Search
  • Follow NativePlanet
Share
» »கேரளத்தில் அதிசய குகைகள் ஐந்தையும் காண்போமா?

கேரளத்தில் அதிசய குகைகள் ஐந்தையும் காண்போமா?

போர்க்காலங்களில் காடுகளுக்குள் இருக்கும் குகைகளில் தங்கி திட்டம் தீட்டவும் இது பயன்பட்டது. இப்படி பல வரலாற்று தகவல்களுடன் கூடிய சில குகைகள் தற்போது சுற்றுலாத் தளமாக மாறிவிட்டன. அவற்றில் கேரள மாநிலத்தி

By Udhaya

குகை என்பது மலை அல்லது குன்றுகளின் கீழ் பகுதியில் குடைந்து அல்லது இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதர்கள் வாழும் இடமாக இருந்துள்ளது. நமக்கு தெரியும் ஆதி மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள் என்று. சில குகைகளில் விலங்குகளும் வாழ்கின்றன. இயற்கையாகவே அமைந்த ஒரு இடம் என்றால் அது மழை, வெயில் போன்ற இயற்கையின் வானிலைகளிலிருந்தும் சில சமயங்களில் உயிரினங்களை காப்பாற்றுகிறது. இப்படிப்பட்ட குகைகள் மன்னர் காலங்களில் காடுகளுக்குள் பதுங்கி இருக்க பயன்பட்டது.போர்க்காலங்களில் காடுகளுக்குள் இருக்கும் குகைகளில் தங்கி திட்டம் தீட்டவும் இது பயன்பட்டது. இப்படி பல வரலாற்று தகவல்களுடன் கூடிய சில குகைகள் தற்போது சுற்றுலாத் தளமாக மாறிவிட்டன. அவற்றில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சில குகைகளைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

எடக்கல் குகைகள்

எடக்கல் குகைகள்


சுல்தான் பத்தேரி அருகே அமைந்திருக்கும் எடக்கல் குகைகள், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவுச் சின்னமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காணப்படும் தொன்மையான சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கும் கலைப் பிரவாகமாய் திகழ்ந்து வருகிறது.

மொத்தமுள்ள குகைகள்

எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன. இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

பழமை

இவை யாவும் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாக கருதப்படுவதால் உலகம் முழுக்க உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றியலாளர்கள் கவனத்தை பெற்றுள்ளன. மேலும் இந்த குகைப் பகுதிகளில் காலை நேரங்களில் நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.

எப்படி செல்வது

சுல்தான் பத்தேரி நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த குகை. சுல்தான் பத்தேரியிலிருந்து சுங்கம் வழியாக பழைய ஜெய்ன் கோயிலை தாண்டி அரை மணி நேர பயணத்தில் இந்த குகை இருக்கும் இடத்தை அடையலாம். வாடகை வாகனங்கள் மூலம் செல்வது சிறந்தது.

Arav

விழிஞ்சம் பாறைக்குகைகள்

விழிஞ்சம் பாறைக்குகைகள்

விழிஞ்சம் எனும் கிராமத்தில் காணப்படும் இந்த பாறைக்குகைகளில் பாறைச்சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெகு சமீப காலத்தில்தான் இவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தம் அடைந்துள்ளன.

ஆன்மீகம்

இங்கு வினாந்தர தட்சணாமூர்த்தியின் சிலையைக் கொண்டுள்ள குகைக்கோயில் ஒரே பாறைக்கல்லில் குடையப்பட்டுள்ளது. இக்கோயிலின் வெளிப்புறத்தில் சிவன் மற்றும் பார்வதியின் சிற்பங்கள் முடிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன.

எப்படி எப்போது?

கோவளம் கடற்கரைப்பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விழிஞ்சம் பாறைக்குகைகள் அவசியம் பார்க்கவேண்டிய சுற்றுலா அம்சமாகும். திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை இங்குள்ள குகைக்கோயில் திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த விழிஞ்சம் பாறைக்குகைகள் அல்லது குடைவறைக்கோயில்கள் அமைந்துள்ளன.

