Search
  • Follow NativePlanet
Share
» » 7515 கிமீ வரை பரந்துவிரிந்திருக்கும் கடற்கரை பற்றி தெரியுமா?

7515 கிமீ வரை பரந்துவிரிந்திருக்கும் கடற்கரை பற்றி தெரியுமா?

By Staff

இந்தியாவின் கடலோரப் பகுதி லக்ஷ்வதீப் மற்றும் அந்தமானையும் சேர்த்து மொத்தம் 7517 கி.மீ. நீண்டு கிடக்கிறது. தீபகற்பமான இந்தியா மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்கக்கடலும், தெற்கே இந்தியப்பெருங்கடலும் சூழ அமைந்துள்ளது.

அரபிக்கடல் பெண் போல அமைதியும், அழகும் என்றால், வங்கக்கடல் பேராண்மையும், சீற்றமும் கொண்டது. இப்படியாக ஆயிரமாயிரம் மைல்கள் பரந்துவிரிந்து கிடக்கும் இந்தியக் கடற்கரைகளை கண்டு ரசிக்க நமக்கு ஒரு ஆயுள் போதாது.

எனினும் அதற்கு ஒரு மாற்றாக இந்தப் படங்களும், அவற்றைப் பற்றிய செய்திகளும் இருக்கும் என்று நம்புகிறோம்.

ஹர்னாய் பீச்

ஹர்னாய் பீச்

மும்பையிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஹர்னாய் எனும் மீன்பிடி கிராமத்தின் எழிலாக திகழ்ந்து வருகிறது ஹர்னாய் பீச். இங்கு ஒவ்வொரு நாள் மாலையும் கடலிலிருந்து வரும் மீன்களை ஏற்றிச் செல்ல மாட்டுவண்டிகள் வரும் காட்சியையும், அதன் பின்னர் அவற்றை வண்டியில் எடுத்துச் சென்று ஏலம் விடும் காட்சியும் அற்புதமான அனுபவமாக இருக்கும்.

படம் : Cj.samson

மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி

மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்படி கிரமமான மணப்பாடில் அமைந்துள்ள கடற்கரை மணப்பாடு கடற்கரை என்று அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தக் கடற்கரையில்தான் சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான மரியான் பட சூப்பர் ஹிட் பாடல் 'சோனாபரியா' படம்பிடிக்கப்பட்டது.

படம் : Ramkumar

ராதா நகர் கடற்கரை, ஹேவ்லாக் தீவு

ராதா நகர் கடற்கரை, ஹேவ்லாக் தீவு

அந்தமான் நிகோபாரின் முக்கியமான தீவுகளில் ஒன்றான ஹேவ்லாக் தீவில் ராதா நகர் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையை 'ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான ‘டைம்' பத்திரிகை 2004-ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தியுள்ளது.

படம் : Shimjithsr

வெங்குர்லா கடற்கரை

வெங்குர்லா கடற்கரை

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள வெங்குர்லா நகரின் அழகுக்கு காரணமாக திகழ்கிறது வெங்குர்லா கடற்கரை.

படம் : Ankur P

வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

படம்

அரம்போள் பீச்

அரம்போள் பீச்

அஞ்சுனா மற்றும் மாபுஸா கடற்கரைகள் அரம்போள் பீச்சுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், அரம்போள் பீச்சின் அருகாமை பகுதிகளில் உள்ள மணி ஸ்டோன் என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டிடம் பயணிகளிடையே மிகப்பிரபலம். அரம்போள் பீச்சில் பரபரப்புக்கு எப்போதும் வேலையே கிடையாது. இதன் காரணமாகவே காலாற நடந்துலாவும் இன்பத்தை அனுபவிக்க இந்த கடற்கரைக்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வருகிறார்கள். மேலும், பனாஜியிலிருந்து, மாபுஸா செல்லும் பேருந்துகளின் மூலம் நீங்கள் சுலபமாக அரம்போள் பீச்சை அடையலாம்.

