சுமார் 7,000 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரைகளைக் கொண்டுள்ள இந்தியாவில் எண்ணற்ற அழகிய கடற்கரைகள் உள்ளன. அதிலும் இந்தியாவிலேயே மிக நீண்ட மற்றும் ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையைப் பெற்றது நம் சென்னை மரினா தான் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் அது மட்டுமல்ல சென்னையின் பெருமை, சென்னையின் இந்த 3 கடற்கரைகள் மிகவும் தூய்மையான அழகிய கடற்கரைகள் என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த விஷயம் சென்னையின் அழகை மேலும் கூட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் அந்த அழகிய சுத்தமான கடற்கரைகள் எவை என்று தெரிய வேண்டுமா?

சென்னையிலிருந்து 3 கடற்கரைகள்
இந்தியாவில் தூய்மையான மற்றும் அழகிய கடற்கரைகள் உள்ளன. தென்மேற்கு கடற்கரையில் கோவாவாக இருந்தாலும் சரி, தென்னிந்தியாவில் கேரளாவாக இருந்தாலும் சரி, புதுவை தமிழ்நாடாக இருந்தாலும் சரி அனைத்து கடற்கரை மாநிலங்களிலும் அழகிய தனித்துவமான கடற்கரைகள் உள்ளன. ஆனால் சென்னையில் உள்ள சில கடற்கரைகள் மிகவும் சுத்தமானவை என்று உங்களுக்கு தெரியுமா? நிபுணர்களின் ஆய்வின்படி, நாட்டின் தூய்மையான கடற்கரைகளில் எலியட்ஸ், திருவான்மியூர் மற்றும் கோவளம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
சமீபத்திய அறிக்கைகளின்படி, கடலோர மாசுபாட்டைக் கண்காணிக்கும் தேசிய ஆய்வகமான கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCCR) ஆராய்ச்சியாளர்கள், சேகரிக்கப்பட்ட குப்பை பொருட்களின் எண்ணிக்கையால் அளவிடப்பட்ட சுத்தமான கடற்கரை குறியீட்டின் கீழ் நகர கடற்கரைகளை 'மிகவும் சுத்தமாக' மதிப்பிடும் ஆய்வை நடத்தினார்கள். 2019 மற்றும் 2021 க்கு இடையில் 33 கடற்கரைகளிலும், 2022 இல் 75 கடற்கரைகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, இதில் நகரத்தில் உள்ள மூன்று கடற்கரைகள் அடங்கும்.

கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம்
தேசிய ஆய்வகமான கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் NCCR இன் நோக்கம் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள், கடலோர பாதிப்பு, அரிப்பு, கடற்கரைகளில் மாசுபாடு மற்றும் கடலோர கடற்கரைகளுக்கு வேலை செய்வது பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்துவதாகும்.

பாதியாக குறைந்த மாசுபாடு
கடற்கரைகளில் காணப்படும் குப்பைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக்குகள், குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பிளாஸ்டிக்குகள் பெருமளவில் கடற்கரைகளை உள்ளடக்கியிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளை குப்பைகளை கொட்டினாலும், 2019 மற்றும் 2021 இல் 60% ஆக இருந்த மணலில் பிளாஸ்டிக்குகள் 2022ல் 40% ஆக குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.

உதவிய முயற்சிகள்
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் துப்புரவு முயற்சிகள் காரணமாக நகரங்களில் உள்ள கடற்கரைகள் மிகவும் தூய்மையாக உள்ளன என்று தெரிய வந்துள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிகள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், நகர கடற்கரைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

திருவான்மியூர் கடற்கரை
NCCR விஞ்ஞானி பிரவாகர் மிஸ்ராவின் கூற்றுப்படி, திருவான்மியூர் கடற்கரை ஒவ்வொரு நாளும் உள்ளூர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அந்தமான் மற்றும் லட்சத்தீவு கடற்கரையை விட திருவான்மியூரில் குப்பைகள் குறைவாக உள்ளனவாம்.

எலியாட்ஸ் மற்றும் கோவளம் கடற்கரைகள்
கூடுதலாக, சிறந்த துப்புரவு முயற்சிகளால் எலியட்ஸ் மற்றும் கோவளம் கடற்கரைகளைச் சுற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடற்கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குறைவதற்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மற்றும் தொடர்ந்து விழிப்புணர்வு முயற்சிகள் காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடற்கரைகள் இப்படி ஒரு நற்பெயரை வாங்கி இருப்பது நமக்கு பெருமை, ஆனால் அவற்றை தொடர்ந்து சுத்தமாக பராமரிப்பது நம் கடமையும் கூட மக்களே!