சத்தீஸ்கர் மாநிலத்தின் பிரயாக் எனும் சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ராஜிம் எனும் சிறுநகரம் ராய்பூர் மாவட்டத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. மஹாநதி ஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் ஆன்மீக யாத்ரீகர்களை மட்டுமல்லாமல் வரலாற்று ஆர்வலர்களையும் கவர்ந்திழுக்கிறது. புனிதமாக கருதப்படும் ஆற்றங்கரை என்பதால் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் இங்கு உருவாகியிருக்கின்றன.
மஹாநதி, பைரி மற்றும் சொந்தூர் ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் திரிவேணி சங்கம் எனும் புனித ஸ்தலம் இப்பகுதியில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ராஜிம் நகரத்தில் பல்வேறு வரலாற்று சின்னங்களும் இடம் பெற்றுள்ளன.
புகழ் பெற்ற வரலாற்று நிபுணர்களான ஜே டி பெக்லர் மற்றும் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஆகியோர் இந்த ராஜிம் நகரத்துக்கு வருகை தந்துள்ளதோடு தங்களது நூல்களிலும் இந்த நகரம் குறித்து விரிவாக விவரித்துள்ளனர்.
ராஜிம் நகரம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்
பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலம் என்பதால் இந்த ராஜிம் நகரம் முழுக்க கோயில்களும் பாரம்பரிய வரலாற்று சின்னங்களும் நிரம்பியுள்ளன. ராஜிவ் லோச்சன் எனும் அழகிய கோயில் இந்நகரத்தின் பிரதான கவர்ச்சி அம்சமாக அமைந்துள்ளது.
அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வருடம் முழுக்க பார்வையாளர்கள் விஜயம் செய்த வண்ணம் உள்ளனர். இது தவிர குலேஷ்வர மஹாதேவா மந்திர், ராமச்சந்திரா கோயில் மற்றும் சம்பரண் போன்றவையும் இந்த நகரத்தின் முக்கியமான கோயில்களாகும்.
பருவநிலை
ராஜிம் நகரம் வெப்பமண்டல பருவநிலையை கொண்டிருக்கிறது. இங்கு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்ப நிலை 40°C வரை வெப்பநிலை நிலவுகிறது. குளிர்காலத்தின்போது இப்பகுதியின் வெப்பநிலை கணிசமாக குறைந்துவிடுகிறது.
எப்படி செல்லலாம்?
சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லா நகரங்களிலிருந்து ராஜிம் வருவதற்கான பேருந்து வசதிகள் உள்ளது. ரயில் இணைப்புகளுக்கும் குறைவில்லை. ராய்பூர் நகரம் வழியாக இங்கு வந்து சேரலாம்.



Click it and Unblock the Notifications