படம்

கோல்வா பீச்

கோல்வா பீச்

தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் கோல்வா பீச், வடக்கு கோவாவில் உள்ள மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் மிகவும் அமைதியானது. அதுமட்டுமல்லாமல் 24 கிலோமீட்டர் நீளம் பறந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று. புகழ்பெற்ற கோல்வா தேவாலயத்துக்கு அக்டோபர் மாதத்திற்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். கோல்வா பீச்சுக்கு வெகு அருகிலேயே போர்த்துகீசிய கபோ டி ராமா கோட்டை இருக்கிறது. அதோடு நகரின் மத்தியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், மார்காவ்ன் ரயில் நிலையத்திற்கு வெகு அருகிலும் இருப்பதால் கோல்வா பீச்சை அடைவது மிகவும் சுலபம்.

படம் : robinn

பாகா பீச்

பாகா பீச்

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும். இங்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். பாகா பீச்சின் தொடக்கத்திலேயே அமைந்திருக்கும் புகழ்பெற்ற கஃபே பிரிட்டோஸில் கிடைக்கும் காக்டெயிலுக்காகவும், கடல் உணவுக்காகவும் உயிரை கூடக் கொடுக்கலாம். அதோடு கோவான் மீன் சாப்பாடும் இங்கு வரும் பயணிகளிடையே பிரபலம்.பாகா பீச்சில் கரோக்கி இரவு என்பது மிகவும் சாதாரணம் என்பதால், குடில்கள் அனைத்துமே கரோக்கி வசதியுடனே உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் அனைத்து குடில்களிலும் வெவ்வேறு சுவை மற்றும் மனங்களில் ஹக்கா உணவு கிடைக்கும்.

படம் : Hugh Venables

மாண்ட்ரேம் பீச்

மாண்ட்ரேம் பீச்

வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், தேன்நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அற்புதமான இடமாகும். இது கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் நீங்கள் சென்று வரலாம்.

உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களுக்கு மத்தியிலே, அதன் தங்க மணற்பரப்பில் படுத்துக்கொண்டு மதுவையும், கடல் உணவுகளையும் ருசிக்கும் அற்புதமான அனுபவத்தை வாத்தைகளால் விவரிக்க முடியாது. இந்த கடற்கரையின் பேரமைதியின் காரணமாக இங்கு இயற்கை காதலர்களும், நடைபயணம் செல்ல விரும்புவர்களும், தனிமை விரும்பிகளும் அதிக அளவில் கூடுகின்றனர். உட்டோர்டா பீச்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக எண்ணற்ற பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்டோர்டா பீச்சில் நீந்தித் திளைக்கலாம். அதோடு இந்தக் கடற்கரையில் உள்ள ஜீபாப் குடிலையும், மார்ட்டின் கார்னர்ஸ் என்ற உணவகத்தையும் கண்டிப்பாக நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது. கோவா தலை நகர் பனாஜி, உட்டோர்டா பீச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உட்டோர்டா பீச்சுக்கு அருகில் இருக்கும் மஜோர்டா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சௌபாத்தி கடற்கரை

சௌபாத்தி கடற்கரை

மும்பையின் முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி கடற்கரை, விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலை கரைக்கப்படும்போது பரபரப்பாக காணப்படும். அப்போது அதன் அழகும் சற்று கூடுதலாக தெரியும்.

