மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் பாட் ஹோட்டல்கள் வசதி ஏற்கனவே தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் புனே ரயில் நிலையத்திலும் பாட் ஹோட்டல்கள் வசதி துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பாட் ஹோட்டல்கள் வற்றின் வசதி மற்றும் வடிவமைப்பிற்காக உலகம் முழுதும் மிகவும் பிரபலமானவை. புனே ரயில் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள பாட் ஹோட்டல்கள் புனே வாசிகளிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளன.

பாட் ஹோட்டல்கள் என்றால் என்ன?
காப்ஸ்யூல் ஹோட்டல், பாட் ஹோட்டல் என்று அழைக்கப்படும் இது ஒரு மலிவு விலை தங்குமிடமாகும். பாட் ஹோட்டல்கள் முதன் முதலில் ஜப்பானில் தான் துவங்கப்பட்டது. பெட்ஷீட், தலையணை, சார்ஜ் செய்யும் வசதி, லாக்கர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உடன் கூடிய ஒரு சிறிய படுக்கையறை தான் பாட் ஹோட்டல்கள்.
ஒவ்வொரு அறையும் கதவுகள் மற்றும் திரைச்சீலைகளால் மூடப்பட்டு இருக்கும். இது பரப்பளவில் மிகவும் பெரிதாக இருக்காது. ஆனால் சிறிது நேரம் பயணத்திற்கு முன்போ அல்லது பின்போ காத்திருக்கும் வேலையில் ஓய்வெடுக்க மிகவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் பாட் ஹோட்டல்கள்
இந்தியாவில் முதல் முறையாக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் தான் பாட் ஹோட்டல்கள் துவங்கப்பட்டன. மும்பையில் உள்ள பாட் ஹோட்டல் பயனர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது, மும்பையில் ஒற்றைப் படுக்கைகள் கொண்ட 30 பாட்களும், இரட்டை படுக்கைகள் 6 பாட்களும், குடும்பங்களுக்கான நான்கு பாட்களும் உள்ளன. மும்பை ரயில்வேயால் ஒருமுறை ஒருவர் பாட் இல் தங்குவதற்கு 499 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் இங்கு பயணிகள் தங்கள் பொருட்களை வைத்துக்கொள்ள டிஜி-ஸ்மார்ட் க்ளோக்ரூம் அல்லது டிஜி-லாக்கர் வசதியையும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய ரயில்வே அறிமுகம் செய்தது.

புனே ரயில்வே ஸ்டேஷனில் பாட் ஹோட்டல்கள்
தற்போது, புனே ரயில் நிலையத்தில் 60 பயணிகள் வரை தங்கக்கூடிய அளவுக்கு ஓய்வு அறையும் தங்குமிடமும் உள்ளது. இருப்பினும், தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பல புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. மேலும் மும்பையில் துவங்கப்பட்ட பாட் ஹோட்டல்கள் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற நிலையில் புனேயிலும் அதனை தொடங்கலாம் என மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
புனேவில் வசதிகளுடன் கூடிய பாட் ஹோட்டல்கள் இயக்குவது குறித்து, விரைவில் டெண்டர் விடப்படும். மேலும், இது மும்பை பாட் ஹோட்டல்களைப் போலவே இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. புனே ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாட் ஹோட்டல்களை நடத்த போதுமான இடவசதி இருப்பதாகவும், இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாட் ஹோட்டல்கள் வசதியாக இருப்பது மட்டுமின்றி சுற்றுலா மேம்படுத்தும் ஒரு காரணியாகவும் செயல்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆம்! இதற்கு உள்ளே என்ன தான் இருக்கிறது? தங்கினால் எப்படி இருக்குமென்ற எண்ணம் நமக்கே தோன்றுகிறது அல்லவா!