தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட தலைநகராகவும் பெருநகரமாகவும் இருப்பதால் சென்னையின் டிராபிக் பற்றி சொல்லவே வேண்டாம். முக்கிய நேரங்களிலும் மழைக் காலங்களிலும் சென்னை ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் நுண்ணறிவு போக்குவரத்து முறையை (Artificial intelligence) செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் டிராபிக் குறைவதோடு, ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும்.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த சென்னை
சென்னை மாநகரப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களும், 200க்கும் மேற்பட்ட முக்கிய போக்குவரத்து சந்திப்புகளும் உள்ளன. சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகவே உள்ளது. இதனால், வாகனங்கள் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர வாகனங்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணவே சென்னை போக்குவரத்து முறையில் மாற்றம் கொண்டு வர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இனி சென்னையில் அடாப்டிவ் முறையில் சிக்னல்கள்
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இத்திட்டமானது போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TIMS) மற்றும் நகர பேருந்து அமைப்பு (CBS) உட்பட சில முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது. TIMSன் கீழ், 165 சந்திப்புகளில் அடாப்டிவ் ட்ராஃபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டு, நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்கள் செயல்படும். தற்போது சிக்னல்கள் போக்குவரத்து காவலர் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட நேரத்திலோ இயக்கப்படுகின்றன. இந்த அடாப்டிவ் முறையில் சிக்னல்கள் தானாக செயல்படும் வகையில் அமைக்கப்படும்.

சாலை விபத்துகள் பற்றிய எச்சரிக்கை
முதற்கட்டமாக சென்னையில் உள்ள 165 போக்குவரத்து சந்திப்புகள் போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்படும். சைன்போர்டுகள், சாலை அடையாளங்கள் மற்றும் பிற சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். மேலும், விபத்துகள் உள்ளிட்ட அசாதாரண போக்குவரத்து நடவடிக்கைகளை கண்டறியவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிக்கவும் 58 இடங்களில் போக்குவரத்து விபத்து கண்டறிதல் அமைப்பு நிறுவப்படும்.

போக்குவரத்து நெரிசலை அறிய தொழில்நுட்பம்
17 இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதில் எந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எந்த மாற்று பாதையில் போக்குவரத்து குறைவாக உள்ளது. எந்த பாதையில் எந்த இடத்திற்கு, எவ்வளவு நேரத்தில் செல்லமுடியும் என்ற தகவலை உடனுக்குடன் வாகன ஒட்டிகளுக்கு திரையிட்டு காட்டப்படும். இதன் வாயிலாக வழக்கமான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ளலாம். 115 இடங்களில் தானியங்கி போக்குவரத்து கவுண்டர்கள் மற்றும் வகைப்படுத்தி அமைப்பு அமைக்கப்படும். போக்குவரத்து இயக்கத்தை ஆய்வு செய்ய உதவும்.

கண்காணிக்கப்படும் ஊழியர்கள்
இந்த செயல்பாடுகள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிர்வகிக்கப்படும். 3,500 பேருந்துகளில் கணினியை கண்காணிக்க மற்றொரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், 71 டெர்மினல்கள் மற்றும் 532 பேருந்து தங்குமிடங்களில் ஒரு பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் 31 டெப்போக்களில் மேலாண்மை அமைப்பு ஆகியவையும் அமைக்கப்படும். பேருந்து கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகள் தகவல் அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டு, பேருந்துகளின் நிகழ்நேர இயக்கத்தை பயணிகள் அறிந்துகொள்ள உதவும். டிப்போ மேலாண்மை அமைப்பின் கீழ், MTC தங்கள் ஊழியர்களின் செயல்திறனையும் கண்காணிக்க முடியும்.

மெட்ரோ போன்ற அதிநவீன தொழில்நுட்பம்
இதில், எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் எங்கு செல்கிறது என்பதனை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும். பேருந்து நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படுவது போல அடுத்து வரும் பேருந்தின் நேரம், தற்போதைய நேரத்தில் அந்த பேருந்து எங்கு இருக்கிறது, போன்ற விவரங்களையும் பயணிகள் அறிந்துகொண்டு பயணத்தை திட்டமிட முடியும். இதனை மொபைல் செயலி வாயிலாகவும் அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அத்துடன், பேருந்தில் பயணியப்பவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில், மெட்ரோ ரயிலில் அறிவிக்கப்படுவதுபோல், இறங்கும் இடம் குறித்த அறிவிப்பு, பேருந்து நிறுத்தம் வாரியாக அறிவிக்கப்பட உள்ளது.
இனி சென்னையில் வாகனம் ஓட்டுவது ஈசி
உதாரணமாக, போக்குவரத்து சந்திப்பில் அதிக வாகனங்கள் இருந்தால், சிக்னல் தானாகவே திறக்கும். சிக்னலில் ஆம்புலன்ஸ் இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்ந்து 4 சிக்னல்கள் திறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, சிவப்பு விளக்குகளை மீறுபவர்களை கண்டறியும் தொழில்நுட்பமும், அதிக வேகத்தில் செல்பவர்களை கண்டறியும் தொழில்நுட்பமும் அமைக்கப்படும்.
இந்த அமைப்பு வந்துவிட்டால் சென்னையில் டிராபிக் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு, விபத்து நடந்த இடத்தில் விரைந்து உதவியும் செய்யப்படும். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?



Click it and Unblock the Notifications