படம் : Nikkul

கலங்கூட் பீச்

கலங்கூட் பீச்

வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. கலங்கூட் பீச் நீர் விளையாட்டுகளுக்காக பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக பாராசைலிங்கில் நீங்கள் வானில் பறக்கும்போது அஞ்சுனா பீச்சில் உள்ள சௌஸா லோபோ என்ற உணவகத்தின் அழகிய தோற்றத்தையும், கேண்டலிம் கடற்கரையின் கண்கொள்ளா காட்சியையும் கண்டு ரசிக்கலாம். அதோடு தரையிறங்கிய பின் சௌஸா லோபோவில் நண்டுக்கறி உண்ண மறக்காதீர்கள். இந்த சௌஸா லோபோவில் கிடைக்கும் நண்டுக்கறி போல நீங்கள் உலகில் வேறெங்கும் சாப்பிட்டிருக்க முடியாது. அதன் காரணமாகவே இந்த உணவகத்துக்கு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கேண்டலிம் பீச்

கேண்டலிம் பீச்

கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். கேண்டலிம் பீச்சில் 12 வருடங்களாக தரைதட்டி நிற்கும் ரிவர் பிரின்சஸ் என்ற கப்பல் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். என்னதான் இந்தக் கடற்கரை நடப்பதற்கு ஏதுவாக இல்லாமலும், குடில்களற்று காணப்பட்டாலும், ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் மணற்குன்றுகள், கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தனித்துவமான அழகு படைத்தவை. கேண்டலிம் பீச் பார்டேஸ் பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில்தான் அமைந்திருக்கிறது. அதேபோல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனாஜியிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக கேண்டலிம் பீச்சை அடைந்து விடலாம்.

படம் : FaizanAhmad21

ஜூஹு பீச்

ஜூஹு பீச்

டற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம். மேலும், இந்தக் கடற்கரையின் சூரிய அஸ்த்தமனக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

படம் : Sajeevkumarc

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மார்க்கமாக எளிதாக அடைந்து விடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.

அரோசிம் பீச்

அரோசிம் பீச்

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரையான அரோசிம் பீச்சில் எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இந்தக் கடற்கரையில் குடில்களை அவ்வளவாக பார்க்க முடியாது. இருப்பினும் பீச்சில் இருக்கக்கூடிய ஒரு சில குடில்களில் சுவையான கோவான் உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம்.

படம் : tdsilva

காப்பாடு பீச்

காப்பாடு பீச்

கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள காப்பாடு கடற்கரைதான் 1498-ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா முதன் முதலாக இந்தியாவில் கால் பதித்த இடம். வாஸ்கோட காமா இந்தக் கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் "கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா' 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினார்" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

வர்கலா பீச், வர்கலா

வர்கலா பீச், வர்கலா

வர்கலா பீச் திருவனந்தபுரத்திலிருந்து 54கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இங்கு ஜனார்தன ஸ்வாமி கோயில் எனும் 2000 வருட பழமையை கொண்ட அற்புதமான கோயில் ஒன்று உள்ளது. அதோடு சரும வியாதிகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் கொண்ட நீரூற்று ஒன்றும் இப்பகுதியில் காணப்படுகிறது. இந்த கடற்கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களுக்கு மத்தியில் கைப்பந்து விளையாட்டு, நீச்சல், அலைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மேலும் இங்கு இஸ்ரேலி, சைனீஸ், இத்தாலியன் மற்றும் சர்வதேச உணவு தயாரிப்புகளை பரிமாறும் கஃபேக்கள் நிரம்பியுள்ளன.

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது. மேலும் தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டி 200 மீட்டர் தூரத்தில் இருப்பதால் பயணிகள் அங்கு சென்று அமைதியாக ஓய்வெடுக்கலாம்.

ஆலெப்பி பீச் - ஆலப்புழா

ஆலெப்பி பீச் - ஆலப்புழா

ஆலெப்பி பீச் நகர மையத்திலேயே ஆலப்புழா ரயில் நிலையத்துக்கு வெகு அருகில் அரை கிலோமீட்டர் தூரத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த கடற்கரை முழுக்க தென்னை மரங்கள் சூழ அட்டகாச அழகுடன் காட்சியளிக்கிறது. அதோடு படகு மூலம் இந்த கடற்கரை பகுதியிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே உள்ள தீவுப்பூங்காவுக்கு சென்று ரசிப்பதுடன், அங்குள்ள ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி கீழே காட்சியளிக்கும் இயற்கை அழகை ரசித்து மகிழலாம். இதற்காக ஒரு சிறு தொகையே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கோவளம்

