Search
  • Follow NativePlanet
Share
» »பன்னீர் மழை பொழியும் மரங்கள்?

பன்னீர் மழை பொழியும் மரங்கள்?

'பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்' என, 1965 ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் பாடல், பொதிகை மலையின் அழகு, அங்கிருந்து புறப்பட்டு வீசும் தென்றல் குறித்து இடம்பெறும் வரிகள் அவ்வளவு பிரபலம்.

அந்தளவுக்கு, அழகியலை கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்டமும்(இப்ப தென்காசி மாவட்டம்ங்), அதன் அருகே அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையையும் எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பு தோன்றாது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், முனிவர், தன் மனைவி மற்றும் சீடர்களுடன் பயணம் மேற்கொண்ட பகுதி என்ன அத்ரி மலை.

அதிசியங்கள், மர்மங்கள் நிறைந்த மலை

திருநெல்வேலி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை. இது இயற்கை எழில் சூழ்ந்த காடுகள், பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியாகத் திகழ்கிறது.

யானை, செந்நாய், சிறுத்தை, மிளா போன்ற உயிரினங்கள் நிறைந்து, தெளிந்த நீரோடைகளையும், நீர் ஊற்றுக்களையும் கொண்டு திகழும் இப்பகுதியில் இருந்து தான் தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படும் கடனா நதி உற்பத்தியாகிறது.

கடனா நதி, கருணை நதி என்றும் அழைக்கப்படுகிறது. அதிசயங்கள் பல நிரம்பிய இந்த மலைப்பகுதியை பற்றி நாம் அறிவது அவசியம்.

kadanariver1

அத்ரி மலை பெயர் காரணம்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அத்ரி முனிவர், தன் மனைவி அனுசுயா தேவி மற்றும் அவரது சீடர்களுடன் அத்ரி மலைப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, மலைப்பகுதியின் அமைதியும், இயற்கை வளங்களும் பிடித்துப் போய்விட, அங்கேயே குடில் அமைத்துச் சிறிது காலம் தங்குகிறார்.

அந்த வனப்பகுதியில், தனக்கென ஒரு இடத்தை தேர்ந்தெடுத்த அத்ரி முனிவர், அங்கு ஆக்கல், அளித்தல் ஆகிய இரண்டையும் மேற்கொள்ளும் சிவபெருமான் குறித்து தவம் செய்கிறார். அவரின் தவத்திற்கு இறங்கிய சிவபெருமான், அத்ரி முனிவர் முன் காட்சியளித்து அவருக்கு அருள்புரிகிறார்.

பின் வந்த காலத்தில் அத்ரி மகரிஷியின் சீடராகக் கருதப்படும் கோரக்கர், இவ்விடத்தில் தன் குருவான அத்ரி மகரிஷிக்கு கோவில் ஒன்றை கட்டி வணங்கினார் என்றும், அதுவே தற்போது அத்ரி மலையில் இருக்கும் கோவில் எனவும் கூறப்படுகிறது.

அத்ரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதாலும், அவருடைய கோவில் இங்கு இருப்பதாலும் இந்த மலைப்பகுதி அத்ரி மலை என்று அழைக்கப்படுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் இடம்

பசுமையான மரங்கள், அரிய மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் அகத்தியர், அத்ரி மகரிஷி, கோரக்கர், தேரையர் போன்ற முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்துள்ளார்கள்.

இன்றும் இங்குப் பல சித்தர்கள் சூட்சுமமாக வசித்து வருகிறார்கள். மிகவும் செழிப்பான இடமாக இருக்கும் இந்த மலையில் தோன்றும் நீரோடைகள், ஆறுகள் பல ஆண்டுகளாக வற்றாமல் ஓடி கொண்டிருப்பது அதிசயம்.

இங்குள்ள மலைகளிலிருந்து வரும் குளிர்ந்த தென்றல் காற்று, இங்குள்ள அற்புத மூலிகைகளின் மேல் பட்டு வீசுவதால், அந்தக் காற்று நம்மைத் தொட்டவுடன் நம் உடலில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுவதை, நீங்கள் அங்கு சென்றால் நிச்சயமாக உணர முடியும்.

யோகிகள் மற்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள மூலிகைகளைப் பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்ந்தனர் என, கூறப்படுகிறது. மருத்துவ குணமுடைய மூலிகைகள் நிறைந்து காணப்பட்டாலும், அதை அடையாளம் காணமுடிவதில்லை.

அத்ரி மகரிஷியின் சீடரான கோரக்கர் தியானம் செய்த மரம், இங்கு இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் விரைவில் தவம் சித்தியாகும் என்று நம்பப்படுகிறது.

பன்னீர் மழை பொழியும் மரங்கள்?

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், பங்குனி மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும், அமிர்தவர்ஷினி எனப்படும் மரத்திலிருந்து பன்னீர் மழை பொழியும் அதிசய நிகழ்வு நிகழ்ந்து வருகிறது.

வெப்பமான கோடை காலமாகக் கருதப்படும் இந்த மரங்களிலிருந்து இவ்வகையான மழை பொழிவது மிகவும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்தக் கோவிலின் பகுதியில் பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்து வருவதால், அவர்களின் அருளால் தான் இந்தப் பன்னீர் மழை பொழிவதாக நம்பபப்படுகிறது.

இந்த மழை பொழிவு பற்றி வனத்துறை ஆராய்ச்சி மேற்கொண்டபோது, இந்த மழைக்கு காரணம் இந்த மரத்தில் காணப்படும் சிறிய பூச்சிகள் என்று தெரிய வந்ததாகக் கூறுகிறார்கள். அந்தப் பூச்சிகள் அமிர்தவர்ஷினி மரங்களின் பட்டைகளிலிருந்து நறுமணமிக்க தண்ணீரை உறிஞ்சி மழையாகப் பொழிகின்றன என்று கூறுகிறார்கள்.

