» »அம்பாசமுத்திரத்தில் ஒரு மழைக்காலம்

அம்பாசமுத்திரத்தில் ஒரு மழைக்காலம்

Written By: Staff

மழை, கான்கிரீட் நகரத்தையும் பசுமை நகரமாக மாற்றிவிடும் வலிமை படைத்தது. ஒரு பெரு மழை போதும்; நகரை, ஆறாய் மாற்ற! அப்படியிருக்க, ஊரைச்சுற்றி மேற்கு மலைத் தொடர்ச்சியும், தாமிரபரணி ஆறும் கொண்ட அம்பாசமுத்திரம் மழைக்காலத்தில் எப்படி காட்சியளிக்கும் ? படிக்கும் போதே நமக்குள் ஒரு சிலிர்ப்பு வருகிறதல்லவா! ஆகவே, திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் அம்பாசமுத்திரம் ஒன்று.

வேளாக்குறிச்சி என்றும் முன்பு அழைக்கப்பட்டது அம்பாசமுத்திரம். தமிழகத்தின் மிகப்பெரும் சித்தர்களில் ஒருவரான அகத்தியர் அம்பாசமுத்திரத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

கோவில் நகரம்

Papanasar_Temple

Photo Courtesy : Mariselvam

அம்பாசமுத்திரத்தைச் சுற்றி பார்க்க வேண்டிய‌ பல இடங்கள் இருக்கின்றன. அதில், முதன்மையானது, கோவில்கள். பாபநாசம் பாபநாசர் கோவில், மேலச்சேவல் மேகலிங்கேஸ்வரர் கோவில், மேலச்சேவல் வேணுகோபால்சாமி கோவில், அகத்தியர் ஆலயம், துர்கை அம்மன் ஆலயம் என்று கோவில் நகரமாக திகழ்கிறது.

அம்பாசமுத்திரம் வெறும் புனித ஸ்தலம் மட்டும் இல்லை; அது, இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு பூலோக சொர்க்கமும்கூட‌.

Banatheertham_Falls

Photo Courtesy : Rajkumar1985

எழில்மிகு சுற்றுலா தளங்கள்

களக்காடு முண்டந்துறை புலி சரணாலயம், பசுமைக்காடாய் விரியும் தேயிலைச் செடிக‌ள் சூழ் மாஞ்சோலைத் தோட்டம் மக்கள் மிக விரும்பிப் பார்க்கும் முக்கிய இடங்கள். காரையார் அணை, பாணதீர்த்தம் அருவி, தாமிரபரணி ஆறு என இன்னும் பல வகை சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

Karaiyar

Photo Courtesy : Rajkumar1985

பறவைப் பிரியர்களுக்கு அம்பாசமுத்திரம் ஒரு மிகச்சிறந்த இடம். மலைகளும், ஆறும், பசுமையும் பல பறவைகளுக்கு புகலிடமாய் இருக்கிறது. இதுதவிர, கைவினைப் பொருட்களுக்கு அம்பாசமுத்திரம் பெயர் பெற்றது. மர வேலைப்பாடு செய்த கைவினைப் பொருட்களும், பாய்களும் அவசியம் பார்க்க வேண்டியவை. பருவமழை நேரத்தில், அம்பாசமுத்திரம், குறைந்த செலவில் கண்டு மகிழ ஒரு அழகிய சுற்றுலா தளம்.

அம்பாசமுத்திரம் செல்வது எப்படி ?

திருநெல்வேலியிலிருந்து 45 கீ.மி தொலைவில் இருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து 15-30 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.

அம்பாசமுத்திரத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. ஆனால், விரைவு வண்டிகள் வராது. திருநெல்வேலி, செங்கோட்டை பேசஞ்சர்கள் இயக்கப்படுகின்றன.

அருகில் இருக்கும் விமான நிலையம்: மதுரை மற்றும் திருவன‌ந்தபுரம்.