கண்டாலா  - விடுமுறை வாசஸ்தல சொர்க்கம்

ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில்  உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின் மேற்குப்பகுதியில் இந்த மலைவாசஸ்தலம் உள்ளது. போர்காட் மலைப் பகுதியின் இறுதியில் லோனாவலா எனப்படும் மற்றொரு மலைவாசஸ்தலத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இந்த கண்டாலா அமைந்துள்ளது. இது மலை ஏற்றத்துக்கு புகழ் பெற்று விளங்கும் ஒரு சுற்றுலாத்தலமாகும்.  

இதன் வரலாறு குறித்த தெளிவான குறிப்புகள் ஏதுமில்லை. இருப்பினும் மராத்தா வீரரான சத்திரபதி சிவாஜி மற்றும் பேஷாக்களால் ஆளப்பட்டு இறுதியில் ஆங்கிலேயர் வசம் வந்துள்ளதென்பது வரலாற்றுப் பின்னணியாக அறியப்படுகிறது.

எல்லா மலைஸ்தலங்களையும் போன்றே காலனிய ஆதிக்கத்தின் போது இது ஆங்கிலேயருக்கு பிடித்தமான ஸ்தலமாக விளங்கியிருக்கின்றது. இங்குள்ள வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய ஸ்தலங்கள் அக்கால இந்தியாவின் உன்னதத்தையும் மேன்மையையும் பறைசாற்றுகின்றன.

சிலிர்க்க வைக்கும் சுற்றுலா அம்சங்களும் பிரமிக்க வைக்கும் இயற்கை எழிலும்

சஹயாத்ரி மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின்மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மலைவாசஸ்தலம் மிக அற்புதமான பருவநிலையை வருடமுழுவதும் கொண்டுள்ளது.

இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் தன் அழகிய பள்ளத்தாக்குகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள், ரம்மியமான ஏரிகள், சொர்க்கலோகம் போன்ற அருவிக்காட்சிகள் போன்றவற்றால் இங்கு வருகை தரும் பயணிகளை மெய்மறக்க செய்கிறது.

அம்ருதாஞ்சன் பாயிண்ட், பிரபு மூக்கு சிகரம், ரைவுட் பார்க் மற்றும் புஷ்ஷி அணை போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

இயற்கை வனப்புகளை நிரம்பப்பெற்றிருக்கும் இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் இதர சுற்றுலா அம்சமாக குகைக்கோயில்களையும் கொண்டுள்ளது. இவை இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது விசேஷமான உண்மையாகும்.

பௌத்த சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குகைக்கோயில்கள் இப்பகுதியில் (அக்காலத்தில்) ஹீனயானம் (ஒருவகை புத்த மதப்பிரிவு) தழைத்தோங்கி இருந்ததற்கான அடையாளமாக விளங்குகிறது.

இயற்கை ரசிகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த கண்டாலா மலைவாசஸ்தலப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டாலே போதும், இந்த பிரதேசத்தின் எழில் அவர்களை வசப்படுத்திவிடும்.

இயற்கை வனப்பை ஏராளமாய் பெற்றுள்ள இந்த கண்டாலா மலைவாசஸ்தலத்துக்கு மழைக்காலத்தில் விஜயம் செய்தால் பூத்துக்குலுங்கும் பசுமையை பார்த்து ரசிக்கவும் மயங்கவும் செய்யலாம்.  கண்டாலாவின் முழு அழகை தரிசிக்க அக்டோபர் முதல் மே மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலம் சிறந்தது.

அருமையான மலைப்பிரதேசமான கண்டாலா மலைவாசஸ்தலத்தில் மலையேற்றத்தில் ஈடுபட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அனுபவம் இல்லாதவாராயினும் சரி அனுபவம் வாய்ந்த சாகச மலையேறியாக இருந்தாலும் சரி இங்குள்ள மலைப்பகுதிகள் யாவருக்கும் மலையேற்ற அனுபவத்தை வாரி வழங்க காத்திருக்கின்றன.

