மகாராஷ்டிரா சுற்றுப்பயணம் - ஒரு சிறப்பு முன்னோட்டம்

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இந்தியாவில் மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது. பற்பல சிறப்புகள் வாய்ந்த மகாராஷ்டிராவில் பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரைகளும், உயர்ந்து நிற்கும் மலைகளும், எண்ணற்ற அருங்காட்சியகங்களும், நினைவுச் சின்னங்களும், கோட்டைகளும் இந்தியாவின் வளமைமிக்க, புகழ்பெற்ற வரலாற்றின் உன்னத சாட்சிகள்.

மகாராஷ்டிரா என்ற பெயரிலுள்ள 'மகா' எனும் வார்த்தை 'சிறந்த' எனும் பொருளில் சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. அதோடு 'ராஷ்டிரா' என்பது ராஷ்டிரகூட பேரரசை குறிக்கிறது. அதேவேளை, 'ராஷ்டிரா' என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் தேசம் என்று பொருள்.

கீர்த்திமிகு வரலாறு

மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.எனினும் மகாராஷ்டிராவை பற்றிய செய்திகள், 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுவான் சுவாங் என்ற புகழ்பெற்ற சீனப் பயணியின் குறிப்புகளில்தான் காணப்படுகின்றன.

மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியின் புகழுக்கும், பெருமைக்கும் எவரும் அருகில்கூட வர முடியவில்லை. இந்த மாமன்னர்தான் இந்தியாவின் கட்டுறுதியான சாம்ராஜியங்களில் ஒன்றான மராட்டிய பேரரசை நிறுவியவர்.

இவர் முகாலய மன்னர்களுடன் செய்த போர்களும், நாடு முழுவதும் கட்டிய எண்ணற்ற கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

சிவாஜி மகாராஜாவின் இறப்புக்கு பிறகு அரியணை ஏறிய அவருடைய மகன் சாம்பாஜி, மகாராஷ்டிராவை ஆளத் துவங்கினார். அதற்கு பிறகு பேஷ்வா மன்னர்களின் வசம் இருந்த மகாராஷ்டிராவை, 1804-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஜெனரல் வெல்லஸ்லீ ராணுவ ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

எனினும் பெயரளவில் பேஷ்வர்களே ஆட்சி பீடத்தில் இருந்தனர். மேலும், மகாராஷ்டிரா என்று நாம் இன்று அறியும் மாநிலம் 1960-ல் உருவாக்கப்பட்டு, அதன் தலைநகராக மும்பை மாநகரம் அறிவிக்கப்பட்டது.

வரலாற்று கோட்டைகளும், மலைவாசஸ்தலங்களும்

மகாராஷ்டிர மாநிலத்தின் தனித்தன்மையே அதன் வியக்கத்தகு வேற்றுமையில் தான் அடங்கியிருக்கிறது. அதன் பனி படர்ந்த மலைகளும், பசுமையான அடர்வனங்களும், பிரம்மாண்டமான கோட்டைகளும், மதச் சிறப்புகளும் அதற்கே உரிய சிறப்பியல்புகள்.

மகாராஷ்டிராவில் உள்ள 350 கோட்டைகளும் மராட்டிய மன்னர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏறக்குறைய 13 கோட்டைகள் சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

இந்த கோட்டைகளிலேயே இரட்டை கோட்டைகளாக அறியப்படும் விஜயதுர்க் மற்றும் சிந்துதுர்க் கோட்டைகளே மகாராஷ்டிராவின் மிகச் சிறந்த கடற்கோட்டைகளாக கருதப்படுகின்றன.மேலும், புனேவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிவ்னேரி கோட்டை, சிவாஜியின் பிறப்பிடம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், சிவாஜிக்கும், அஃப்சல் கானுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போரின் நினைவுகளை வீரகாவியமாய் நமக்கு சொல்வது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது பிரதாப்காட் கோட்டை.

இவை தவிர அஜின்க்யதாரா கோட்டை, முருட் ஜஞ்சிரா கோட்டை, ஹரிஷ்சந்திரகாட் கோட்டை, லோஹாகாட் மற்றும் விஸாப்பூர் கோட்டைகளும் சரித்திர சிறப்பு வாய்ந்த கோட்டைகள்.

மகாராஷ்டிராவின் சஹயாத்ரி மலைத்தொடர்களில் அமைந்திருக்கும் ஒவ்வொரு மலை வாசஸ்தலமும் கண்டிப்பாக சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள். இந்த மலை வாசஸ்தலங்களில் பாதிக்கு மேற்பட்டவை ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தவைகள். மேலும், பசுமையும், இயற்கை அழகும் கொட்டிக் கிடக்கும் மலை வாசஸ்தலங்கள், மகாராஷ்டிர மாநிலம் முழுக்க ஏராளமாக நிரம்பிக் கிடக்கின்றன.

