» »30 கடற்கரைகள் வழியாகச் செல்லும் ரயில் பயணத்தைப் பற்றி அறிவீர்களா?

30 கடற்கரைகள் வழியாகச் செல்லும் ரயில் பயணத்தைப் பற்றி அறிவீர்களா?

Posted By: Udhaya

சுற்றுலாக்களில் ரயில் பயணங்களும், கடற்கரை உலாக்களும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகும். இவை இரண்டையும் ஒரு சேர அனுபவித்தால் எப்படி இருக்கும். இந்தியாவில் இந்த வழித்தடத்தில் பயணம் செய்தால் 30 கடற்கரைகள் வழியாக அட்டகாசமான பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரியுமா?

30 கடற்கரைக்கும் ஒரே நாளில் சென்று பார்ப்பது சற்று சிரமமான காரியம் என்றாலும், அந்த வழியாக செல்லும் இந்த ரயிலில் பயணித்தால் உங்களுக்கு பிடித்தமான எந்த கடற்கரைக்கும் நினைத்தமாத்திரத்திலேயே சென்று வரலாம்.

ரயில் நிலையங்களிலிருந்து கடற்கரைகள் குறைந்த தூரத்திலேயே அமைந்துள்ளது என்பதும், இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து கடற்கரைகளும் இந்தியாவின் சிறந்த கடற்கரைகள் என்பதிலும் சிறிதும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. வாருங்கள் பயணத்தைத் தொடர்வோம்

 மங்களூரு

மங்களூரு


கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.

மங்களூரின் ஒப்பிட முடியாத இயற்கை வனப்பு ஒரு விசேஷ கீர்த்தியை அதற்கு தந்திருக்கிறது. நேத்ரவதி மற்றும் குர்புரா என்ற இரு ஆறுகளின் முகத்துவார நீர்த்தேக்கங்களை ஒட்டி 132.45 சதுர கி.மீ பரப்பளவுக்கு மங்களூர் நகரம் அமைந்திருக்கிறது.

உடுப்பி

உடுப்பி

கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.

Abdulla Al Muhairi

 மால்பே

மால்பே

கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில் அமைந்திருப்பதால் இது பிரமிக்க வைக்கும் எழில் நிறைந்த சிற்றுலா (பிக்னிக்) ஸ்தலமாக காட்சியளிக்கின்றது.

Dagnytaggart000

மரவந்தே

மரவந்தே

மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இது கர்நாடகாவின் தெற்கு கன்னரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கன்னிக் கடற்கரையின் கரையோரத்தில் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்களும், எல்லையில்லாமல் பரந்துக் கிடக்கும் மணற்பரப்பும், ஆரவாரமில்லாமல் காணப்படும் சமுத்திரமும் உங்கள் மனதை சாந்தப் படுத்தி சுற்றுலா வந்த அனுபவத்தை இன்பமயமாக ஆக்கும்.

Ppyoonus

 பைந்தூர்

பைந்தூர்


பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது.

Stanyserra

பட்கல்

பட்கல்

கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும் அறியப்பட்டுள்ளது. உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த நகரம் கார்வார் நகரத்திலிருந்து 130 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 17ல் அமைந்துள்ள இந்த நகரம் கொங்கண் ரயில் பாதை வழியாகவும் சென்றடையும்படி உள்ளது.

 முருதேஷ்வர்

முருதேஷ்வர்


உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. சிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.

கும்டா

கும்டா

அற்புதமான பாறை வடிவங்கள் பின்னணியில் காட்சியளிக்கும் எழில் நிறைந்த கடற்கரையில் இந்த கும்டா சிறுநகரம் அமைந்துள்ளது. பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் இந்த நகரில் ஏராளம் உள்ளன. அகனாஷனி ஆறு அழகான நெளிவுகளுடன் ஓடி அரபிக்கடலில் கலப்பதை இங்கு காணலாம்.

சாகச அனுபவங்களை விரும்பும் சுற்றுலா பயணிகள் இங்கு பாறைஏற்றத்தில் ஈடுபடுவதற்கான வசதிகள் இங்குள்ளன. அதற்கான பொருத்தமான இடமாக இங்குள்ள யனா என்னுமிடத்தில் பிரம்மாண்ட பாறை வடிவமைப்புகள் காணப்படுகின்றன.

Pradeepa88

 கோகர்ணா

கோகர்ணா

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறுகள் சேருமிடம் ஒரு பசுவின் காதைப்போல் காணப்படுவதாலேயே இந்த நகருக்கு ‘கோகர்ணா' என்ற பெயர் வந்துள்ளது.

Happyshopper

கார்வார்

கார்வார்

கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக இருக்கும் இந்த நகரம் 15ம் நூற்றாண்டு முதற்கொண்டே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு வியாபார கேந்திரமாக விளங்கி வந்துள்ளது.

Noronha3

அரம்போள் பீச்

அரம்போள் பீச்

அரம்போள் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும் எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல இங்கு நீங்கள் ஹோட்டல்களையோ, உணவகங்களையோ பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து விடும்.

மாண்ட்ரேம் பீச்

மாண்ட்ரேம் பீச்

வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், தேன்நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற அற்புதமான இடமாகும். இது கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது.

மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும் இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் நீங்கள் சென்று வரலாம்.

 வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்

வாகத்தோர் பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால் இந்த இடத்தை எப்போதும் சுற்றுலாப் பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மேலும் இங்கு வரும் பயணிகள் இந்தக் கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பின் அழகில் தங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவான் உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது.

Philanthropist 1

மோஜ்ரிம் பீச்

மோஜ்ரிம் பீச்

மோஜ்ரிம் கடற்கரையை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். எனினும் கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. இது தவிர ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நீங்கள் மோஜ்ரிம் பீச்சை அடைவது சிறப்பானது.

அரபிக் கடலின் அற்புதக் காட்சியை மோஜ்ரிம் கடற்கரையிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவம் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும். அதோடு இந்தக் கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களும், இங்கு கிடைக்கும் கடல் உணவும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் மோஜ்ரிம் பீச்சில் நிலவும் அமைதியான இயற்கை சூழல் ஏகாந்தப் பிரியர்களுக்கு ஒப்பற்ற வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Nikhilb239

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

பாகா பீச்

பாகா பீச்

நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற கடற்கரை கோவாவில் உண்டெனில் அது பாகா பீச்சை தவிர வேறெதுவாக இருக்க முடியும். இங்கு கடற்கரைக் குடில்கள் முதல் உணவகங்கள் வரை, சிறந்த ஹோட்டல்கள் முதல் அசல் ஜேர்மன் அடுமனை வரை ஒவ்வொன்றும் உங்களுக்கு புதியதோர் அனுபவத்தை கொடுக்கும்.

பாகா பீச் அதன் பரப்பளவிலும் சரி, அது தரும் அனுபவங்களிலும் சரி எவரையும் பிரமிக்க வைத்து விடும். இங்கு வரும் பயணிகள் பாராசெய்லிங், வாட்டர் பைக் சவாரி, பனானா ரைட், படகு சவாரி போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

McKay

 கலங்கூட் பீச்

கலங்கூட் பீச்

வடக்கு கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கேண்டலிம் மற்றும் பாகா கடற்கரைகளுக்கு மத்தியில் கலங்கூட் பீச் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. இந்தக் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதி மிகவும் விசாலமானது.

இந்த பார்க்கிங் பகுதியை ஒட்டி வரிசையாக சில கடைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த கடைகளில் ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம். அதோடு கோவா வந்ததின் நினைவாக நீங்கள் ஏதேனும் வாங்க நினைத்தால், அவற்றையும் இந்தக் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம்.

கேண்டலிம் பீச்

கேண்டலிம் பீச்


கேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. ஆனால் இந்தக் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். அதோடு இங்கு ஒரு சில குடில்களையும், உணவகங்களையும் நீங்கள் பார்க்கலாம். இருந்தாலும் அவைகளும் கூட கடற்கரையிலிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் தான் காண முடியும்.

FaizanAhmad21

சின்குவேரிம் பீச்

சின்குவேரிம் பீச்

சின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது.

Gayatri Priyadarshini

மீராமர் பீச்

மீராமர் பீச்

மீராமரில் இருந்து தெரியும் அரபிக் கடலின் அற்புதமான தோற்றம் எவரையும் எளிதில் சொக்க வைத்து விடும். அதன் காரணமாகவே இந்தக் கடற்கரைக்கு 'கடலின் அழகிய தோற்றம்' எனும் பொருள் படும்படி மீராமர் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தக் கடற்கரை மாண்டோவி நதி கடலில் கலக்கும் இடத்தில், பனாஜியிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. மீராமர் பீச் 2 கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து கிடப்பதால் மாலையில் அப்படியே கடற்கரையில் ஒரு சிறு உலா செல்வது மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் நிலவொளியில் தகதகக்கும் மணற்பரப்பும், வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களிலிருந்து புறப்பட்டு வரும் இளந்தென்றலும் சேர்ந்து இந்திர லோகத்தில் இருப்பது போன்ற ஒரு பிரம்மையை உங்களுக்குள் ஏற்படுத்தி விடும்.

yamarhythm

போக்மாலு பீச்

போக்மாலு பீச்

போக்மாலு பீச் கோவா விமான நிலையத்துக்கும், வாஸ்கோடகாமா நகரத்துக்கும் வெகு அருகிலேயே இருப்பதால் சுலபமாக அடைந்து விடலாம். இங்கு நீங்கள் காலை நேரம் முழுக்க நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம். அதன் பின்னர் நேவல் மியூசியம் சென்று வரலாற்று காலத்தில் கொஞ்ச நேரம் பயணிக்கலாம். இல்லையென்றால் போக்மாலு பீச் ரிசார்ட்டில் அமர்ந்துகொண்டு சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் டோனா பௌலாவுக்கு ஃபெர்ரி அல்லது படகு மூலம் செல்லும் அனுபவம் அலாதியானது.அதோடு போக்மாலு பீச்சில் எண்ணற்ற குடில்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் ஸ்கூபா டைவிங் விளையாட்டு இந்தப் பகுதிகளில் மிகப்பிரபலம்.

அரோசிம் பீச்

அரோசிம் பீச்

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரையான அரோசிம் பீச்சில் எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

இந்தக் கடற்கரையில் குடில்களை அவ்வளவாக பார்க்க முடியாது. இருப்பினும் பீச்சில் இருக்கக்கூடிய ஒரு சில குடில்களில் சுவையான கோவான் உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம். மேலும் கடற்கரையை ஒட்டி நிறைய 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன.

robinn

உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களுக்கு மத்தியிலே, அதன் தங்க மணற்பரப்பில் படுத்துக்கொண்டு மதுவையும், கடல் உணவுகளையும் ருசிக்கும் அற்புதமான அனுபவத்தை வாத்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த கடற்கரையின் பேரமைதியின் காரணமாக இங்கு இயற்கை காதலர்களும், நடைபயணம் செல்ல விரும்புவர்களும், தனிமை விரும்பிகளும் அதிக அளவில் கூடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல இங்கு இடைத் தரகர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

 கோல்வா பீச்

கோல்வா பீச்

தெற்கு கோவாவில் அமைந்திருக்கும் கோல்வா பீச், வடக்கு கோவாவில் உள்ள மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் மிகவும் அமைதியானது. அதுமட்டுமல்லாமல் 24 கிலோமீட்டர் நீளம் பறந்து விரிந்து கிடக்கும் இந்தக் கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்று.

