Search
  • Follow NativePlanet
Share
» »தங்கக் கோவில் தவிர்த்து அமிர்தசரஸில் இன்னும் ஐந்து இடங்கள்

தங்கக் கோவில் தவிர்த்து அமிர்தசரஸில் இன்னும் ஐந்து இடங்கள்

வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில

By Udhaya

வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான 'அம்ரித்ஸர்' சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில்தான் இந்த நகரமும் அழைக்கப்படுகிறது. இங்கு சுற்றுலா செல்பவர்கள் பொதுவாக தங்கக் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல் அருகிலேயே வேறு ஐந்து சிறப்பான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 குருத்வாரா பாபா அடல்

குருத்வாரா பாபா அடல்

குருத்வாரா பாபா அடல் எனும் இந்த குருத்வாரா தங்கக்கோயிலுக்கு தெற்கே அம்ரித்ஸர் நகரின் மிக உயரமான கட்டமைப்பாக வீற்றிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குருத்வாரா ஆதியில் பாபா அடல் ராய் என்பவரது சமாதி ஸ்தலமாக இருந்து வந்திருக்கிறது. இவர் குரு ஹர்கோபிந்த்ஜி அவர்களின் மகனாவார். 40 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த குருத்வாராவின் எண்முக வடிவ கோபுரத்தில் ஒன்பது அடுக்குகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 1628ம் ஆண்டு மரணமடைந்த பாபா அடல் ராய் அவர்களின் ஒன்பது வருட குறுகிய வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

இந்த குருத்வாராவின் தரைத்தளத்தில் நான்கு திசைகளிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பிரதான வாசல் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குரு கிரந்த சாஹிப் நூல் ஒரு எண்முக பீட அமைப்பின்மீது வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குருத்வாராவில் 24 மணி நேரமும் ‘லங்கார்' எனப்படும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரில் சுற்றுலா பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒரு இடமாகும்.

Amarpreet.singh.in

 மந்திர் மாதா லால் தேவி

மந்திர் மாதா லால் தேவி

மந்திர் மாதா லால் தேவி எனும் இந்த வழிபாட்டுத்தலம் அம்ரித்ஸர் நகரில் ராணி கா பாக் எனும் பூங்கா வளாகத்தின் அங்கமாக அமைந்துள்ளது. இது 20 ம் நூற்றாண்டில் பிரபல்யமாக வாழ்ந்த பெண் யோகி ஒருவரின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரை பூஜ்ய மாதாஜி என்று குறிப்பிட்டு வந்தனர். தற்போது அம்ரித்ஸர் நகரத்தின் முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக பிரசித்தமாக விளங்கும் இந்த கோயில் கத்ராவிலுள்ள புகழ் பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோயிலைப்போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெகு தூரங்களிலிருந்தும் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர். இந்த கோயிலின் நுழைவாயில் பகுதியில் கணுக்கால் அளவுக்கு நீர் நிரம்பிய கால்வாய் அமைப்புகள், சுரங்கப்பாதை வாசல்கள், கண்ணாடி பதிக்கப்பட்ட கூடங்கள் மற்றும் நெளிவு நெளிவான நடைபாதைகள் போன்றவை அமைந்திருக்கின்றன. கோயிலின் உள்ளே பக்தர்கள் பல்வேறு ஹிந்து தெய்வங்களின் சிலைகளை காணலாம். சிவன், பிரம்மா, காளி மற்றும் சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன. வேறு பல சிறு சன்னதிகளையும் கொண்டுள்ள இந்த கோயிலில் வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதாக நம்பிக்கை நிலவுகிறது. மதர் இந்தியா கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.


Diego Delso

கைர் உத்தின் மஸ்ஜித்

கைர் உத்தின் மஸ்ஜித்

கைர் உத்தின் மஸ்ஜித் எனப்படும் இந்த வரலாற்று கால மசூதி அம்ரித்ஸர் நகரில் காந்தி கேட் அருகே ஹால் பஜார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடைய வரலாற்றுப்பின்னணியையும் இது பெற்றிருக்கிறது. முஹமத் கைர் உத்தின் என்பவரால் 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி ஸ்தலத்தில் தான் ஆங்கிலேயருக்கு எதிரான கலக முயற்சிகள் துவக்கப்பட்டன. டூட்டி ஏ ஹிண்ட் மற்றும் ஷா அதாவுல்லா புக்காரி ஆகியோர் இந்த கலகத்திற்கு தலைமை தாங்கியுள்ளனர். அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த மசூதி அமைப்பு அம்ரித்ஸர் நகரில் வசிக்கும் முஸ்லிம் இனத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு ஆன்மீக வழிபாட்டுத்தலமாக இருந்து வருகிறது. தொழுகை நேரத்தில் இந்த மசூதியின் முற்றத்தில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டுள்ள காட்சியை காணலாம். வரலாற்று சின்னம் மற்றும் வழிபாட்டு தலம் போன்ற அடையாளங்களை கொண்ட இந்த மசூதி அம்ரித்ஸர் நகரில் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களில் ஒன்றாக வீற்றிருக்கிறது.

கைசர் பாக்

கைசர் பாக்

கைசர் பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா முகாலயர் கால அம்சங்களும் காதிக் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களும் கலந்த ஒரு அற்புத வளாகமாக அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கிறது. 1845-50 ம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தோட்டப்பூங்கா வளாகம் நாற்கர வடிவில், வாசற்பகுதியில் படிக்கட்டு அமைப்புகளோடு காட்சியளிக்கிறது. நுழைவாயில் அமைப்பானது ஒரு பாலம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. அந்த பாலம் போன்ற அமைப்பில் இந்தோ-காதிக் பாணியில் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றும் கண்ணக்கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது. கைசர் பாக் தோட்டபூங்காவின் பிரதான அம்சமாக அதன் நடுவில் ஒரு மாட மைதானம் அமைந்திருக்கிறது. இதன் மூன்று புறங்களில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் கட்டுமானங்கள் காணப்படுகின்றன. பல்வேறு மாட அமைப்புகள், அலங்கார விதான மாடங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த பூங்கா புகைப்பட ரசிகர்கள் விரும்பக்கூடிய ஒரு எழிற்பிரதேசமாகும். பகல் நேரத்தில் அம்ரித்ஸர் நகரை சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகள் இந்த பூங்காவுக்கு விஜயம் செய்வது அவசியம்.

Ankitkumarsaxena

குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

குருத்வாரா பிபேக்சர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த சீக்கியக்கோயில் பிபேக்சர் எனப்படும் தீர்த்தக்குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த தீர்த்தக்குளத்தை 6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் ஜி 1628ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார். பின்னர் அக்குளத்தை ஒட்டியே இந்த குருத்வாராவை மஹாராஜா ரஞ்சித்சிங் கட்டியுள்ளார். வேட்டைக்கு சென்று வந்த பின்பு குரு ஓய்வெடுக்கும் இடத்தில் இந்த குருத்வாரா கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. ரம்மியமான இயற்கைச்சூழலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த குருத்வாரா ஒரு அழகிய தோட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த தோட்டத்தில் குரு ஹர்கோபிந்த் ஜி ஓய்வெடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் தனது குதிரையை கட்டி வைப்பதற்கு பயன்படுத்திய மரம் ஒன்று இன்றும் குருத்வாரா வளாகத்தில் உயிருடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷிரோண்மணி பர்பந்தக் கமிட்டி எனும் அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த குருத்வாராவுக்கு மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் விஜயம் செய்யலாம்.


Vrlobo888

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X