வரலாற்று ரீதியாக, 'ஆல்கஹால்' பயன்பாடு முக்கிய பங்கை கொண்டுள்ளது. அது, சமூக ஈடுபாடு மட்டுமின்றி, பலருக்கு பிணைப்பாகவும் மாறியுள்ளது. சமூக குடிப்பழக்கம் அல்லது மிதமாக மது அருந்துதல் என்பது பலருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் 2010ம் ஆண்டின் புள்ளி விவரங்கள்படி, 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு தனி நபர் ஆண்டுக்கு 5.7 லிட்டர் அளவுக்கு சுத்தமான ஆல்ஹால் அருந்துகின்றனர்.
இது, இந்தியாவை பொறுத்த மட்டில், 2020ல் ஆண்டு மொத்த நுகர்வு 5 பில்லியன் லிட்டர் என்றும், நிகழாண்டு(2024) 6.21 பில்லியன் லிட்டர் அளவுக்கு, இந்தியர்களில் மது நுகர்வு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி, உலகளவில் மது அருந்தும் நபர்களால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்ற புள்ளிவிபரங்களும் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் 6,172 பேர் சட்டப்பூர்வற்ற மது வகைகளை அருந்தி உயிரிழந்துள்ளனர் என்று, தேசிய குற்ற ஆவண காப்பகம் தெளிவுப்படுத்தி உள்ளது.
ஹலோ, நாங்க என்ன பரீட்சை அல்லது தேசிய அளவில் போட்டித் தேர்வு எழுத போறோம்? இந்திய, உலக புள்ளி விபரங்களை வாரி வழங்குகிறீர்கள் என்று நீங்க கேட்பது புரிகிறது. சரி விஷயத்துக்கு வாங்க...எங்க ஊர் எப்படி பெருமையை இழந்து வருகிறது என்பது கேட்பதும் புரிகிறது.

நான் மட்டுமில்லை இந்த கட்டுரையின் முகப்புரையை படித்ததும், நீங்களே எந்த விஷயத்தை சொல்ல போகிறேன்; எப்படி உங்க ஊர் பெருமை மருவி போகிறது என்பதை தெரிந்து வைத்திருப்பீர்கள் என்று.
சரி விடுங்க... நீங்கள் எல்லாம் அறிவார்ந்தவர்களுக்கு எதிர் பதம் என்பதை மறந்துட்டேன். ஹலோ எங்களை முட்டாள் என்று நீங்கள் வார்த்தைகளில் விளையாடுகிறீர்களா? சரி, சரி கோவப்படாதீங்க... விஷயத்துக்கு வருகிறேன்.
கலாசாரம், பொருளாதார வளர்ச்சி என பல விஷயங்களில் பிரபலமானது என்ற அடையாளத்தை கொண்டிருந்தாலும், திரைக்கு பின்னால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருபவர்களால் பல்வேறு பிரச்னையை, அந்த நகரம் எதிர்கொண்டிருக்கிறது என்றால் நம்பி தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கோயம்புத்தூர் மாநகரம் மூன்றாவது பெரிய நகரமாகும். 30,000க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி ஆலைகள் உள்ளன.
இந்த நகரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தொழில்முனைவோராக தான் இருப்பர் என்ற பெயரையும் தாங்கி இருக்கும். ஆண்டு முழுவதும் காலநிலை வசதியானது. சமீபத்தில், திரைக்குப் பின்னால் முக்கிய பிரச்னையால், அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மண்டலத்தில், 2016ல் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 301 டாஸ்மாக் கடைகளில் 249 மதுக்கடைகள் இருந்தன. 93 உரிமம் பெற்ற தனியார் பார்கள் கோவை மாநகரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கின்றன. இப்போது, எல்லா இடங்களிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் கே.சுகன்யா, 2016ல் நடத்திய ஆய்வில், கோவையில் மது அருந்துபவர்களில் 56 சதவீதம் பேரும், அளவுக்கு அதிகமாக குடிப்பவர்கள் 16 சதவீதம் பேரும், அளவுக்கு அதிகமாக குடிப்பவர்கள் 16 சதவீதமாக உள்ளனர் என்ற அதிர்ச்சிக்கரமான தகவலை நம்முள் விட்டுச்சென்றுள்ளார்.
அவர் விட்டு சென்ற தகவல்கள், எட்டு ஆண்டுகளை கடந்துள்ளது. ஆகையால், இதன் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆய்வில் 68 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதிற்குள் குடிக்கத் தொடங்கினர்; பெரும்பாலோர் தங்கள் நண்பர்களால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, பெரும்பாலோர் மதுவுக்கு அடிமையானவர்கள்.
சமூக-பொருளாதார மற்றும் மக்கள்தொகை பின்னணி அடிப்படையில் பார்க்கும்போது, குடிப்பவர்களில் 98 சதவீதம் பேர் ஆண்கள். இரண்டு சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பதை ஆய்வு தரவுகள் வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, 21-30 வயதுக்கு உட்பட்டவர்களில் குடிப்பழக்கம் அதிகபட்சமாக (39 சதவீதம்) காணப்படுகிறது. குடிப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள். 32 சதவீதம் பேர் ஸ்கில்டு பணியை சேர்ந்த பணியாளர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, 23 சதவீதத்துடன் உயர்நிலை பணியாளர்கள்.