லோனாவலா, மாத்தேரான், பாஞ்ச்கணி, மஹாபலேஷ்வர், கண்டாலா, தோரண்மால், ஜவஹர் மற்றும் சாவந்த்வாடி ஆகிய பகுதிகள் மகாராஷ்டிராவின் முக்கியமான மலை வாசஸ்தலங்கள்.

அதோடு இந்த சுற்றுலாத் தலங்கள் எல்லாம் மும்பை, புனே உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அருகிலேயே இருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி இந்த இடங்களை அடையலாம்.

மகாராஷ்டிராவில் உள்ள 13 அருங்காட்சியகங்களும் வரலாற்றுக் காதலர்களின் தீராத தாகத்தை தணிக்கும் நீர்பிரவாகமாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதிலும் குறிப்பாக புனேவின் டிரைபல் மியூசியமும், பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியம் மற்றும் மும்பையின் ஜெஹாங்கிர் ஆர்ட் காலரி போன்றவை அதிமுக்கியமானவை.

மேலும், நாசிக்கில் உள்ள நாணய அருங்காட்சியகத்தில், நாணயங்கள் குறித்த எல்லா வரலாற்று தகவல்களும், ஆய்வுப் பதிவுகளும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. இவை தவிர நேஷனல் மேரிடைம் மியூசியம், ஷாஹாஜி சத்ரபதி மியூசியம் மற்றும் மணி பவன் மகாத்மா காந்தி மியூசியம் போன்றவைகளும் மகாராஷ்டிராவில் உள்ள குறிப்பிடத்தக்க அருங்காட்சியகங்கள்.

அரபிக் கடல் எந்நேரமும் முத்தமிட்டுக் கொண்டே இருக்கும் புராதனமிக்க கடற்கரைகளை பார்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் மகாராஷ்டிராவை தேடி கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.அதிலும் குறிப்பாக சௌபாத்தி பீச்சிலும், பஸ்ஸைன் பீச்சிலும் கூட்டம் அலை மோதும்.

அதேபோல வேல்நேஷ்வர் மற்றும் ஸ்ரீவர்தன்-ஹரிஹரேஷ்வர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள் பிரபலம் என்பதால் சாகசப் பிரியர்களின் கூடாரமாகவே திகழ்ந்து வருகின்றன.அதுமட்டுமல்லாமல் தஹானு-போர்டி பீச்சும், விஜய்-சிந்துதுர்க் கடற்கரைகளும் காண்போரை எளிதில் வசப்படுத்தி விடும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள முக்கியமான சில புனித ஸ்தலங்களின் காரணமாக இந்த மாநிலம் ஆன்மீக மையமாகவும் அறியப்படுகிறது. இதன் தலைநகரமான மும்பையில் உள்ள மும்பாதேவி போன்ற கோயில்களும், நாசிக்கில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவும் பயணிகளிடையே மிகப்பிரபலம்.மேலும், ஔரங்கபாத்தில் உள்ள கைலாஷ் கோயில், ஷிர்டி, பந்தர்பூர் மற்றும் பாஹுபலி போன்ற புனித ஸ்தலங்களும் சரிநிகர் புகழ் வாய்ந்தவைகள்.

அதுமட்டுமல்லாமல், 8 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஹாஜி அலி மசூதி மற்றும் மகாராஷ்டிராவின் குருத்வாராக்களில் முக்கிய ஒன்றான ஹஜூர் சாஹிப் குருத்வாரா ஆகியவையும் குறிப்பிடத்தக்க புனித ஸ்தலங்கள். இவை தவிர புனேவின் ஓஷோ ஆஸ்ரமம் மற்றும் மும்பையின் மவுண்ட் மேரி தேவாலயம் ஆகியவையும் காணவேண்டிய இடங்கள்.

அஜந்தா மற்றும் எல்லோரா குடைவறைக்கோயில்கள், எலிஃபண்டா குகைகள், மகாலட்சுமி கோயில் மற்றும் கேட்வே ஆஃப் இந்தியா ஆகியவை மகாராஷ்டிராவின் முக்கியமான அடையாளச் சின்னங்கள்.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகச் சிறந்த உதாரணமாக மகாராஷ்டிர மாநிலம் திகழ்ந்து வருகிறது. இதன் வேறுபட்ட கலாச்சாரங்களும், பல்வகை மொழிகளும், உணவு வகைகளும் ஒன்றர கலந்து ஒரு இந்தியத்தன்மையை படைக்கிறது. எனவே மகாராஷ்டிராவில் உள்ள எந்த இடத்துக்கு நீங்கள் பயணம் செய்தாலும் அந்த சுகானுபவம் உங்கள் மனதில் என்றும் அழியாச் சித்திரமாய் நிலைத்து நிற்கும்.

Please Wait while comments are loading...