இந்த அதிசய நிகழ்வு எல்லா நாட்களிலும் நடைபெறுவதில்லை. ஒரு ஆண்டுல் ஒரே சில நாட்களில் மட்டுமே நிகழ்வதற்கான காரணத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்தப் பன்னீர் மழை பொழிவு கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள இரண்டு குறிப்பிட்ட மரங்களில் மட்டுமே நிகழ்கிறது.

இந்தச் சிறிய பூச்சிகள் எவ்வாறு பெரிய அளவிலான மழையை பொழிய செய்ய முடியும் என்பது விடை தெரியாத கேள்வியாகத்தான் இன்று வரை நீள்கிறது.

atrihills

எப்படி அடைவது

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அருகே உள்ள கடனா அணை மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை. தென்காசியில் இருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால், அங்கிருந்து மினி பஸ் கடனாநதி அணைக்கு, இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது.

அங்கிருந்து நடந்து அல்லது ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம். மறக்காம அந்த ஆட்டோ டிரைவர் நம்பரை வாங்கி கொள்ளவும்.

மலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது, போன் செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருப்பர். மலைமேல் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் அன்னதான உணவு கிடைக்கும்.

மறக்காதீங்க... காலை உணவை ஆழ்வார் குறிச்சி பகுதியில் முடிச்சுருங்க அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

ஆனால் பிளாஸ்டிக் பைகள் மலைக்குள் எடுத்து செல்ல அனுமதி கண்டிப்பாக இல்லை. எனவே பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும்.

வனத்துறையினர் வருகை பதிவேடு ஒன்று வைத்திருப்பர். அதில் பெயர் முகவரி செல்போன் எண் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும். கடனா நதி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்தால், அது வழியாக குறுக்கு பாதையை பயன்படுத்தி கொள்ளலாம்

மலைக்கு நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஏற்றமுள்ள பாதை உள்ளது. கவனம் தேவை.

அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண் பாதையாக உள்ளது. எனவே மழை காலங்களில் வழுக்கும் படியாக உள்ளது. மலை ஏற, இறங்க என மொத்தம் நான்கு மணி நேரத்தில், ஓட்டு மொத்த அழகை கண் முன்னே நிறுத்திச் செல்லும்.

மலை மேலே உள்ள பெரிய பாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

மலை ஏறி சென்றதுடன், அருள்மிகு அனுசுயா தேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர்.

கோரக்கர் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் குகை ஒன்று உள்ளது. இது பார்பதற்கே ரம்மியமாய் இருக்கும். அங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தன மழை பொழியும் என்றும் நம்பப்படுகிறது.

அத்ரி மலைக்கு சென்று வருவது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும், பலர் சுற்றுலாவாக சென்று அங்கு தங்கி அருவிகளில் குளிப்பது, கடனாநதி அணையின் அழகை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

kadanariverwesternghats1

நோட் பண்ணி வச்சுக்கோங்க...!

· காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மட்டுமே பக்தர்கள் மலையேறிக் கோயிலுக்குச் சென்று வர முடியும். கோயிலுக்கு வருகை தரும் அனைவரின் பெயரையும் வன அதிகாரிகள் சோதனை சாவடியில் குறித்துக்கொள்வார்கள்.

· வனப்பாதைகள் வழியாகச் செல்ல வேண்டும் என்பதால், தனியாகச் செல்வதை தவிர்த்துச் சிறு சிறு குழுக்களாகச் செல்ல வேண்டும். புதிதாகச் செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்தவர்களைப் பின்பற்றிச் சென்று வருவது நன்மை பயக்கும்.

· மலையேறும்போது ஆழ்ந்த தாவரங்கள், கரடு முரடான பாதைகள், முட்கள் மற்றும் கற்கள் நிறைந்த வழியாக நடக்க வேண்டியிருக்கும் என்பதால், அதற்குத் தகுந்த உடைகளையும், பாதணிகளையும் அணிந்து செல்வது நல்லது.

· இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள், கேமராக்கள், வெடி பொருட்கள், மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

· மலையேற்றத்தின்போது ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்துகொள்ள ஒரு அடிப்படை முதலுதவி பெட்டி மற்றும் அடிப்படை மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.

நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீத்தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரிலிருந்து, மேற்கே சுமார் 12 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ள கடனா நதி அணைக்கட்டிற்கு வந்து, அங்கிருந்து வனத்துறை அனுமதி பெற்று, அணையின் வழியாகச் சுமார் மூன்று மணிநேர நடைப்பயணத்தில் அத்ரி மலையில் உள்ள இந்தக் கோவிலுக்கு செல்லலாம்.

அருகிலுள்ள பகுதிகள்

ஆழ்வார்க்குறிச்சி ஆறு - 23min(11.7km)

டிவிகே குளம் - 43min (19.8km)

பழைய குற்றாலம் - 50min(28.3km)

தலையணை - 45min(20.4km)

அகஸ்தியர் அருவி - 53min (21.1km)

மலையேற்ற பாதியிலேயே, நீங்கள் கடனா நதியைக் காண முடியும். தெளிந்த நீரோடையாக ஓடும் இந்த நதிக்குள் துள்ளி விளையாடும் மீன்களையும், ஆற்றுக்குள் கிடைக்கும் கூழாங்கற்களையும் தெளிவாகப் பார்க்க முடியும்.

ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, மீதி மலையேற்றத்தை துவங்கினால் உடம்பு புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயற்கையோடு ஒரு நாள் இணைந்து தான் பாருங்களேன். வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் உங்கள் நினைவில் அவ்வவ்போது வந்து செல்லும்.

More News

    Read more about: athiri hills western ghats
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+