சோதனைகளுக்கு பிறகு, மருத்துவர்களுடன வின்ட்ஹோக்கில் உள்ள ஹோசியா குடாகோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் தரையிறங்கியது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சீட்டாக்கள் குனோ தேசியப் பூங்காவை வந்தடைந்தன. ஒரு பெரிய மாமிச உண்ணி ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு இடம் பெயர்வது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.

குனோ தேசியப் பூங்கா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

குனோ தேசியப் பூங்கா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

சீட்டாக்களை விடுவிப்பதற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் 2010 மற்றும் 2012 க்கு இடையில் பத்து இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் மத்திய இந்தியாவின் விந்தியன் மலையில் அமைந்துள்ள இந்த குனோ தேசியப் பூங்கா பரவலாக தேர்ந்தேடுக்கப்பட்டது.

இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில், குனோ தேசியப் பூங்கா அதன் தட்பவெப்ப நிலை, வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை, வரலாற்று வரம்பு மற்றும் இரையின் அடர்த்தி காரணமாக சீட்டாக்களுக்கு ஏற்றதாகக் கண்டறியப்பட்டது. இதன் அருகில் உள்ள கோரியா சால் காடுகளில் தான் பூர்வீக ஆசிய சிறுத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக காணப்பட்டதாம்! இப்படி பல்வேறு காரணங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17 அன்று கொண்டுவரப்பட்ட சீட்டாக்களை விடுவித்தார்! அன்று அவரது பிறந்தநாள் என்பது கூடுதல் அம்சம் அல்லவா!

சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரப்போகும் குனோ தேசியப் பூங்கா

சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரப்போகும் குனோ தேசியப் பூங்கா

ப்ராஜக்ட் சீட்டா இப்பகுதியில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய சிறுத்தை, காட்டுப் பூனை, சோம்பல் கரடி, டோல், இந்திய ஓநாய், தங்க நரி, கோடிட்ட ஹைனா, பெங்கால் நரி, சாம்பார் மான், நீலகாய், நான்கு கொம்பு மிருகங்கள், சின்காரா, கரும்புலி மற்றும் காட்டுப்பன்றி போன்ற பலவிதமான விலங்குகளும் இந்த பூங்காவை அலங்கரிக்கும் நிலையில் இப்போது சீட்டாக்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது இந்த பூங்காவை நாடு முழுவதும் பிரபலமாக்கிவிட்டது.

இனி மத்தியப்பிரதேசம் செல்பவர்கள் தங்களுடைய 'பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில்' குனோ தேசியப் பூங்காவையும் சேர்த்துக் கொள்வார்கள்!

  Read more about: kuno national park sheopur
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X