கோவளம்

கோவளத்தின் 3 முக்கிய கடற்கரைகளாக சமுத்ரா பீச், ஹவா பீச், லைட் ஹவுஸ் பீச் ஆகியவை அறியப்படுகின்றன. இந்த கடற்கரைகள் மூன்றும் அடுத்தடுத்து ஒரே கடலோரப் பகுதியில் அமைந்திருக்கின்றன. இதில் மற்ற இரண்டை விட சமுத்ரா பீச்சில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படும். அதேவேளையில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் இரவு வேளையில் கலங்கரை விளக்கின் ஒளியில் மிக அழகாக காட்சி தரும் லைட் ஹவுஸ் பீச்சை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது. லைட் ஹவுஸ் பீச்சுக்கு மறுபுறம் ஹவா பீச் அமைந்துள்ளது. இங்கு அந்த காலங்களில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபட்டு வந்தார்களாம்!!

பேக்கல் பீச், பேக்கல்

பேக்கல் பீச், பேக்கல்

பேக்கல் பீச் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 550 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு பேக்கல் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள பேக்கல் கோட்டையில் திரைப்படங்கள் அதிகமாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. மணிரத்னத்தின் உயிரே படத்தின் ஒரு பாடல் கட்சி இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பூவார் பீச், பூவார்

பூவார் பீச், பூவார்

பூவார் பீச்சில் நண்டுகள் குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருப்பதையும், மண்ணில் துளைபோட்டு கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு இருப்பதே அலாதியான அனுபவமாக இருக்கும். பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றும் சங்கமமாகும் அபூர்வ காட்சியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. இந்த கடற்கரை திருவனந்தபுரத்துக்கு அருகில் 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

பைந்தூர் கடற்கரை, பைந்தூர்

பைந்தூர் கடற்கரை, பைந்தூர்

பைந்தூர் கடற்கரையின் அமைதிக்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இந்தக் கடற்கரை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் கவின்மிகு காட்சி பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. மேலும் பைந்தூர் கடற்கரைக்கு அருகில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.

கார்வார் கடற்கரை, கார்வார்

கார்வார் கடற்கரை, கார்வார்

கார்வார் கடற்கரை மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சூழ்ந்திருக்க மத்தியில் எழிலே உருவாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. அதோடு அமைதியான அற்புதமான கடற்கரையை தேடும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு இது மிக பொருத்தமான இடமாகும். இங்கு பயணிகள் சூரியக்குளியல், மீன் பிடித்தல் மற்றும் இதர நீர் விளையாட்டு பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் தேங்காய் சேர்த்து செய்யப்படும் காரசாரமான கடல் உணவு வகைகளை சுவைக்க மறந்து விடாதீர்கள்.

படம் : Noronha3

மால்பே கடற்கரை, மால்பே

மால்பே கடற்கரை, மால்பே

உடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

படம் : Neinsun

மரவந்தே கடற்கரை, மரவந்தே

மரவந்தே கடற்கரை, மரவந்தே

கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.

சூரத்கல் கடற்கரை

சூரத்கல் கடற்கரை

மங்களூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியான கர்நாடகா ரீஜனல் இஞ்சினியரிங் கல்லூரிக்கு (KREC ) வெகு அருகிலேயே சூரத்கல் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதற்கு இங்கு அமைந்திருக்கும் அழகிய கலங்கரை விளக்கமே காரணம். இக்கலங்கரை விளக்கத்தின் உள்ளே சென்று பார்வையிடுவதற்கு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

படம் : Pranavjee

தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்

தன்னீர்பாவி கடற்கரை, மங்களூர்

மங்களூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் பனம்பூர் எனும் இடத்தில் தன்னீர்பாவி கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையில் குர்புரா நதி கடலில் கலக்கின்ற அற்புதமான காட்சியுடன், சூரிய அஸ்த்தமனக் காட்சியும் சேர்ந்து அற்புதமான ஒரு மாலை நேரத்தை உங்களுக்கு பரிசாக கொடுக்கப்போகின்றன.

செயிண்ட் மேரி தீவு கடற்கரை

செயிண்ட் மேரி தீவு கடற்கரை

கர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.

படம் : Man On Mission

முருதேஸ்வர் கடற்கரை, முருதேஸ்வர்

முருதேஸ்வர் கடற்கரை, முருதேஸ்வர்

உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையாக கருதப்படும் சிவன் சிலை முருதேஸ்வர் கடற்கரையின் கவர்ச்சி அம்சமாகும். அதோடு முருதேஸ்வர் கடற்கரைக்கு வரும் பயணிகள் கடலில் மீன்பிடிப்பது, படகுச் சவாரி செய்வது, கடற்கரையில் சூரியக் குளியல் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

கௌப் கடற்கரை, உடுப்பி

கௌப் கடற்கரை, உடுப்பி

கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்பப்படும் கடற்கரைகளுள் ஒன்று உடுப்பியிலுள்ள கௌப் கடற்கரை. இந்தக் கடற்கரையை சுற்றி காணப்படும் கரும்பாறைகள், 100 வருட பழமையான கலங்கரை விளக்கு, கடலின் ஒங்கார இசை என்ற பின்னணியில் சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிப்பது மறக்கமுடியாத அனுபவம்.

ஓம் பீச்

ஓம் பீச்

ஓம் என்ற எழுத்து வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பயணிகள் நீர்ச்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட வசதி உண்டு. அதுமட்டுமல்லாமல் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள் துணையோடு பயணிகள் இவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Rrevanuri

மெரினா பீச்

மெரினா பீச்

சென்னையின் முக்கிய அடையாளமாக மெரினா பீச் வீற்றுள்ளது. வட முனையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தென்முனையில் அடையாறு ஆற்றின் கழிமுகம் வரை இந்த கடற்கரை நீண்டுள்ளது. 13 கி.மீ நீளமுள்ள இந்த கடற்கரைப்பகுதி உலகிலேயே 2-வது மிக நீண்ட கடற்கரையாக புகழ்பெற்றுள்ளது.மெரினா கடற்கரைப்பகுதியில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இரண்டு முன்னாள் தமிழக முதல்வர்களின் நினைவுத்தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடற்கரையை ஒட்டிய சாலையில் பல்வேறு முக்கிய தலைவர்கள் மற்றும் ஆளுமைகளின் சிலைகளை வரிசையாக பார்க்கலாம். பாரம்பரியம் மிக்க சில கல்லூரிகளும் இந்த கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கின்றன.

படம் : B. Sandman

தனுஷ்கோடி கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரை

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே அமையப்பெற்றுள்ள தனுஷ்கோடி கடற்கரைதான் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நில எல்லையாக இருக்கிறது. இந்தக் கடற்கரை பகுதியில் நீங்கள் ஆக்ரோஷம் மிகுந்த இந்தியப்பெருங்கடல், ஆழமற்ற அமைதியான வங்காள விரிகுடாவுடன் கலக்கும் அற்புதக் காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

படம்

மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம் கடற்கரை

பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியிலிருந்து 95 கி.மீ தூரத்திலும் மாமல்லபுரம் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது சிறப்பானது ஆகும். பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : epidemiks

திருச்செந்தூர் கடற்கரை

திருச்செந்தூர் கடற்கரை

'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..' என்ற பாடலில் வருவது போல இந்த கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பதற்காகவே முருகப்பெருமான் இங்கு குடிகொண்டுள்ளாரோ என்னவோ?! இங்கு வரும் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு முன் இந்த கடலில் நீராடிச் செல்வது வழக்கமாக உள்ளது.

