Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு அருகில் இத்தனை அழகான தீவுகளா – பெஸ்ட் ஒரு நாள் பிக்னிக் ஐடியாஸ்!

சென்னைக்கு அருகில் இத்தனை அழகான தீவுகளா – பெஸ்ட் ஒரு நாள் பிக்னிக் ஐடியாஸ்!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமான சிங்கார சென்னையில் பொழதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளன என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். எப்பொழுதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் இந்த நகரத்தில் மால்கள், தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், பாரம்பரிய கோவில்கள், வரலாற்றுச் சின்னங்கள், கடற்கரைகள், ஹோட்டல்கள் என பொழுதை கழிக்க பல்வேறு சாய்ஸ்கள் இருக்கின்றன.

ஆனால் இந்த பிசியான சிட்டியில் இருக்கும் அனைத்து இடங்களுமே மிகவும் கூட்ட நெரிசலோடு தான் இருக்கும், ஆனால் எந்நேரமும் கும்பலோடு கும்பலாக நாம் சுற்றினாலும், சில நேரம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து மனதிற்கு நெருக்கமானவர்களுடன் பேசி பொழுதைக் கழிப்பது இதமாக இருக்கும். அதற்கு ஏற்றார்போல் சென்னையில் சில அமைதியான இடங்களும் - அவைகள் இந்த சிறு சிறு தீவுகள். ஆம்! சென்னையைச் சுற்றி சில அழகான தீவுகள் இருக்கின்றன. ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இந்த இடங்கள் தான் பெஸ்ட் சாய்ஸ். மறைந்து கிடக்கும் இந்த ரகசியங்கள் எங்கே இருக்கின்றன? அங்கே அப்படி செல்வது என்பதை கீழே காண்போம் வாருங்கள்!

இருக்கம் தீவு

இருக்கம் தீவு

பல ஆண்டுகளாக, சென்னையைச் சுற்றியுள்ள சில இடங்கள் அதன் இயற்கை அழகுக்காக மிகவும் பிரபலமாக உள்ளன. மலைகள் முதல் பள்ளத்தாக்குகள், கோட்டைகள் முதல் கோயில்கள், நினைவுச்சின்னங்கள் முதல் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் கடற்கரைகள் முதல் தீவுகள் வரை அனைத்து வகையான சுற்றுலா தலங்களையும் சென்னை கொண்டுள்ளது. அவற்றில் முதல் தீவு இந்த இருக்கம் தீவு, இது ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இந்த அழகிய தீவு சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் புலிகாட் ஏரியின் நடுவே அமைந்துள்ளது.

பல அரிய உயிர்களைக் கொண்டிருக்கும் இந்த புலிகாட் தீவில் நிழலில் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலே போதும். மனசு லேசாக மாறிவிடும். நகர்ப்புற வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சின்ன பிரேக் எடுக்க நினைக்கும் பயணிகளிடையே இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஒரு புது இடத்திற்கு சென்று நண்பர்கள், குடும்பம் குழந்தைகளுடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இது ஒரு அருமையான ஸ்பாட் ஆகும்.

க்விபிள் தீவு

க்விபிள் தீவு

சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் அமைந்துள்ள க்விபிள் தீவு (Quibble island), சால்ட் வாட்டர் லகூன்களில் உருவான நான்கு சிறிய தீவுகளில் மிகப்பெரியது ஆகும். தீவின் நடுவே அமைந்துள்ள பெரிய ஐரோப்பிய கல்லறையாலே தான் இந்த தீவு பேமஸ் ஆனது என்று கூறலாம். பிரெஞ்சு தலைமையிலான இந்தியப் படைகளுக்கும் நவாப் படைகளுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு இந்த கல்லறை இங்கு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

மெரினா கடற்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவை மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளில் இருந்து எளிதில் அணுகலாம். இந்த அமைதியான இடத்தில் அமர்ந்து, கரையோரங்களில் மோதும் அலைகளின் இனிமையான ஒலியில் சற்றே இளைப்பாறலாம்.

திமிங்கல தீவு

திமிங்கல தீவு

திமிங்கல தீவு சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்கு ஒரு போட்டிங் கிளப்பும் செயல்படுகிறது. ஆற்றில் நீர் மட்டம் நன்றாக இருக்கும் போதெல்லாம், அந்த போட் கிளப்பின் சார்பில் இங்கு போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. அடையாறு பாலத்திற்கு அப்பால் உள்ள ஆறு தெளிவாக தெரிவதுடன், சீசன் காலத்தில் பல புலம்பெயர் பறவைகளளையும் நாம் இங்கே காணலாம்.

இங்கு சென்று வந்தவர்கள் 'இந்த தீவில் படகோட்டி செல்வது, மனதில் உள்ள குழப்பங்களை சரி செய்து ஒரு வித தியான மனநிலையை தருகிறது' என்று சொல்கிறார்கள். நீங்களும் ஏன் செல்லக் கூடாது?

ஆலம்பாறை தீவு

ஆலம்பாறை தீவு

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த ஆலம்பாறை கோட்டை துறைமுகமாக செயல்பட்டது. சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் அமைந்து சிறு சிறு தீவுகளை உருவாக்கியுள்ளது.

ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து இ.சி.ஆர் சாலையில் புறப்பட்டால் ஒன்றரை மணி நேரத்தில் ஆலம்பாறை கோட்டை இருக்கும் இடைக்கழிநாடை அடைந்து விடலாம். இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை சுற்றி பார்த்ததோடு சிறு சிறு தீவுகளிலும் நாம் விளையாடி மகிழலாம்.

ஆகவே இப்போதே பிளான் பண்ணுங்கள், இந்த வார இறுதியில் எந்த தீவிற்கு செல்லலாம் என்று!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X