Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு நாள் இரண்டு நாளல்ல – 70 நாட்களுக்கு சென்னை வாசிகளுக்கு ஒரு சூப்பரான டைம்பாஸ்!

ஒரு நாள் இரண்டு நாளல்ல – 70 நாட்களுக்கு சென்னை வாசிகளுக்கு ஒரு சூப்பரான டைம்பாஸ்!

சென்னை வாசிகள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி சென்னை தீவுத்திடலில் ஜனவரி 4 அன்று கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 70 நாட்களுக்கு நடைபெறும், அதாவது நீங்கள் மார்ச் 1௦ ஆம் தேதி வரை இந்த கண்காட்சியைக் கண்டு களிக்கலாம். பல வேடிக்கைகள், கேளிக்கைகள், நடனம், விளையாட்டு மற்றும் வித விதமான உணவுகளை சுவைத்து மகிழ இந்த கண்காட்சிக்கு நீங்களும் வருகை தரலாம்!

Chennai theevuthidal exhibition

சென்னை மக்களுக்கு மிகவும் பிடித்த கண்காட்சி

இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பெரும்தொற்று காரணமாக கண்காட்சி நடத்தப்படவில்லை. இதனால் சென்னை மக்கள் பெரிதும் ஏமாந்து போயினர் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த கண்காட்சியில் தவறாமல் பெரும்பாலான சென்னை வாசிகள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன் கலந்துக் கொள்கின்றனர்.

தொடங்கிய 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4 அன்று தொடக்க விழாவுடன் சென்னை தீவுத்திடலில் துவங்கியது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருமான டாக்டர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்வேறு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி

தொடக்க நிகழ்வாக, கண்காட்சியின் நுழைவுவாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளன.

மேலும், 10,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வாகனங்களில் அமர்ந்தவாறே உணவு அருந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Chennai theevuthidal exhibition

சிறுவர்களின் மனதை கவரும் கண்காட்சி

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட ஸ்நோ வேர்ல்ட், ஜியான்ட் வீல், வாட்டர் ரோலர், டோரா டோரா போன்ற 2௦க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகள், பல ஸ்டால்கள், சிறுவர் இரயில், மீன் காட்சியகம், பேய் வீடு. பறவைகள் காட்சி, 3D தியேட்டர் போன்ற விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன.

பலவகையான உணவுகள்

டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற வகைவகையான திண்பண்டங்களையும் உண்டு மகிழலாம். அது மட்டுமின்றி நவீன உணவு வகைகளான நூடுல்ஸ், பிசா, பாஸ்தா, ஷவர்மா, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன் போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தீவுத்திடல் கண்காட்சி 2023 டிக்கெட்டுகள்

2023 ஆம் ஆண்டிற்கான தீவு திடல் கண்காட்சி டிக்கெட்டுகளை நேரடியாக அந்த இடத்தில் வாங்கலாம். முரண்பாடுகளைத் தவிர்க்க, அமைப்பாளர் நுழைவுச் சீட்டுகளை நேரலை கவுண்டரில் மட்டுமே வழங்குகிறார். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டால்கள், விளையாட்டுகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளையும் மக்கள் அந்தந்த இடங்களில் நேரடியாக வாங்கலாம்.

Chennai theevuthidal exhibition

கட்டணம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

பெரியவர்களிடம் ரூ. 3௦, சிறார்களிடம் ரூ. 25 மற்றும் மாணவர்களிடம் ரூ. 2௦ கட்டணமாக வசூலிக்கப்படும். பொங்கல் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கண்காட்சி காலை 1௦ மணி முதல் இரவு 1௦ மணி வரை திறந்து இருக்கும். மீதமுள்ள நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 1௦ மணி வரை திறந்து இருக்கும்.

எதற்காக செல்ல வேண்டும்?

இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும் நீங்கள் இங்க வந்து செல்லலாம். வருகின்ற பொங்கல் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த கண்காட்சிக்கு சென்று வாருங்கள்.

எப்படி செல்வது?

அண்ணா சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள தீவு திடலை மாநகர பேருந்துகள், டாக்சி அல்லது இரு சக்கர வாகனங்கள் மூலம் எளிதில் அடையலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. நீங்களும் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இங்கே வந்து செல்லுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X