Akhilan

தங்கல் பாறா

தங்கல் பாறா

வாகமண் மலைவாசஸ்தலத்தில் உள்ள மற்றொரு முக்கியமான அம்சம் இந்த தங்கல் பாறா எனும் இடமாகும். இது இஸ்லாமிய மார்க்கத்தினருக்கான யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள ஒரு பெரிய உருண்டை வடிவ பாறைக்கருகில் ஷீக் ஃபரிதுத்தீன் என்பவரின் சமாதி இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு வருடமும் உருஸ் திருநாளின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சமாதிஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர். உள்ளூர் நம்பிக்கைகளின்படி ஆப்கானிய சூஃபி ஞானி ஒருவர் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

அருகிலேயே ஒரு பழைய குகை ஒன்றும் காணப்படுகிறது. இக்குகைகளில் பழங்கால மூதாதையர் வசித்திருக்கலாம் என்பதாகவும் கருதப்படுகிறது. இந்த பாறைக்குகைக்கு பயணம் செய்யும்போது நாம் கற்காலத்துக்கே போய்விட்ட உணர்வு ஏற்பட்டு சிலிர்க்க வைக்கிறது.

எப்படி செல்வது

குமுளியிலிருந்து 54 கிமீ தொலைவிலும், இடுக்கி அருகிலும் அமைந்துள்ளது இந்த குகை. இது தங்கல்பாறை எனும் பொருளில் அழைக்கப்பட்டு வருகிறது. மலைப் பாதை என்பதால் குமுளியில் இருந்து 2 மணி நேரம் வரை ஆக கூடும்.

நித்யானந்தாஷ்ரம் குகைகள்

நித்யானந்தாஷ்ரம் குகைகள்

கேரளாவின் ஹோஸ்துர்க் நகரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நித்யானந்தாஷ்ரம், சுவாமி நித்யானந்தாவால் நிறுவப்பட்டது. இங்கு மொத்தம் 45 குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த குகைகள் புகழ்பெற்ற ஹோஸ்துர்கா கோட்டைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது.
நித்யானந்தாஷ்ரம் குகைகள் தியானம் செய்வதற்கு வெகுப் பொருத்தமான இடம். இதன் காரணமாக உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த குகைகளை தேடி வந்து செல்கின்றனர். இங்கு அமர்ந்திருக்கும் நிலையில் காணப்படும் சுவாமியின் பஞ்சலோக சிலை மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது.

எளிதில் அடைய

இந்த குகைகள் காசர்கோடிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நித்யானந்தாஷ்ரம் குகைகளை நீங்கள் எந்த சிரமமுமின்றி அடையலாம்.

கோட்டத்தவலம்

கோட்டத்தவலம்

குரிசுமலாவில் உள்ள முருகன் கோயிலுக்கு அருகிலேயே இந்த அற்புதமான குகை காணப்படுகிறது. கோட்டயத்தை சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த குகையை பாறைகளில் வெட்டப்பட்டிருக்கும் படிக்கட்டுகள் வழியாக சென்றடையலாம்.

நாற்காலிகள் மற்றும் இருக்கைகள் போன்று குடையப்பட்டிருக்கும் பாறைச்சிற்பங்களையும் இந்த குகையில் காணலாம். அய்யப்பன், முருகன், மதுரை மீனாட்சி மற்றும் கண்ணகி ஆகியோர் உருவங்கள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கதை

இந்த குகையின் பின்னணியில் ஒரு கதையும் வழங்கி வருகிறது. அதாவது, மதுரை ராஜகுடும்பத்தினர் பூஞ்ஜார் நோக்கிய பயணிக்கும்போது இங்கு தங்கி ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது. மலையாளத்தில் ‘கோட்டா' என்பது கோட்டையையும் ‘வலம்' என்பது உயரமான இடத்தையும் குறிக்கும். எனவே இந்த ராஜ குகைக்கு ‘கோட்டத்தவலம்' எனும் பெயர் வந்துள்ளது.

பசுமையான மலைகள் சுற்றிலும் உயர்ந்தோங்கி காட்சியளிப்பதால் இந்த குகைப்பகுதியின் அழகு ரசிக்கும்படியாக உள்ளது. வருடா வருடம் நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த குகைக்கு விஜயம் செய்கின்றனர்.

கோட்டயத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இந்த கோட்டத்தவலம் குகை அமைந்துள்ளது.

Official Site

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X