மேலும் ஒருபுறம் தெற்கு கோவா கேளிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இங்குள்ள ஒரு சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நம்பிக்கை அளிக்கும் விதமாகவே உள்ளது. அதோடு புகழ்பெற்ற கோல்வா தேவாலயத்துக்கு அக்டோபர் மாதத்திற்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

வர்கா பீச்

வர்கா பீச்

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா பீச் போன்ற பெரிய கடற்கரைகளுக்கு மத்தியில் சிறிய கடற்கரையாக இருந்தாலும் வர்கா பீச் அவற்றுக்கு எந்த வகையிலும் தரத்தில் குறைந்ததில்லை.

இந்த கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களும், சூரிய கதிர்களில் மின்னிடும் வெண் மணலும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதக் காட்சிகள். மேலும் இந்த விருந்தோடு சேர்த்து உங்களுக்காக கோவான் உணவும், காக்டெயில்களும் வர்கா பீச்சில் காத்துக்கொண்டிருக்கின்றன.

 பீட்டல் பீச்

பீட்டல் பீச்


பீட்டல் பீச்சில் நீங்கள் சில அற்புதமான நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். அதோடு பீட்டல் பீச் மிகவும் சுத்தமாக இருப்பதால் கடல் நீரில் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீந்தித் திளைக்கலாம். இதுதவிர பீட்டல் பீச்சில் கிடைக்கும் கோவான் உணவு வகைகள் பயணிகளிடையே வேகுப்பிரசித்தம்.

கோல்வா பீச்சுக்கு அருகில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் கார் ஓட்டுனர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவைகள் என்பதால் அந்த இடத்துக்கு உங்களை விரைவாக கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

Pranay.rocking

 ஹரிஹரேஸ்வர்

ஹரிஹரேஸ்வர்

ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள சிவன் கோயிலான ஹரிஹரேஷ்வர் கோயிலுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இதனாலேயே இந்த ஸ்தலம் கடவுளின் வீடு எனப்பொருள்படும் ‘தேவ்கர்' என்று அறியப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் புனித ஆறாக கருதப்படும் சாவித்திரி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது.

Siddhesh Mangela

ரெடி

ரெடி


ரெடி என்று அழைக்கப்படும் ரெடிப்பட்டணம், பிரம்மாண்டமான அரபிக்கடலின் ஓரத்தில், எண்ணிலடங்கா முந்திரி மரங்களும், உயரமான தென்னை மரங்களும் சூழ பூலோக சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில், வெங்குர்ல தாலுக்கா பகுதியில் அமைந்திருக்கும் ரெடி கிராமம், முன்னொரு காலத்தில் அப்பகுதியின் முக்கியமான துறைமுகமாக இருந்து வந்தது

Misslinius

கணபதிபுலே

கணபதிபுலே

கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரம் மும்பையிலிருந்து 375 கி.மீ தூரத்தில் உள்ளது. நகரக் கலாச்சாரம் மற்றும் வணிகக் கலாச்சாரம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் தன் இயற்கை அழகைத் தக்க வைத்திருக்கும் இந்த கடற்கரை ஸ்தலம் ஒரு முக்கியமான விடுமுறை சுற்றுலாத்தலமாக புகழ்பெற்றுள்ளது.

Debjeet20

அலிபாக்

அலிபாக்

மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் துவக்க வரலாறு 17ம் நூற்றாண்டில் சிவாஜி மஹாராஜாவால் உருவாக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது. 1852ம் ஆண்டு இது ஒரு தாலுக்காவாகவும் அந்தஸ்து பெற்றது. அலிபாக் பகுதி பெனி இஸ்ரேலிய யூதர்கள் பல வசிக்கும் பகுதியாகவும் உள்ளது

Rakesh Ayilliath

Read more about: travel, karnataka, goa, maharastra