குடிப்பதற்கான காரணங்கள்
1. குடும்ப பிரச்சனைகள்
2. சக நபர்களால் அழுத்தம் I
3. நிதி நெருக்கடி
4 வாழ்க்கையில் தோல்விகள்
5 சமூக நிலை
6 நேரத்தை கடக்கவும்
7 வேலையின்மை
விளைவு தர வரிசை
பொருளாதார ஸ்திரமின்மை - I
குடும்பத்தில் அவமரியாதை - II
சமூகத்தில் குறைந்த நிலை - III
வேலையில் குறைந்த செயல்திறன் - IV
குறைந்த சுயமரியாதை - V
உடல்நல அபாயங்கள் - VI
விரும்பத்தகாத நடத்தை - VII
சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுதல் - VIII
உடல்நலப் பிரச்சனை (மது அருந்துபவர்களின் எண்ணிக்கை)
தலை வலி 145 (67)
குளிர் 110 (51)
இருமல் 105 (49)
எலும்பு/மூட்டு நோய்கள் 98 (46)
சுவாசப் பிரச்சனைகள் 92 (43)
தூக்கக் கோளாறுகள் 69 (32)
கணைய அழற்சி/இரைப்பை அழற்சி 58 (27)
நாள்பட்ட கல்லீரல் நோய்கள் 53 (25)
பாலியல்/இனப்பெருக்கக் கோளாறுகள் 37 (17)
பதின்பருவ வயது குழந்தைகளை சரியான கவனிப்புடன் கையாள வேண்டும். இன்றைய சூழலில், பெற்றோர்-குழந்தை உறவை வலுப்படுத்தும் வகையில், பெற்றோர்களுக்கு பள்ளிகளில் கட்டாய ஆலோசனை வழங்க வேண்டும்.
வாழ்க்கை சூழலை எளிதாக்கும் விதமாக, அரசு மற்றும் சமூக ஊடங்கள் பெற்றோர்கள் மற்றும் பதின் பருவத்தினரை உள்ளடக்கிய சில சுவாரஸ்யமான திட்டங்களையும், நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, தொடர் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அறிவை மேம்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே மதுப்பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வாழ்க்கைத் திறன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு பாடங்களுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறை மிகவும் அவசியம். இளம் வயதினருக்கான வாழ்க்கைத் திறன் திட்டங்களைப் பரிந்துரைக்க, விரிவான ஆராய்ச்சி ஆதாரம் அவசியம் என்பதை உணர வேண்டிய தருணம் இது.
ஒரு இடம், அடையாளம், பெருமை, புகழ் அடைவது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் அதை இழக்க ஒரு நொடி போதும் என்பதை, நாம் உணர்ந்தாக வேண்டும். தீய காரியங்களுக்கு ஒன்று திரளும் நாம், நம் ஊரின் பெருமையை தக்க வைக்க, அவ்வவ்போது ஒன்று திரண்டு புத்தாக்க, நல் விஷயங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைக்கானது ஆகும்.



Click it and Unblock the Notifications





