Search
  • Follow NativePlanet
Share
» »பொங்கலுக்காக 16,932 சிறப்பு பேருந்துகள் – சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

பொங்கலுக்காக 16,932 சிறப்பு பேருந்துகள் – சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் கொண்டாடி மகிழும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. மாசக் கணக்கில் ஊருக்கு செல்லாதவர்களும் கூட பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பொங்கல் விடுமுறையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொது மக்கள் இடையூறின்றி பயணிக்கும் வகையில் சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கிவிட்டன!

Pongal Special buses in Tamil Nadu

பொங்கல் பண்டிகைக்காக 16,932 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

திரும்பி வரவும் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகை முடிந்த பின் திரும்பி வருவதற்கு ஏதுவாக ஜனவரி 16-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக அமைச்சர் அறிவித்தார்.

24 மணி நேரமும் சென்னை மாநகர போக்குவரத்து

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றம் அளித்த ரயில்வே புக்கிங்

அந்த வகையில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் தீர்ந்து போனது. இதனால் ரயிலில் பயணிக்க நினைத்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொதுமக்களுக்கு நிம்மதியளித்த அறிவிப்பு

அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடியுள்ளனர். தமிழக அரசின் போக்குவரத்துறை துறையால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் விறுவிறுப்பான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்த சிறப்பு பேருந்துகள் வெகுஜன மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

சிறப்பு பேருந்துகளில் பயணிக்க tnstc official app மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் பேருந்து நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான 12 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, பூக்கடை மற்றும் மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளியுங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனவும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார். ரயிலை தவறவிட்டது போல பேருந்துகளையும் தவற விடாதீர்கள் மக்களே!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X