முருட் ஜஞ்சிரா – துறைமுக நகரம்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் முருட் என்ற அழைக்கப்படும் கடற்கரை கிராமத்துக்கு அருகில் இந்த முருட்ஜஞ்சிரா எனும் புகழ் பெற்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில்  சித்தி ராஜவம்சத்தினரின் ஆளுகையில் புகழ்பெற்று விளங்கியிருந்த இந்த கோட்டையானது மராத்தாக்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்தியப் படை போன்றோரின் தாக்குதல்களை சந்தித்து இன்னமும் சிதையாமல் காட்சியளிக்கின்றது.

ஜஞ்சிரா எனும் இந்த சொல் இந்திய மொழிகளிலிருந்து பிறந்ததல்ல. இது ஜசீரா எனும் அரபி சொல்லிலிருந்து பிறந்துள்ளது. தீவு எனும் பொருளை இந்தச்சொல் குறிப்பதாக கொள்ளலாம்.

முருட் எனும் சொல் மராத்தி மொழியில் அபீசீனியம் அல்லது அபிசீனிய எனும் பொருளைத்தரும் ஹப்சி, ஹப்சன் என்ற வார்த்தைகளுடனும் கூட தொடர்புபடுத்தப்படுகிறது.

மேலும் கொங்கணி மொழியின் மொரோட் எனும் சொல்லுடனும் தொடர்புபடுத்தி இந்த முருட் எனும் பெயர் விளக்கப்படுகிறது. ஆகவே இந்த கோட்டை கொங்கணி மற்றும் அரபி மொழிகளிலிருந்து ‘மொரோட் மற்றும் ஜசிரா’ என்ற சொற்களைக் கலந்து அழைக்கப்பட்டு தற்சமயம் ‘முருட்ஜஞ்சிரா’வாக அறியப்படுகிறது.

சிலர் இதனை ஜல் ஜசீரா என்றும் அழைக்கின்றனர். அதாவது நாலாபுறமும் அரபிக்கடல் நீரால் சூழப்பட்டுள்ளதால் இந்த நினைவுச்சின்னம் அப்படி அழைக்கப்படுகிறது.

முருட் ஜஞ்சிரா – வரலாற்றுப்பின்னணி

12ம் நூற்றாண்டில் சித்தி வம்சத்தினரால் இந்த கோட்டை கட்டப்பட்டபோது முருட் நகரம் அவர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த கோட்டையை பிடிக்க முயன்று தோல்வியடைந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ராஜ வம்சங்களில் மராத்தா வம்சத்தின் தோல்வியையும் முக்கியமாக குறிப்பிடலாம். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் இந்த கோட்டையை பிடிக்க முயன்று ஆறு முறை தோல்வியடைந்தது வரலாறாக உள்ளது.

இந்த கோட்டையில் வலிமையான கட்டமைப்பு மிக அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முருட் நகர மீனவ மக்களால் ஒரு மரக்கோட்டையாக உருவாக்கப்பட்டிருந்த இந்த கோட்டை கடல் கொள்ளையர்களிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் கட்டப்பட்டிருந்தது.

பின்னர் அஹமத்நகர் நிஜாம் ஷாஹி மன்னரின் சார்பில் பீர்கான் என்பவர் இந்த கோட்டையை ஆளுகைக்குள் வைத்திருந்துள்ளார். காலப்போக்கில் இது எதிரிகளால் வெல்லமுடியாத வகையில் புனரமைப்பு செய்யப்பட்டு வலிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அஹமதநகர் சாம்ராஜ்யத்தை சேர்ந்த மாலிக் அம்பர் எனும் பிரதானி இந்த கோட்டையின் கட்டமைப்பு மற்றும் சிறப்புக்கு காரணமானவராக அறியப்படுகிறார்.

விசேஷ தகவல்கள்

முருட் ஜஞ்சிரா எனும் இந்த கடல் கோட்டையை ராஜபுரி ஜெட்டியிலிருந்து அடையலாம். இது இன்றும் நல்ல நிலையில் காவல் கோபுரங்கள் மற்றும் பீரங்கிகளுடன் காட்சியளிக்கின்றது. கோட்டை வளாகத்தினுள் ஒரு மசூதி, அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் பல அரண்மனைகள் இவற்றுடன் ஒரு பெரிய தடாகமும் உள்ளது.

மற்றொரு தீவுக்கோட்டையான பசைன் கோட்டையும் இங்குள்ள முக்கியமான வரலாற்றுச்சின்னமாகும். இது பசைன் கடற்கரையை நோக்கியவாறு அமைந்துள்ளது. அருகிலுள்ள பஞ்சலா கோட்டையும் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

தொன்மை வாய்ந்த கோட்டையை தவிர இந்த முருட் ஸ்தலம் ஒரு அற்புதமான விடுமுறை வாசஸ்தலமாகவும் உள்ளது. இங்குள்ள கடற்கரை தூய்மையான வெண்ணிற மணலுடன் வரிசையாக பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. சுற்றிலும் பசுமையுடன் ஸ்படிகம் போல் சூரிய வெளிச்சத்தில் மின்னும் கடல்நீர் சுற்றுலா பயணிகளை காந்தம் போன்று  வெகுவாக கவர்ந்து ஈர்க்கிறது.

ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ள பயணிகளை கவரும் வகையில் தத்தாத்ரேயர் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இந்த கோயிலிலுள்ள அழகிய விக்கிரகமானது பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரர் ஆகிய மூன்று தலைகளுடன் அழகுடன் காட்சியளிக்கின்றது.

இந்த சிறிய மீன்பிடி கிராமம்  ஒரு முக்கியமான சுற்றுலா மையமாக மிக வேகமாக முன்னேறி வருகிறது. இங்குள்ள அழகான கடற்கரை, கோட்டை இவற்றில் பின்னணியில் சூரியன் போன்றவற்றுடன் நல்ல சீதோஷ்ணநிலையும் வெகுவாக இப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன. ஒரு மறக்க முடியாத அற்புத இயற்கை எழிலை தரிசிக்கும் அனுபவம் இங்கு பயணிகளுக்கு வாய்க்கின்றது.

Please Wait while comments are loading...