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை

இராமேஸ்வரம் கடற்கரை அழகிய கடல் நிலத்தோற்றங்களுக்கும், அலைகளற்ற கடற்பரப்பிற்கும் புகழ்பெற்றதாகும். இங்கு அலைகள் 3 செ.மீ அளவுக்கும் குறைவாகவே எழும்புவதால் இது பார்ப்பதற்கு மிகப்பெரிய ஓர் ஆறு போன்ற தோற்றத்தை அளிக்கின்றது. இந்தக் கடற்கரைக்கு அருகிலேயே ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட இராமேஸ்வரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Tamil1510

கோவளம் கடற்கரை

கோவளம் கடற்கரை

தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை குடும்பத்துடன் சந்தோஷமாக கழிப்பதற்காக ஏராளமான சென்னை வாசிகள் கோவளத்திற்கு வருகின்றனர். இங்கு அமைந்துள்ள 5-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து கோயில்களை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

படம் : Kmanoj

சில்வர் பீச்

சில்வர் பீச்

தமிழ் நாட்டின் 2-வது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு குதிரையேற்றம் மற்றும் படகுச் சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளில் பயணிகள் ஈடுபடலாம். மேலும் சிறார்களின மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பெசண்ட் நகர் கடற்கரை

பெசண்ட் நகர் கடற்கரை

எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென்னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையின் நீட்சியானது அடையாறு ஆறு கழிமுகம் வரை முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் பீச் துவங்குகிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன. பெசண்ட் நகர் கடற்கரையில் கார்ல் ஷ்மிட் எனும் டச்சு மாலுமிக்காக 1930ம் ஆண்டில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை பார்க்கலாம். நீச்சல் தெரியாத ஒருவரை காப்பாற்ற முயன்று இவர் உயிர் துறந்துள்ளார். இந்த சின்னம் பல தமிழ்ப்படக்காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. தற்போது சற்றே சேதமடைந்து காணப்படும் இதனை பாதுகாக்க பல ஆர்வலர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

படம் : Nikhilb239

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று சமுத்திரங்கள் சங்கமிக்கும் இடம் என்பதால் உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. அதிலும் இந்த 3 சமுத்திரங்கள் சங்கமமாகும் இடத்தில் நின்று சூர்ய அஸ்த்தமனத்தையும், சூர்யோதத்தையும் கண்டு ரசிக்கும் அனுபவத்தை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்?! அதுமட்டுமல்லாமல் முருகன் குன்றத்தின் மீதிருந்து பார்க்கும்போது திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும் தெய்வீக ஒலியுடன் ஜொலிக்கின்ற காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடும்!

பூம்புகார் கடற்கரை

பூம்புகார் கடற்கரை

தமிழ்நாட்டின் முதல் துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரில் சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த கடற்கரை பூம்புகார் கடற்கரை. தலைக்காவேரியில் பிறப்பெடுத்த காவிரித்தாய் கடலில் கலக்கும் இடமாக பூம்புகார் நகரம் அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'காவிரி ஆறு கடலில் புகும் இடம்' என்ற பொருளில் 'புகும் ஆறு' என்பதே காலப்போக்கில் புகார் என்று ஆனதாக சொல்லப்படுகிறது.

