சாவந்த்வாடி - சொக்கவைக்கும் பேரழகு

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாவந்த்வாடி நகரம், பசுமையான காடுகளுக்கும், கவின் கொஞ்சும் ஏரிகளுக்கும், மலைகளுக்கும் நடுவே இந்திரலோகம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்தை முன்னர் கேம்-சாவந்த் என்ற குடும்பம் ஆட்சி செய்து வந்ததால் இது சாவந்த்வாடி என்று அழைக்கப்படுகிறது.

சாவந்த்வாடி நகருக்கு கிழக்கில் மேற்கு தொடர்ச்சி மலைகள் மதிலாய் அமைந்திருக்க, மேற்கில் அரபிக் கடல் சூழ்ந்திருக்க, இயற்கை எழுதிய கவிதை போல தோற்றமளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நகரத்துக்கு ஒருமுறை வந்தாலும் போதும் அதன் நினைவுகள் அழியா சித்திரமாய் அவர்களின் நெஞ்சங்களில் போய் சேகரமாகிவிடும். மேலும் இந்த நகரம் கோவாவிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே இருப்பதால், இங்கும் கொங்கனி வாடை வீசும்.  

சாவந்த்வாடி மக்கள்

சாவந்த்வாடி நகரம் முன்னர் மராட்டிய அரசின் பிடியில் இருந்தது. அதன் பின்பு தனி அரசாக மாறிய இந்த நகரத்தில் ஆண்டாண்டு காலமாக மால்வானி இன மக்கள்தான் அதிக எண்ணிகையில் வசித்து வருகின்றனர்.

இந்த மக்கள் தங்கள் கலாச்சாரத்தின் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்கள். அதோடு கலைகளிலும், கைத்தொழிலிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

சாவந்த்வாடியின் கலாச்சாரம்

சாவந்த்வாடியில் கிடைக்கக்கூடிய கலைப் பொருட்கள் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் சிறு தொழில்  நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

இதில் மரபொம்மைகள், ஓவியங்கள் மற்றும் மூங்கிலை கொண்டு செய்யப்படும் கலைப்பொருட்கள் என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாங்கிச் செல்லலாம்.

சாவந்த்வாடி நகரில் கொங்கனி, மராத்தி, உருது, ஆங்கிலம் போன்ற மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. இங்கு உள்ள காடுகளில் காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை பார்க்கலாம். அதோடு மருத்துவ மூலிகைகளும் இந்தக் காடுகளில் கிடைக்கும்.

சாவந்த்வாடி வரும் பயணிகள் மோட்டி தலாவ், ராயல் பேலஸ், ஆத்மேஷ்வர் தாலி, நரேந்திர கார்டன், ஹனுமான் மந்திர், அம்போலி மலைவாசஸ்தலம், கோல்காவ்ன் தர்வாஜா, விட்டல் மந்திர் போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...