இங்குள்ள மலையேற்ற பாதைகளில் ஏறி சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே தெரியும் பள்ளத்தாக்கின் மயிர்கூச்செரிய வைக்கும் அழகை தரிசிக்கும் அனுபவத்தை பயணிகள் பெறலாம். பிரபு மூக்கு சிகரம் மற்றும் கார்லா மலைகள் மலையேற்றத்துக்கு பொருத்தமான ஸ்தலங்களாக அமைந்துள்ளன.

கண்டாலாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இயற்கைச் சுற்றுலாக்கள் நாட்டின் பிரபலமான இயற்கைப்பிரதேசத்தை சுற்றிப்பார்த்த அற்புத அனுபவத்தை அளிக்கின்றன. இரும்புக்கோட்டை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட லோஹாகாட் கோட்டை கைதிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கண்டாலா அருகில் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழும் குனே நீர்வீழ்ச்சி என்ற அற்புதமான நீர்வீழ்ச்சியும் உள்ளது. சுற்றிலும் அழகான பள்ளத்தாக்குகள்,  தோட்டங்கள் சூழ அமைந்திருக்கும் ராஜாமாச்சி எனும் கோட்டையும் இங்கு அமைந்துள்ளது.

இப்படி ஏராளமான இயற்கை அம்சங்களால் நிரம்பி வழியும் கண்டாலா மலைவாசஸ்தலம் ஒரு அற்புதமான, அவசியம் விஜயம் செய்ய வேண்டிய சுற்றுலாத்தலம் ஆகும்.

மேலும் சில இதர தகவல்கள்

கண்டாலா மலைவாசஸ்தலத்தின் சீதோஷ்ண நிலை வருடமுழுவதுமே ஊர் சுற்றிப்பார்ப்பதற்கேற்ற வகையில் உள்ளது. மிதமான குளுமையான சூழலே இங்கு நிலவுகிறது.

இருப்பினும் குளிர்காலத்தில் வருகை தருவது கூடுதல் விசேஷம். குளுமையும் இயற்கையும் சேர்ந்து விடுமுறைச் சுற்றுலாவை இன்பமுள்ளதாய் ஆக்குகின்றன. இங்கு மலையேற்றத்தில் ஈடுபட்ட அனுபவத்தை உங்களால் வாழ்நாள் முழுக்கவே மறக்க முடியாது என்பதுதான் உண்மை.

சிக்கனமான பயணியானாலும் சரி பணம் படைத்த பயணியானாலும் சரி எல்லாதரப்பினருக்கும் ஒரே மாதிரியான இயற்கை அழகை இந்த கண்டாலா மலைவாசஸ்தலம் தருகிறது.

பலவிதமான சுவையான உணவு வகைகளும் இங்கு பயணிகளுக்காக பலவகை உணவகங்களில் காத்திருகின்றன. பெருநகரங்களுக்கு அருகில் இருப்பதால் நடைப்பயணம் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பிரசித்தமாகவும் இது அறியப்படுகிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தின் எல்லா நகரங்களுடனும் இது போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. கண்டாலாவுக்கு மிக அருகில் புனே விமான நிலையமும் அமைந்துள்ளது. இதுதவிர கண்டாலாவிலிருந்து எல்லா முக்கிய நகரங்களுக்கு ரயில் இணைப்புகளும் உள்ளன.

இந்த சிறிய எழில் வாய்ந்த மலைவாசஸ்தலம் அமைதியையும் இயற்கையையும் ஆழ்ந்து ரசிக்க உகந்ததாகும். நீங்கள் மும்பை புனேயில் வசித்தால் காரை எடுத்துக்கொண்டு உடனே இங்கு புறப்படலாம்.

தூரமாய் வசிக்கும் பட்சத்தில் இப்போதே இந்த கண்டாலா எனும் இயற்கைச்சொர்க்கத்திற்கு விஜயம் செய்வதற்கான பயணத்திட்டங்களை ஆரம்பியுங்கள்.

Please Wait while comments are loading...