கோல்டன் பீச்

கோல்டன் பீச்

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் ரம்மியமான கிழக்கு கடற்கரைச்சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது கோல்டன் பீச். இங்கு உள்ள வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் எனும் தனியார் பொழுதுபோக்கு பூங்கா சென்னை மாநகரத்தில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட தீம் பார்க் ஆகும். ஒரு நாள் முழுதும் குடும்பத்துடன் இந்த பொழுதுபோக்கு வளாகத்திலேயே கழிக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாகவும் பல்வேறு அம்சங்களை கொண்டதாகவும் வி.ஜி.பி யுனிவர்சல் கிங்டம் பூங்கா பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. குழந்தைகளுக்காக அலாடின், டெலிகம்பாட், டாஷிங் கார், கோ கார்ட், வாட்டர் சூட் போன்ற விளையாட்டு அம்சங்கள் மற்றும் சவாரிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்காக ஃபெர்ரிஸ் வீல், ரோலர் கோஸ்டர், பலூன் ரேசர், டால் கிங்டம், ஃப்ளையிங் மெஷின் மற்றும் ஜங்கிள் கார் போன்ற சவாரி அமைப்புகள் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், நவீன நடன நிகழ்ச்சிகள், லேசர் ஷோ இசை நிகழ்ச்சிகள் போன்றவையும் இந்த வளாகத்தில் நடத்தப்படுகின்றன.

படம் : L.vivian.richard

ரிஷிகொண்டா பீச், விசாகப்பட்டணம்

ரிஷிகொண்டா பீச், விசாகப்பட்டணம்

விசாகப்பட்டணம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆந்திர மாநிலத்திலேயே மிக அழகிய கடற்கரையாக ரிஷிகொண்டா பீச் அறியப்படுகிறது.

படம் : Amit Chattopadhyay

சீ பீச், பூரி

சீ பீச், பூரி

ஒடிசா மாநிலத்தின் பூரி நகரத்தில் சீ பீச் அமைந்துள்ளது. உலகத்தை மறந்து, உங்களை மறந்து, கண்கள் இமையாமல் ஒரு சிலையை போல நிற்க போகிறீர்கள் சீ பீச்சின் சூரிய அஸ்த்தமனத்தை முதன்முதலாக பார்க்கும் தருணத்தில். அதுமட்டுமல்ல ஒரு முறை பார்த்து ரசித்த அற்புதத்தை தினம் தினம் பார்க்க வேண்டும் என்று ஒரு குழந்தையை போல நீங்கள் அடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

கணபதிபுலே பீச்

கணபதிபுலே பீச்

இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே பீச் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை மும்பையிலிருந்து 375 கி.மீ தூரத்தில் உள்ளது.

படம் : Vvp1001

அலிபாக் கடற்கரை

அலிபாக் கடற்கரை

மஹாரஷ்டிராவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில், ராய்கட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அலிபாக் நகரின் அழகுக்கு மூலமுதல் காரணமாக திகழ்ந்து வருகிறது அலிபாக் கடற்கரை.

படம் : Rakesh Ayilliath

பீமாலி பீச்

பீமாலி பீச்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் உள்ள பீமாலி பீச்சில் காணப்படும் பாண்டவர்கள் சிலை பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

படம் : Adityamadhav83

பாண்டிச்சேரி கடற்கரை

பாண்டிச்சேரி கடற்கரை

அரியான்குப்பம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்ட பிறகு ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக ஒரு காலத்தில் மிக அழகிய கடற்கரையாக இருந்த இதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது பரவலாக பாண்டிச்சேரி கடற்கரை என்றும் வீதி உலா கடற்கரை என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் ப்ரோமேனேட் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தற்பொழுது கற்பாளங்கள் செயற்கை சுவர்களாக வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த கடற்கரையில் நடந்து செல்லவோ, நீச்சலடிக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பிரெஞ்சு மொழியில் 'பொய்யான கடற்கரை' என்று அர்த்தப்படும் வகையில் 'லா பாஃக்ஸ்-ப்ளேஜ்' என்ற செயற்கை கடற்கரை ஒன்று இந்த கடல் சுவர்களுக்கு மேலே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மாலை வேளைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் கடற்கரை சாலையில் காலாற நடந்து செல்வது இனிமையான அனுபவமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பாண்டிச்சேரி நகரின் முக்கிய பார்வையிடங்களை பார்த்துக் கொண்டே செல்லும் வகையில் 1.5 கிமீ நீளத்திற்கு இந்த கடற்கரை நீண்டிருக்கிறது. எனவே இந்த கடற்கரை பாண்டிச்சேரியின் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more