பெருவாரியான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் பிரதான ரயில் பாதையான சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே புறநகர் ஏசி மின்சார ரயில்கள் விரைவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது, சென்னையின் 12 முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ஏசி புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! அந்த 12 நிலையங்கள் என்னவென்று இங்கே பார்ப்போம்!
நீண்ட நாள் கோரிக்கை
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் மிக குறைந்த கட்டணம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். அலுவலக நேரங்களில் இந்த ரயில்களில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருக்கும். இந்த மின்சார ரயில்கள் அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும். இந்த ரயில் சேவையில் ஏ.சி பெட்டிகளை இணைக்க வேண்டும், என கோரிக்கை ரயில் பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு வந்தது.
மொத்தமாக 4,914 பேர் பயணிக்கலாம்
இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு பிப்ரவரி 3-வது வாரத்தில் வழங்கப்பட்டது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேர், நின்றுகொண்டு 3,798 பேர் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும், கட்டண விவரங்கள் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எந்தெந்த நேரங்களில் இயங்கும்
முதல் ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00, பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு காலை 7.48, மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35, மாலை 5.25 மணிக்கும் சென்றடையும். இரவு 7.35 ரயில் சேவை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் சென்றடையும்.
இந்த 12 நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்
இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட்டு, சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்த சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படவுள்ளது. சில நேரங்களில் பராமரிப்புகாக சனிக்கிழமை ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மற்ற ரயில்களுக்கான ரயில் நேரம் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த மாற்றங்களால் பயணிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது.
கட்டணம் எவ்வளவு இருக்கலாம்
இந்த ரயிலுக்கான எண் மற்றும் தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு ரூ.65 முதல் 80 வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் இந்த ரயிலுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படவுள்ளது. இந்த சீசன் டிக்கெட் வைத்திருந்தால் மற்ற புறநகர் ரயிலிலும் செல்லலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications




